2026 சட்டமன்றத் தேர்தல் பணிகளை முடக்கும் வகையில் நடைபெறும் சோதனைகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஊரக உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சீனியர் அமைச்சர் ஐ.பெரியசாமியின் வீடு உள்ளிட்ட இடங்களில் இன்று (ஆகஸ்ட் 16) காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்த சோதனைகளை அமலாக்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
2006-2011-ம் ஆண்டு காலத்தில் வீட்டு வசதித் துறை அமைச்சராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக அமைச்சர் ஐ.பெரியசாமி மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்ற விசாரணையில் உள்ளது. இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக கூறப்படுகிறது.
இந்த சோதனை தொடர்பாக அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு நெருக்கமான வட்டாரங்களில் நாம் பேசிய போது, “சென்னையில் இருந்து திண்டுக்கல்லுக்கு இன்று காலையில தான் அமைச்சர் வந்தார். ஏற்கனவே உடல்நலன் பாதிப்பு இருந்ததால் ஓய்வில் இருந்தார். அப்போதுதான் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்த தகவலை அவரிடம் சொன்னோம்.
வீட்டுக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் சகஜமாகத்தான் அமைச்சர் ஐபி பேசினார். அப்போது, “இந்த ரெய்டு எதிர்பார்த்ததுதான்.. தென் மண்டலத்தில் கட்சிப் பணிகளை சிறப்பாக செய்து திமுகவை வலிமையாக வெச்சிருக்கோம்.. சட்டமன்ற தேர்தல் வரும் நேரத்தில் இப்படி ரெய்டுன்னு வந்துருக்கீங்க.. எங்களோட தேர்தல் வேலையை எப்படியாவது முடக்கிடனும்னுதான் இந்த சோதனையை நடத்துறீங்க.. ஆனால் முன்னாடியைவிட இன்னும் வேகமாக- ஆக்டிவ்வாகத்தான் செயல்படுவேன்.. முடங்கி எல்லாம் போகமாட்டேன்.. நீங்க என்ன செய்யனுமோ செய்யலாம்” என சொல்லிவிட்டார் அமைச்சர் ஐபி. இதனையடுத்து ஐபி வீட்டில் அங்குலம் அங்குலமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்” என்கின்றன.