2026 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவற்றுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் போராட்ட வீரர்கள் மருது சகோதரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நேற்று (அக்டோபர் 24) அவர்களது சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை, 2026 சட்டமன்றத் தேர்தலில் 2006-ஆம் ஆண்டு விஜயகாந்த் ஏற்படுத்திய தாக்கம் போன்றே இருக்கும் என்று நான் நம்புகிறேன். இது தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளின் வாய்ப்புகளையும் பாதிக்கும்.
விஜய் ஒரு கூட்டணியை அமைத்து, அதற்குத் தலைமை தாங்குவார் என்று நான் நம்புகிறேன். இதன் காரணமாக, தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனைப் போட்டி உருவாகும்.
2026 சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) மற்றும் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஆகியவற்றுக்கு இடையே கடுமையான போட்டி இருக்கும்..
இந்த ஆண்டின் இறுதியில் கூட்டணி குறித்து தெரிவிப்போம். எங்கள் கூட்டணிதான் வெற்றி பெறும். விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும் என்றுதான் கூறினேன். விஜய் கூட்டணிக்கு செல்வோம் என்று நான் சொல்லவில்லை.
அரசியலில் அனுபவத்தைவிட, மக்கள் யாரை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். அரசு சரியாக செயல்பட்டால் அதை வரவேற்பதும், சரியாகச் செயல்படவில்லை என்றால் எதிர்த்துக் குரல் கொடுப்பதும் எங்களது கொள்கை.
டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் துயரத்தில் இருக்கும் விவசாயிகளுக்க தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.
எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம் வந்துவிட்டது!
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி குறித்து பேசுகையில், “அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தனித்துப் போட்டியிட்டு வெல்ல முடியாது என்ற அச்சம் வந்துவிட்டது. எனவே, விஜய்யின் பிரபலத்தைத் தனக்குச் சாதகமாக்கிக் கொள்ள அவர் முயற்சிக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியின் மாநிலம் தழுவிய பிரச்சாரத்தின்போது, அதிமுக தொண்டர்களே தவெக கொடிகளை அசைத்து, அதிமுக – தவெக கூட்டணி உருவாகிறது என்ற எண்ணத்தை மக்களிடையே உருவாக்க முயற்சிப்பது அவரது அவசர நிலையையே காட்டுகிறது. ஒரு கட்சியின் கொடியை, மற்றொரு கட்சியின் பிரச்சாரத்தில் தொண்டர்கள் பிடிப்பது என்பது அரசியலில் மிகவும் மோசமான நிலையின் வெளிப்பாடு.
தவெக தலைவர் விஜய் ஏற்கெனவே மதுரையில் நடைபெற்ற மாநாட்டில், வரவிருக்கும் 2026 தேர்தலில் அமையும் கூட்டணிக்குத் தானே தலைமை தாங்குவேன் தெளிவாகக் கூறிவிட்டார். அப்படியிருக்கையில், அவர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் எந்தக் கூட்டணியிலும் இணைய மாட்டார்.
எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஆதரிக்கும் எந்தக் கூட்டணியையும் நான் ஆதரிக்க முடியாது. அவர் நம்பகத்தன்மை இல்லாதவர், துரோகத்தால் பெயர் பெற்றவர். எம்.ஜி.ஆர் தொடங்கி ஜெயலலிதா வரை வழிநடத்திய அதிமுக சட்டவிதிகளையே அவர் அழித்துவிட்டார். இப்போது இருப்பது அ.தி.மு.க அல்ல, அது ‘ஈ.டி.எம்.கே’ (எடப்பாடி தி.மு.க).” என டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்தார்.
