காஞ்சிபுரம் டிஎஸ்பி தப்பி ஓடவில்லை அவர், கழிவறைக்கு சென்றிருந்தார் என்று காவல்துறை விளக்கமளித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பூசிவாக்கம் பகுதியில் சிமெண்ட் முருகன் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக முருகன் காஞ்சிபுரம் காவல் நிலையத்தில், எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க புகார் அளித்தார்.
ஆனால் ஒரு மாத காலம் ஆகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் முருகன் தரப்பில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கு காஞ்சிபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி செம்மல் முன்பு இன்று (செப்டம்பர் 8)விசாரணைக்கு வந்தது.
அப்போது புகாரின் தீவிரத் தன்மை குறித்தும் ஒரு மாத காலமாகியும் நடவடிக்கை எடுக்காததற்கும் நீதிபதி கவலை தெரிவித்தார்.
இன்றைய விசாரணையின் போது, புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய பொறுப்பு காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷுக்கு உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த நிலையில் புகார் மீது வேண்டுமென்றே நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதாக தெரிவித்த நீதிபதி செம்மல், டிஎஸ்பி சங்கர் கணேசை உடனடியாக கைது செய்து செப்டம்பர் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தார்.
இதையடுத்து டிஎஸ்பி-ஐ சிறையில் அடைக்க அழைத்துச் செல்ல முற்பட்டபோது நீதிமன்றத்தில் அதிகளவு கூட்டம் கூடியதால், நீதிபதி வாகனத்திலேயே அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்தநிலையில் டிஎஸ்பி சங்கர் கணேஷ், காவல்துறையினர் உதவியுடன் நீதிபதி வாகனத்தில் இருந்து காவல் தறையினர் வாகனத்தில் ஏறி தப்பிவிட்டதாக தகவல்கள் வந்தன.
ஆனால் 30 நிமிடங்களுக்கு பின் டிஎஸ்பி சங்கர் கணேஷ் கிளை சிறைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்த நிலையில் டிஎஸ்பி தப்பி ஓடவில்லை என்றும் அவர் கழிவறைக்கு சென்றதாகவும் காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்தில் காவல்துறை சீருடையில் டிஎஸ்பி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.