டெஸ்ட் கிரிக்கெட்… இந்தியாவை வாஷ்அவுட் செய்த நியூசிலாந்து

Published On:

| By Minnambalam Login1

new zealand scripts history

மும்பையில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில், இந்தியாவை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைபற்றி வரலாறு படைத்துள்ளது.

கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாட நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்தது.

பெங்களூருவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை நியூசிலாந்து அணி 8  விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. புனேவில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா நியூசிலாந்து அணியிடம் தோற்றது.

இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் நவம்பர் 1ஆம் தேதி மூன்றாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸை வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. சிறப்பாக பந்துவீசிய இந்திய வீரர்களான ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்த, மற்றொரு வீரரான வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

கிளன் பிலிப்ஸ் பந்தில் ஆட்டமிழக்கும் ஆகாஷ் தீப்

இதனை அடுத்துக் களமிறங்கிய இந்திய அணி 263 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஷுப்மன் கில் 146 பந்துகளில் 90 ரன்கள் எடுத்தும், ரிஷப் பந்த் 59 பந்துகளில் 60 ரன்கள் எடுத்துச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

நியூசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில், ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 174 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஜடேஜா இந்த இன்னிங்ஸிலும் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்த நிலையில், 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கியது. ஆனால், இந்தியாவின் முதல் நான்கு வீரர்கள் சொற்ப  ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள்.

இதற்குப் பின் களமிறங்கிய ரிஷப் பந்த் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால், எதிர்முனையில் மற்ற இந்திய வீரர்கள் ரன்கள் எடுக்க முடியாமல் தடுமாறினர். இதனால் 121 ரன்கள் எடுத்த நிலையில் ஆல் அவுட் ஆனது இந்தியா.

கடந்த 90 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய எந்த அணியும் இந்தியாவை அதன் சொந்த மண்ணில், மூன்று அல்லது அதற்கு மேல் போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டித் தொடரில் அனைத்து போட்டிகளிலும் வென்றதில்லை.

தற்போது இந்தியாவை 3-0 என்ற கணக்கில் இந்தியாவை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது நியூசிலாந்து அணி.

அப்துல் ரஹ்மான்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

சுங்கச்சாவடி கட்டணம்… வீட்டுக்குள் முடங்கும் நாள் வரலாம் – வில்சன் வார்னிங்!

தவெக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட 26 முக்கிய தீர்மானங்கள் என்னென்ன? – முழு விவரம்!

யோகி ஆதித்யநாத்துக்கு கொலை மிரட்டல் : பெண் கைது!