பீகார் சட்டமன்றத் தேர்தலின் அனல் பறக்கும் பிரச்சாரக் களத்தில், பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கள் (EC to Ban Modi’s Campaign) சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளன. அக்டோபர் 30, 2025 அன்று சப்ராவில் நடந்த தேர்தல் பொதுக்கூட்டத்தில், தமிழ் மக்கள் மீதும், தமிழ்நாடு குறித்தும் பிரதமர் மோடி வெளியிட்ட கருத்துக்கள் “மொழி ரீதியான வெறுப்புப் பேச்சு” என தேர்தல் ஆணையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த அருள்துரை தினகரன் என்பவர், பிரதமர் மோடிக்கு எதிராக இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளார். அதில், தேர்தல் நடத்தை விதிகளை (MCC) மீறி, பல்வேறு சமயங்களில் வெறுப்புப் பேச்சுகளைப் பிரதமர் மோடி பேசியுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
சப்ரா கூட்டத்தில் சர்ச்சை பேச்சு
:
அக்டோபர் 30, 2025 அன்று பீகாரின் சப்ராவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில், பிரதமர் மோடி, “கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் காங்கிரஸ் தலைவர்கள் பீகார் மக்களைத் தவறாகப் பேசுகிறார்கள், அவர்களின் கூட்டணிக் கட்சியான திமுகவும் தமிழ்நாட்டில் பீகார் மக்களைத் தவறாகப் பேசுகிறது. இந்தத் தேர்தல்களில், தங்கள் மாநிலங்களில் பீகார் மக்களைத் தவறாகப் பேசிய தலைவர்கள், ‘இந்தியா’ கூட்டணிக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய அழைக்கப்பட்டுள்ளனர்” என்று பேசியுள்ளார். இந்த கருத்து, இரு மாநில மக்களிடையேயும் வெறுப்பையும் பிளவையும் உருவாக்கும் வகையில் அமைந்துள்ளதாகப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புகார்தாரர் அருள்துரை தினகரன் தனது மனுவில், பிரதமர் மோடி வேண்டுமென்றே இத்தகைய பொய்யான அறிக்கைகளை வெளியிட்டு, தமிழ்நாட்டு மக்களுக்கும் பீகார் மக்களுக்கும் இடையே வெறுப்பைத் தூண்டியுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார். பீகாரைச் சேர்ந்த எவரும் தமிழ்நாட்டில் தமிழர்களால் எந்த வகையிலும் துன்புறுத்தப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஆகஸ்ட் 27, 2025 அன்று பீகாரின் தர்பங்காவில் நடைபெற்ற ‘அதிகார் யாத்திரா’ பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று ராகுல் காந்திக்கு ஆதரவாகப் பேசியதை, பிரதமர் மோடி தவறாக இணைத்துப் பேசியுள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகள் மீறல்
தேர்தல் ஆணையத்தின் அக்டோபர் 6, 2025 தேதியிட்ட தேர்தல் நடத்தை விதிகள் (437/6/1/INST/ECI/FUNCT/MCC/2025) மற்றும் ஜனவரி 2, 2024 தேதியிட்ட அறிவுறுத்தல் (437/6/INST/ECI/FUNCT/MCC/2025) ஆகியவற்றின் 6-வது துணை விதி, “சாதி, சமூகம், மதம் அல்லது மொழி அடிப்படையிலான குழுக்களிடையே ஏற்கனவே உள்ள வேறுபாடுகளை அதிகரிக்கும், பரஸ்பர வெறுப்பை உருவாக்கும் அல்லது பதற்றத்தை ஏற்படுத்தும் எந்தச் செயலும் மேற்கொள்ளப்படக் கூடாது” என்று தெளிவாகக் கூறுகிறது.
பிரதமர் மோடியின் பேச்சு இந்த விதியை வெளிப்படையாக மீறியுள்ளதாகப் புகார்தாரர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகாரில், பிரதமர் மோடியின் சப்ரா பேச்சு மட்டுமல்லாது, அவர் ஏற்கனவே இருமுறை தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது:
சேலம் பொதுக்கூட்டம் (மார்ச் 29, 2024):
2024 மக்களவைத் தேர்தலின் போது, மார்ச் 29, 2024 அன்று சேலம், காஜல்நாயக்கன்பட்டியில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில், பிரதமர் மோடி “மதரீதியான வெறுப்பைத் தூண்டும் வகையில்” பேசினார் எனப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி ‘இந்தியா’ கூட்டணியை ‘இந்து மதத்தை அவமதிப்பதாக’ கடுமையாக விமர்சித்திருந்தார்.
பூரி ஜெகநாதர் கோயில் சாவி விவகாரம் (மே 21, 2024):
ஒடிசாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மே 21, 2024 அன்று பிரதமர் மோடி, பூரி ஜெகநாதர் கோயிலின் ரத்ன பண்டாரின் (கருவூலம்) காணாமல் போன சாவிகள் “தமிழ்நாட்டிற்குச் சென்றுவிட்டன” என்று வேண்டுமென்றே பொய்யான அறிக்கையை வெளியிட்டார் எனவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஒடிசா முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய, தமிழகத்தைச் சேர்ந்த வி.கே. பாண்டியனை மறைமுகமாகத் தாக்கும் நோக்கில் அமைந்ததாக விமர்சிக்கப்பட்டது.
மோடிக்கு தடை விதிக்க கோரிக்கை
பிரதமர் மோடியின் இந்த தொடர்ச்சியான நடத்தை விதி மீறல்களைக் கருத்தில்கொண்டு, அவரது கட்சிக்கு வழங்கப்பட்ட தேசியக் கட்சி அங்கீகாரத்தை ரத்து செய்யக் கோரியும், பீகார் தேர்தல் முடியும் வரை அவர் எந்தத் தேர்தல் பிரச்சாரத்திலும் பங்கேற்கத் தடை விதிக்கக் கோரியும் தேர்தல் ஆணையத்திடம் புகார்தாரர் கோரிக்கை விடுத்துள்ளார். மோடியின் முழுப் பேச்சும் அடங்கிய குறுந்தகடு ஒன்றையும், பா.ஜ.க-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இந்தப் பேச்சு வெளியிடப்பட்டதற்கான ஆதாரத்தையும் அவர் தனது புகாருடன் இணைத்துள்ளார்.
பீகார் சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நவம்பர் 6 மற்றும் 11 தேதிகளில் நடைபெறவுள்ள நிலையில், இத்தகைய புகார்கள் அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
