திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதைக் கண்டித்து திமுகவினர் போராட்டம் நடத்தினர். அப்போது திமுகவினருக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வான ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பழனி சுப்புரத்தினம் வருகை தந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
1991-ம் ஆண்டு பழனி சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் சுப்புரத்தினம். தற்போது அதிமுகவின் ஓபிஎஸ் அணியில் இருந்து வருகிறார். ஓபிஎஸ் தொடர்பான வழக்குகளையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இன்று திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சீனியர் அமைச்சர் ஐ.பெரியசாமியின் திண்டுக்கல் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். மேலும், சென்னை,திண்டுக்கல், வத்தலகுண்டு உள்ளிட்ட இடங்களில் ஐ.பெரியசாமி, அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் எம்.எல்.ஏ. மகள் இந்திரா ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறையின் இந்த சோதனை நடைபெற்றது.
அமலாக்கத்துறையினர் இந்த சோதனையைக் கண்டித்து திண்டுக்கல்லில் ஐ.பெரியசாமி வீடு முன்பு திரண்ட திமுகவினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். திமுகவினர் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது, அதிமுக ஓபிஎஸ் அணியின் பழனி முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினமும் அங்கு வந்தார். திமுக நிர்வாகிகளுடன் இணைந்து ஐ.பெரியசாமி வீடு முன்பாக போடப்பட்டிருந்த மேஜையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் அணி வெளியேறிவிட்டது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவருமான முதல்வருமான மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்து பேசினார். 2026 சட்டமன்ற தேர்தலில் ஓபிஎஸ் அணி, திமுக கூட்டணியில் இடம் பெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஓபிஎஸ் அணியின் முன்னாள் எம்.எல்.ஏ பழனி சுப்புரத்தினம், திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஆதரவாக திமுகவினருடன் இணைந்து நின்றது பேசுபொருளாகி இருக்கிறது.