வைஃபை ஆன் செய்ததும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பதி சென்று சாமிதரிசனம் செய்த காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன. velumani mega deal annamalai will be isolated
அதைப் பார்த்துவிட்டு வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது,
”எடப்பாடி சமீப காலமாக கொஞ்சம் டென்ஷனோடுதான் இருந்தார். தான் நினைத்த சில விஷயங்கள் முடிய வேண்டுமே என்ற டென்ஷன் தான் அது. அதாவது, அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்கனவே இருந்த கட்சிகள் மீண்டும் அணிவகுப்பார்களா என்ற விவாதம் அரசியல் அரங்கில் நீடித்து வருகிறது.
ஆனால் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் தலைமைக் கழக செயலாளருமான எஸ்.பி.வேலுமணி மேற்கொண்ட நீண்டதொரு தொடர் முயற்சியால், அதிமுக தலைமையிலான கூட்டணி விவகாரத்தில் முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளது. இதையடுத்துதான் திருப்தியோடு எடப்பாடி பழனிசாமி திருப்பதி சென்று வந்துள்ளார் என்கிறார்கள் கொங்கு அதிமுக வட்டாரங்களில்.
அப்படி என்ன முயற்சி? அதில் என்ன முதல் கட்ட வெற்றி?
ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இருந்தபோது பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகள் இருந்தன. கடந்த செப்டம்பரில் அதிமுக தேஜகூவில் இருந்து விலகிய நிலையில்… பிற கட்சித் தலைவர்கள் எந்த முடிவும் எடுக்காமல் இருந்தனர், இன்னும் சொல்லப் போனால் ஜனவரி மாதம் பிரதமர் மோடி தமிழகம் வந்த நிலையில் ஜி.கே.வாசன் உள்ளிட்ட இந்த கட்சிகளின் தலைவர்கள் மோடியை வரவேற்கச் சென்றனர். அதனால் இவர்கள் அதிமுக கூட்டணியில் இருப்பார்களா, பாஜக கூட்டணியில் இருப்பார்களா என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில்தான்… கடந்த ஓரிரு வாரங்களாக எஸ்.பி. வேலுமணி மேற்குறிப்பிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களை ரகசியமாக சந்தித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, சுதீஷ், ஜான் பாண்டியன், டாக்டர் கிருஷ்ணசாமி, ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோரை பொங்கலுக்கு பிறகு அவர்கள் சொல்லும் இடத்தில் எடப்பாடியின் தூதராக வேலுமணி தனிப்பட்ட முறையில் சந்தித்துள்ளார்.
’பாஜக அணிக்கு செல்வதால் உங்களுக்கு என்ன பிரயோஜனம்? வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான அணிக்கும் திமுக தலைமையிலான அணிக்கும் இடையில்தான் போட்டி. எனவே சட்டமன்றத் தேர்தலில் உங்களுக்கான வெற்றியை உறுதிப்படுத்த நீங்கள் அதிமுக கூட்டணியில் இருக்க வேண்டும்.
எவ்வளவு செலவானாலும் பார்த்துக் கொள்கிறோம். தேர்தல் செலவையும் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் எங்களுடன் நின்றால் போதும் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்‘ என்று மிகப்பெரிய டீல் பேசியிருக்கிறார் வேலுமணி. அதாவது வர இருக்கிற சட்டமன்றத் தேர்தலுக்கும் சேர்த்தே வேலுமணியின் டீல் அமைந்திருக்கிறது.
அதிமுகவை கடுமையான வார்த்தைகளால் தொடர்ந்து தாக்கி வருகிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதனால்தான் அதிமுகவே கூட்டணியை விட்டு வெளியே வந்தது. இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியை வலிமைப்படுத்தி, பாஜக கூட்டணிக்கு எந்த கட்சியும் போகாமல் அண்ணாமலையை தனிமைப்படுத்த வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் திட்டம். இதை செயல்படுத்தும் பொறுப்பைத்தான் வேலுமணியிடம் ஒப்படைத்தார்.
அதன் அடிப்படையில்தான் இந்த தலைவர்களை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார் வேலுமணி. இதற்கு ஏ.சி. சண்முகம் தவிர மற்ற அனைவருமே முதல் கட்ட ஒ.கே. சொல்லிவிட்டதாக தெரிகிறது. இந்த தகவல்களை எல்லாம் உறுதிப்படுத்திக் கொண்டுதான் திருப்பதிக்கு சென்று திருப்தியாக சாமி கும்பிட்டு வந்திருக்கிறார் எடப்பாடி.
அதிமுகவோடு இருந்த கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்ல… மாநிலம் முழுதும் உள்ள முஸ்லிம் அமைப்புகள், கிறிஸ்துவ அமைப்புகள், தலித் அமைப்புகளையும் வேலுமணி டீம் ஒருங்கிணைத்து அவர்களுக்கு தேவையானதை செய்யத் தொடங்கிவிட்டது. திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் வந்தால் அது போனஸ், ஏற்கனவே அதிமுகவோடு கூட்டு வைத்திருந்த கட்சிகளை அதிமுக அணிக்குக் கொண்டுவரவே வேலுமணி முன்னுரிமை கொடுத்து தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதில் முதல் கட்ட வெற்றி கிடைத்திருப்பதாக அதிமுக தலைமையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இதை முழு வெற்றியாக்க அதிமுகவால் முடியுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகள்…: அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!
’சிஏஏ சட்டத்தை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது’ : எடப்பாடி
velumani mega deal annamalai will be isolated