‘வாட் ப்ரோ.. அடக்கி வாசிங்க ப்ரோ’ என தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜய்யை கண்டிக்கும் வகையில் திமுக இளைஞரணி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் மாநாட்டில் பேசிய விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
முதல்வர் ஸ்டாலினை விமர்சித்து, “அங்கிள், அங்கிள் உங்களுக்கு மனசாட்சி இருந்தால் இதற்கு பதில் சொல்லுங்கள். உங்கள் ஆட்சியில் நேர்மை நியாயம் இருக்கா… ஊழல் இல்லாமல் இருக்கா.. பெண்கள் பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்கா, சட்டம் ஒழுங்கு சரியாக இருக்கா , இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கா… சொல்லுங்க மை டியர் அங்கிள்..”என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசினார் விஜய்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அங்கிள் என விஜய் பேசியதற்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் விஜய்யின் தவெக மாநில மாநாடு நடந்த மதுரையில் அவரை கண்டிக்கும் வகையில் மதுரை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், “வாட் ப்ரோ.. ஓவர் ப்ரோ.. அடக்கி வாசிங்க ப்ரோ” என்று எழுதப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டாகி வருகிறது.