சண்டிகர் மேயர் தேர்தல்: தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

Published On:

| By christopher

சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வெற்றிக்கு இடைக்கால தடை விதிக்க பஞ்சாப்-ஹரியானா உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து டெல்லி பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி இன்று (ஜனவரி 31) அறிவித்துள்ளது.

சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் நேற்று நடந்த குளறுபடியால் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

8 ஓட்டுகள் செல்லாது!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மேயர் தேர்தலில் முதன்முறையாக இந்தியா கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸும் ஆம் ஆத்மி கட்சியும் இணைந்து பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்டன.

இந்நிலையில் மேயர் தேர்தலில் மொத்தம் 36 வாக்குகள் பதிவாகின. இதில் இந்தியா கூட்டணிக்கு 20 வாக்குகள் விழுந்தன. எனினும் அதில் 8 வாக்குகளை தேர்தல் அதிகாரி செல்லாதவையாக அறிவித்ததால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் தோல்வி அடைந்தார்.

இதற்கு ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இடைக்கால தடை விதிக்க மறுப்பு!

மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணியின் 8 வாக்குகள் செல்லாது  என அறிவிக்கப்பட்டதை எதிர்த்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மனுதாக்கல் செய்தது.

அந்த மனு அவசர வழக்காக இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், சண்டிகர் மாநகராட்சி மேயர் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு இடைக்கால தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

மேலும் இச்சம்பவம் குறித்து சண்டிகர் மாநகராட்சி நிர்வாகம் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகம் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

போராட்டம் அறிவிப்பு!

இந்த தீர்ப்பினால் அதிருப்தி அடைந்த நிலையில், சண்டிகர் மேயர் தேர்தல் முறைகேட்டை கண்டித்து வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தவுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி இன்று அறிவித்துள்ளது.

டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

’சிஏஏ சட்டத்தை அதிமுக ஒருபோதும் அனுமதிக்காது’ : எடப்பாடி

கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகள்…: அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel