சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள நடிகரும் தயாரிப்பாளருமான துல்கர் சல்மான் வீட்டில் இன்று (அக்டோபர் 8) காலை முதல் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான், மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார்.
மேலும் தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் ஏராளமான திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். சமீபத்தில் இவர் தயாரித்த “லோகா சாப்டர் 1” என்ற திரைப்படம் வெளியாகி உலகளவில் ரூ. 300 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.
இந்த வெற்றியை கொண்டாடுவதற்குள் ’ஆபரேஷன் நும்கூர்’ என்ற பெயரில் பூடானில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள் இருப்பதாக கூறி கடந்த மாதம் கொச்சியில் உள்ள துல்கர் சல்மான் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அவரது 2 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார் துல்கர்.
இந்த நிலையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள துல்கர் சல்மானிற்கு சொந்தமான வீட்டில் 6 அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அவரது தயாரிப்பு நிறுவன அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.
பூடானில் இருந்து சொகுசு கார்கள் இறக்குமதி செய்யப்பட்ட விவகாரத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் சோதனை நடத்தி வருவதாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.