திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் இன்று (மார்ச் 29) தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
திமுக தேர்தல் அறிக்கை ‘சூப்பர் ஸ்டார்” என்று கூறி முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் விவசாயிகளுக்கு பல்வேறு முக்கிய வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.
அதில், “ தமிழ்நாட்டு வேளாண் பெருமக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றி, 1989ஆம் ஆண்டு அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரத்தை அளித்தவர் கலைஞர். இதன் பயனாக, தமிழ்நாட்டு விவசாயிகள் வேளாண் உற்பத்தியில் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து புரிந்து வந்தாலும், கிணறுகள் மற்றும் ஆழ்துளைக் குழாய் பாசனத்தை பெருமளவில் நம்பியே இன்றும் தமிழ்நாட்டின் விவசாயம் உள்ளது. இப்பாசனத்தை மேம்படுத்தும் வகையில், இலவச மின்சாரம் பெறும் சுமார் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, அவர்கள் தற்போது வைத்திருக்கும் பம்புகளின் சக்தி மற்றும் அவர்களின் பாசனத் தேவைக்கு ஏற்ப, எவ்வித மீட்டரும் பொருத்தப்படாத நவீன மின்சாரப் பம்புசெட்டுகள் வழங்கப்படும்.
பேரிடர் காலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் இறவைப் பாசன பயிர்கள் மற்றும் நெல் பயிர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத்தொகை ஹெக்டேர் ஒன்றுக்கு 25,000 ரூபாயாகவும், நீண்டகாலப் பயிர்களுக்கு 27,000 ரூபாயாகவும், மானாவாரிப் பயிர்களுக்கு 12,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும்.
நிகர சாகுபடி பரப்பு (Net Cultivable Area) 50 இலட்சம் ஹெக்டேராக உயர்த்தப்படும்.
தற்காலிக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், வாய்ப்பு இருக்கும் அனைத்து இடங்களிலும் உலர்களத்துடன் கூடிய நிரந்தரக் கட்டடங்களாகக் கட்டப்படும்.
நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 3,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ. 4,500-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
டெல்டா மாவட்டங்களில் 10,500 கி.மீ மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 5,000 கி.மீ நீளத்திற்கு ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும்.
மண்வள அட்டைகள் 43 இலட்சம் உழவர்களுக்கு வழங்கப்பட்டு, இயற்கை வேளாண்மைப் பரப்பு 17 ஆயிரம் ஹெக்டேராகவும், உயிர் வேளாண்மைப் பரப்பு ஒரு இலட்சம் ஹெக்டேராகவும் விரிவுபடுத்தப்படும்.
வேளாண்மைக்கு ஆதாரமான நீரைச் சேமிக்க நுண்ணீர்ப் பாசனம் 21 இலட்சம் ஹெக்டேராக விரிவுபடுத்தப்படும்.
மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைகளில் ஆயிரம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும். கால்வாய்கள் மதகுகள் புனரமைக்கப்பட்டு, நீர் மேலாண்மையைச் -சீர்செய்து, தண்ணீர் தட்டுப்பாடான பகுதிகள் வளமான பகுதிகளாக மாற்றப்படும்.
உணவு உற்பத்தி 125 இலட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும்.
உழவர்கள் தங்கள் பகுதிக்கு ஏற்ற பயிர்களைச் சிறந்த சாகுபடி முறைகளைப் பின்பற்றி அதிக மகசூலை அடைந்திடும் வகையில், “கிராம அளவிலான பயிர்ச் சாகுபடித் திட்டம்” தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.
உயிர்ம வேளாண்மை (Organic Farming) சாகுபடி பரப்பினை 40,000 ஹெக்டேரிலிருந்து அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் ஹெக்டேராக உயர்த்த நடவடிக்கை எடுப்பதுடன், அதன் பயன் முழுமையடையும் வகையில் தொடர் ஆலோசனைகள் வழங்கப்படும்.
இயற்கை வேளாண்மை (Natural Farming) சாகுபடி பரப்பினை 5 ஆண்டுகளில் 5 மடங்கு அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இயற்கை வேளாண்மைக்குத் தேவையான இடுபொருட்கள் தயாரிப்பில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் பங்களிப்பு உருவாக்கப்படும்.
பாரம்பரிய நெல், சிறு தானியங்கள் மற்றும் பயறு வகைகளில் 75,000 ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளும் வகையில் ஆண்டுக்கு 1,500 மெட்ரிக் டன் விதைகள் உழவர்களுக்கு வழங்கப்படும்.
காலநிலை மாற்றங்களைத் தாங்கக் கூடிய 1000 மாதிரி பண்ணைகள் அமைக்கப்படும்.
தரிசு நிலங்கள் மற்றும் மண்வளம் குன்றிய 1.25 இலட்சம் ஏக்கர் நிலங்கள் மீண்டும் சாகுபடிக்குக் கொண்டுவரப்படும்.
புளூபெர்ரி, டிராகன் பழம், கிவி போன்ற அயல்நாட்டுப் பயிர்கள் 2,500 ஏக்கரில் சாகுபடி செய்ய ஊக்குவிக்கப்படும்.
வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வாங்கிட 1.50 இலட்சம் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.
5,000 சூரிய சக்தி பம்பு செட்டுகள், 1,000 சூரிய சக்தி உலர்த்திகள் மற்றும் 1,000 சூரிய சக்தி மின் வேலிகள் அமைக்கப்படும்.
100 வேளாண் இயந்திர பழுதுபார்ப்பு சேவை மையங்கள் அமைப்பதற்கு ஊரக இளைஞர்கள், பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மானிய உதவி வழங்கப்படும். தேவையான பயிற்சியும் வழங்கப்படும். இளைஞர்களுக்கு வேளாண் இயந்திரங்களைப் பழுது நீக்கம் செய்வதற்குத் தேவையான பயற்சியும் வழங்கப்படும்.
1000 உணவு மதிப்புக் கூட்டும் மையங்கள் நிறுவப்படும்.
மூலிகை பயிர் சாகுபடியை ஊக்குவிக்க ‘சிறப்புத் திட்டம்’ உருவாக்கி, மருந்துக்கூர்கன், செங்காந்தள், ஆவாரம், நித்திய கல்யாணி போன்ற மருத்துவ பயிர்களின் சாகுபடி 25,000 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும்.
உழவர் சந்தைகள் இல்லாத ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் புதிய உழவர் சந்தைகள் அமைக்கப்படும்.
பூச்சி மருந்து மற்றும் பயிர் பாதுகாப்பு முறைகளைக் குறைந்த செலவில் செய்து அதிக மகசூலைப் பெற ட்ரோன் பயன்பாடு ஊக்குவிக்கப்படும். குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு ட்ரோன்கள் கிடைக்கும் வகையில் இ-வாடகை திட்டம் மூலம் இந்த முன்னெடுப்பு செயல்படுத்தப்படும். மேலும் இத்திட்டத்தின் மூலம் ட்ரோன்கள் இயக்குவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டு இளைஞர்கள், குறிப்பாக பெண்கள், வேலைவாய்ப்பு பெறவும் வழிவகை செய்யப்படும்.
ஊரகப் பகுதிகளில் ‘உழவர் சந்தைகள்’ வெற்றிகரமாக செயல்படுவது போல், நகர்ப்புற பகுதிகளில், 100 ‘உழவர் அங்காடிகள்’ அமைக்கப்படும், முதற்கட்டமாக மாநகராட்சிப் பகுதிகளில் இவை அமைக்கப்பட்டு, பின்னர் படிப்படியாக, நகராட்சிப் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும். இதனால் உழவர்களுக்கு உரிய விலை கிடைக்கப்பெற்று பயனடைவர். நுகர்வோரும் தரமான பொருட்களைக் குறைவான விலையில் பெற வழிவகை ஏற்படும்.
உள்நாட்டிலும், ஏற்றுமதி வாயிலாக வெளிநாடுகளிலும் வேளாண் விற்பனையை அதிகரிக்கும் விதமாக AI தொழில்நுட்பத்துடன் கூடிய “வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் ஏற்றுமதி வழிகாட்டி மையங்கள்” மண்டல அளவிலும், மாநில அளவிலும் உருவாக்கப்படும்.
வேளாண் பெருங்குடி மக்கள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், தொழில்முனைவோர்கள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் பயனடையும் வகையில், இனி ஆண்டுதோறும் மண்டல அளவில் வேளாண் கண்காட்சிகளும், கருத்தரங்குகளும் நடத்தப்படும்.
வேளாண் பயிர்களில் உயர் விளைச்சல் தரும் விதைகளைக் கண்டறிந்து, விதைப் பண்ணைகள் மூலம் உற்பத்தி செய்து உழவர்கள் பயனடையும் வகையில் வட்டார அளவில் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் வளர வாய்ப்புள்ள, உயர் வருமானம் தரக்கூடிய, முருங்கை, கொய்யா, பப்பாளி, சப்போட்டா, பலா, நெல்லி, நாவல், சீதா, ஆரஞ்சு போன்றவற்றின் தோட்டக்கலை சாகுபடி பரப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றைக் கூடுதலாக விளைவித்திடச் சிறப்புத் திட்டங்கள் வகுக்கப்படும்.
5 ஆண்டுகளில் 5 கோடி பனை விதைக்கப்படும். பனைப் பொருட்களுக்கான சிறப்புக் குழுமங்கள் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பனைப் பொருட்களை ஆவின் விற்பனை நிலையங்கள் வழியாகச் சந்தைப்படுத்த ஏற்பாடு செய்யப்படும்.
புதிய வேளாண் தொழில் பூங்காக்கள்: தமிழ்நாட்டில் விளையும் பொருட்கள் சில பகுதிகளில் அடர்த்தியாக காணப்படுகிறது. அவை பெரும்பாலும் மதிப்புக் கூட்டாமலேயே விற்பனை செய்யப்படுகிறது. இதனை மாற்றி அமைத்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களாக உற்பத்தி செய்வதை ஏதுவாக்க வேளாண் தொழில் பூங்காக்கள் உருவாக்கப்படும். முட்டை, தேங்காய், வாழை, மா, நெல், பூக்கள் போன்ற பொருட்களுக்கான சிறப்பு தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
பட்டுக்கோட்டை, கிருஷ்ணகிரி, உதகமண்டலம், ஏற்காடு, கொடைக்கானல், தேனி, இராமநாதபுரம், தென்காசி, திருவண்ணாமலை, சேலம், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம், திருவாரூர் போன்ற இடங்களில் அந்தந்தப் பகுதிகளில் பரவலாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கான வேளாண் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
நெல் விளையும் பகுதிகளில் செயல்படும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நகரும் நெல் உலர்த்திகள் தேவைக்கேற்ப வழங்கப்படும்.
தானிய சேமிப்புக் கிடங்குகள் (Silo Storage): நெல்லின் ஈரப்பதம் கூடுதலாக இருக்கும் பருவங்களில் கொள்முதல் செய்வது பெரும் சவாலாக உள்ளது. தானிய சேமிப்புக் கிடங்குகள் (Silo Storage) அமைத்தால் 20% ஈரப்பதம் உள்ள நெல்லை உலர்த்தி பெருமளவில் கொள்முதல் செய்ய இயலும். ஆகவே நெல் அதிகம் விளையும் பகுதிகளில் தானிய சேமிப்புக் கிடங்குகள் உருவாக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இவ்வாறாக 36 அறிவிப்புகளை விவசாயிகளுக்கு வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
