“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று (நவம்பர் 3) தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அனைத்துக் கட்சிகளும் 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. இந்த தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் புது வரவாக அரசியல் களம் காண்கிறது.
கடந்த வாரம் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டில் தனது கட்சியின் கொள்கையை விஜய் அறிவித்தார். அப்போது, பாஜக ஐடியலாஜிக்கல் எதிரி என்றும் திமுக அரசியல் எதிரி என்றும் தெரிவித்தார்.
குறிப்பாக தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிக்கு வந்தால் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியதிகாரத்தில் பங்களிக்கப்படும் என்று விஜய் பேசியிருந்தது அரசியல் வட்டாரத்தில் மிக முக்கியமான ஒரு விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் விஜய்யின் இந்த அறிவிப்பை வரவேற்றிருந்தனர். அதேவேளையில், இந்த கோரிக்கையை நீண்டகாலமாக எழுப்பி வந்த விசிக தலைவர் திருமாவளவன், ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் பேசியிருப்பது பண்டிகை கால ஆஃபர் போல இருக்கிறது என்று கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தார்.
“பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே”
— Dr S RAMADOSS (@drramadoss) November 3, 2024
இந்தநிலையில், “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்ற நன்னூல் பாடல் வரிகளைக் குறிப்பிட்டு பழைய கட்சிகளோடு சேர்த்து புதியவற்றையும் நாம் வரவேற்க வேண்டும் என்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை குறிப்பிடாமல் ராமதாஸ் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் என்று பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பாமக தேர்தலை எதிர்கொண்டது. இந்தநிலையில், 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக பாஜகவுடன் இணைந்தே தேர்தலை சந்திக்குமா அல்லது கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சுங்கச்சாவடி கட்டணம்… வீட்டுக்குள் முடங்கும் நாள் வரலாம் – வில்சன் வார்னிங்!
தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 26 முக்கிய தீர்மானங்கள் என்னென்ன? – முழு விவரம்!