திமுக தேர்தல் அறிக்கை எப்படி இருக்கும்? கனிமொழி பேட்டி!

Published On:

| By Kavi

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும் என்று திமுக எம்பி கனிமொழி கூறியுள்ளார்.

தமிழக அரசியல் களத்தில் ஹீரோக்களாக இருப்பது தேர்தல் அறிக்கைகள் தான்.

ADVERTISEMENT

மக்கள் தங்கள் தொகுதியில் நிற்கும் வேட்பாளர் யார் என்பதை காட்டிலும், அந்தக் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன என்பதை பொறுத்தே பெரும்பாலும் வாக்களிப்பார்கள்.

இந்த நிலையில் அந்த முக்கிய பணியை தற்போது இருந்தே திமுக தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கனவே திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அமைத்தார்.

இந்த நிலையில் இக்குழு தனது முதல் கூட்டத்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று ( டிசம்பர் 22) நடத்தியது.

ADVERTISEMENT

இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி எம்.பி., ‘இந்த கூட்டத்தில் எந்தெந்த மாவட்டத்தில் எப்படி பணிகளை தொடங்குவது என்றும் விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட யாரை எல்லாம் சந்திக்க உள்ளோம் என்பது குறித்தும் ஆலோசனையில் ஈடுபட்டோம்.

வேலைவாய்ப்புகள், மகளிருக்கான உரிமை, விவசாயிகளின் பாதுகாப்பு என்று ஒன்றிய பாஜக அரசு, மக்களிடம் இருந்து அனைத்தையும் பறிப்பதையே ஒரு வேலையாக வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த சூழலில் வேலைவாய்ப்பை அதிகரிப்பது, மாநில உரிமைக்கு போராடுவது உள்ளிட்டவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்படும்.

ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டே இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்படும். இது முதல்வரிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னர் வெளியிடப்படும்’ என்று கூறினார்.

கடந்த தேர்தலின் போது திமுக 525 வாக்குறுதிகளை வெளியிட்டது. இதில் மகளிர் உரிமைத்தொகை, இலவச பேருந்து என பல்வேறு வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றியுள்ளது..

ஆனால் மாணவர்களுக்கான முக்கிய வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட நீட் தேர்வு ரத்து, கல்வி கடன் ரத்து மற்றும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

இது தொடர்பாக எதிர்க்கட்சிகளும், அரசு ஊழியர்களும் கேள்வி எழுப்பி வரும் வேளையில் 2026 தேர்தலுக்கான திமுக வாக்குறுதிகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே அதிகரித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share