அமலாக்கத்துறையின் விசாரணையை தொடர்ந்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அம்மாநிலத்தின் புதிய முதல்வரை ஜேஎம்எம் கட்சி இன்று (ஜனவரி 31) உடனடியாக அறிவித்துள்ளது.
நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை தொடர்ந்து சம்மன் அனுப்பி வந்த நிலையில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தவிர்த்து வந்தார்.
இதனால் நேற்று முன்தினம் அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது. அப்போது அவர் இல்லாததை அடுத்து ‘ஹேமந்த் சோரனை காணவில்லை என்று அறிவித்தனர்.
இதனையடுத்து நேற்று ராஞ்சி திரும்பிய சோரன், முதல்வர் மாளிகையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆளும் கூட்டணியின் எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து சோரனின் வீட்டிற்கு சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர். அதன்பின்னர் இரவு 8 மணியளவில் சோரன் விசாரணை செய்த அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் ராஜ்பவன் மாளிகைக்கு சென்றார். அங்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.
இதற்கிடையே ஜார்க்கண்டின் புதிய முதல்வராக அம்மாநிலத்தின் போக்குவரத்து துறை அமைச்சர் சம்பாய் சோரனை ஜேஎம்எம் கட்சி அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது.
ஏற்கெனவே எதிர்கட்சிகள் ஒன்றிணைந்த இந்தியா கூட்டணியில் அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது அதில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவரும், முதல்வருமான ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையின் விசாரணையில் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சண்டிகர் மேயர் தேர்தல்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!
டிஜிட்டல் திண்ணை: வேலுமணியின் மெகா டீல்… தனிமைப்படுத்தப்படும் அண்ணாமலை?