ADVERTISEMENT

புனிதத்தன்மையும், பகுத்தறிவும்: வெகுஜன அரசியலில் தி.மு.க-வின் எதிர்நீச்சலும், எதிர்வரும் தேர்தலும்

Published On:

| By Minnambalam Desk

கலைஞரின் மறைவுக்குப் பிறகு தி.மு.க அஸ்தமித்துவிடும், அதன் அரசியல் பயணம் முடிவுக்கு வரும் என்ற எண்ணம், ஏன், எதிர்பார்ப்பும் கூட பலருக்கு இருந்தது. அதனை எழுதவும் செய்துள்ளார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தி.மு.க மிகப்பெரிய அளவில் புத்தெழுச்சி பெற்றது. இந்தியாவை கூட்டாட்சிக் குடியரசாக வடிவமைக்கும் தனது இலட்சிய பயணத்தை உறுதிசெய்தது.

இந்தியா முழுமையையும் ஆக்கிரமிக்கத் துடிக்கும் இந்துத்துவ மதவாத, மீட்புவாத பேரலை தமிழ்நாட்டில் நுழைய முடியாமல் தடுத்துள்ளது.திராவிட தமிழர் என்ற மக்கள் தொகுதியின் வரலாற்றுத் தனித்துவத்தை, தன்னாட்சி உரிமைக்குரலை முன்னிறுத்துகிறது. மேலும் சிறப்பாக இளம் தலைவர் உதயநிதியின் வருகை அடுத்த தலைமுறையும் இந்த இலட்சியப் பாதையில் பயணம் செய்யும் என்பதை உறுதி செய்கின்றது. 

ADVERTISEMENT

எதிர்முனையில் ஜெயலலிதா மறைவுக்குப் பின் பதவி மோகப் போட்டியில் சுயநலக் கூட்டமாக சுருங்கிப் போன அ.இ.அ.தி.மு.க-வை, இரையைச் சுற்றி வளைக்கும் மலைப்பாம்பைப் போல பாஜக சுற்றுவளைத்து நொறுக்குகிறது. அதனை விழுங்கிச் சுவீகரிக்கத் தொடர்ந்து திட்டம் வகுக்கிறது. திராவிட தமிழர் தன்னுணர்வைச் சிதைக்க பல முனைத் தாக்குதலை தயாரிக்கிறது. 

இதெல்லாம் வெளிப்படையாக, பட்டவர்த்தனமாக யாரும் காணக்கூடிய காட்சிகள். மறைபொருளாக, பூடகமாகவோ அல்ல; பகிரங்கமாகவேதான் காட்சிகள் அரங்கேறுகின்றன. இந்த போக்கினை உணர்ந்து ஓரணியாகத் திரள்வோம் என்ற முழக்கத்தின்படி தி.மு.க-வில் பல அ.இ.அ.தி.மு.க தலைவர்கள் இணைந்து வருகின்றனர். 

ADVERTISEMENT

முதல்வர் ஸ்டாலினின் ஐந்தாண்டுகால ஆட்சி பொற்கால ஆட்சி என்று சொல்லத்தக்க அளவில் ஏராளமான சாதனைகளை ஒவ்வொரு ஆட்சித் துறையிலும் செய்துவருகிறது. பட்டியலிட்டு பாராட்டினால் கட்டுரையாக அல்ல, நூலாகவே உருவாகும் என்ற நிலைதான் நிலவுகிறது. ஏனெனில் ஒவ்வொரு முன்னெடுப்பும் நூதனமாகவும், புதுமையாகவும் அமைந்துள்ளன. 

DMK Counter Swimming and the 2026 Elections

ஆட்சிக்கான ஆதரவு அலையை மறைக்கும் ஊடகத்திரை 

இவையெல்லாம் பாரபட்சமின்றி பரிசீலிப்பவர்கள் உடனடியாக உணரக்கூடிய காட்சிகள். என்.டி.டி.வி என்ற ஆங்கில தொலைக்காட்சி சேனல் கடந்த வாரம் நிகழ்த்திய தமிழ்நாடு சந்திப்பில் இந்த நிலையினை தி.மு.க தலைவர்கள், அமைச்சர்கள் மிகச் சிறப்பாக எடுத்துரைத்தார்கள். உரைகளாகவும், உரையாடல்களாகவும் கருத்துச் செறிவுடன் அரசியல் நிலையை அலசினார்கள். 

ADVERTISEMENT

இவையெல்லாம் உணர்த்துவதன்படி நல்லாட்சியினால், கருத்தியல் தெளிவினால், இலட்சியப் பற்றினால் பயன்பெற்ற மக்களின் பேராதரவுடன் தி.மு.க கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்பதில் ஐயம் இருக்க முடியாது. உண்மையில் சொன்னால் பாஜக-வின் ராஜகுரு குருமூர்த்தியே 2026 தேர்தல் வெற்றி எங்கள் இலக்கல்ல என்று கூறிவிட்டார். கட்சியை வலுப்படுத்தி வளர்ப்பதுதான் அவர்கள் உடனடி இலக்கு (அதாவது அ.இ.அ.தி.மு.க-வின்  ஆதரவுத் தளத்தை கைப்பற்றுவது). 

இருப்பினும் பொது மன்றத்தில், ஊடக விவாதங்களில், படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரையில் பலரது பேச்சில் நாம் ஒரு போக்கினைக் காண முடியும். அது என்னவென்றால் தி.மு.க ஆட்சியின் குறைகளை மிகைப்படுத்தி பேசுவது. அதன் சாதனைகளைக் குறைத்துப் பேசுவது அல்லது பாராட்ட மறுப்பது. இந்த சம நிலையற்ற போக்கினை அவர்கள் நியாயப்படுத்தும் விதங்களும் கவனத்திற்குரியவை. 

விமர்சனம் செய்தால்தானே மக்களாட்சியில் ஆட்சியின் குறைகளைக் களைய முடியும் என்பார்கள். ஆனால் அதே அளவுகோலை வைத்து அ.இ.அ.தி.மு.க-வை விமர்சனம் செய்கிறார்களா, பாஜக-வை விமர்சனம் செய்கிறார்களா என்று பார்த்தால் அப்படிச் செய்யமாட்டார்கள். இன்னம் நெருக்கிக் கேட்டால் நாங்கள் தி.மு.க கூட்டணிக்குத்தான் வாக்களிப்போம், ஆனாலும் அதன் மீதான குற்றச்சாட்டுகளைத்தான் முதன்மைப்படுத்திப் பேசுவோம் என்பார்கள். 

மேலோட்டமாகப் பார்த்தால் அது சரிதானே, விமர்சனம் என்பதுதானே குறைகளைந்து ஆட்சி மேம்பட உதவும் என்று தோன்றலாம். ஆனால் உண்மையில் அவர்களிடம் வெளிப்படுவது  ஒரு ஆழமான மனச்சாய்வு. தி.மு.க எதிர்மனோநிலை. எழுத்தாளர் பொதியவெற்பன் வார்த்தைகளில் “திராவிட இயக்க ஒவ்வாமை நோய்.” இதனை ஒரு வெகுஜன உளவியல் சார்ந்து புரிந்துகொண்டால்தான் தி.மு.க போட்டுவரும் எதிர்நீச்சல் எத்தகையது என்பதை உணர முடியும். 

DMK Counter Swimming and the 2026 Elections

டெஃலான் கோட்டிங் என்ற கறைபடியாத புனிதத்தன்மை 

பத்திரிகையாளர், ஆய்வாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளார். அதில் அவர் நகைச்சுவையாக தி.மு.க கட்சிக்கு கறைபடியாத டெஃலான் கோட்டிங் கிடையாது என்று குறிப்பிட்டுள்ளார். அது என்னவென்றால் சமையலறை பாத்திரங்களுக்கு டெஃலான் கோட்டிங் கொடுத்து நான்-ஸ்டிக், அதாவது மாவுப்பொருட்கள் ஒட்டாத பாத்திரங்கள் என்று விற்பார்கள். அந்த கோட்டிங் இல்லாத பாத்திரங்களில் மாவுப் பொருட்கள் ஒட்டும். 

எல்லா கட்சிகள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் தி.மு.க மீது, காங்கிரஸ் மீது கூட குற்றச்சாட்டுகள் ஒட்டும். அ.இஅ.தி.மு.க மீது, பாஜக மீது ஒட்டாது. அதுதான் டெஃலான் கோட்டிங் என்ற மேற்பூச்சு. இந்த மேற்பூச்சு உண்மையில் எதனால் ஆனது என்று சிந்திக்கும்போதுதான் “புனிதத்தன்மை” என்ற வெகுஜன உளவியல் அம்சம் புலனாகிறது. அதனை புரிந்துகொள்வது அவ்வளவு கடினமானது அல்ல. 

ஒரு சில சாமியார்கள் புனிதர்களாக வலம் வருவார்கள். சீடர்கள், பக்தகோடிகள் என பெரும் சொத்துக்களையும் சேர்ப்பார்கள். அவர்கள் மீது நிதிமோசடி அல்லது பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழும்போது விசாரணையில் நிரூபணமாகி தண்டனையும் பெறுவார்கள். அப்படி அவர்கள் சிறைவாசத்திற்கே சென்றாலும் கூட அவர்கள் பக்தர்கள் தொடர்ந்து அவர்களிடம் விசுவாசமாக இருப்பார்கள். அவர்களை பூஜிப்பார்கள். அவர்கள் குற்றம் செய்தார்கள் என நம்ப மறுப்பார்கள். அல்லது குற்றமே செய்திருந்தாலும் கூட அவர்கள் மகான்கள் என்று நினைப்பார்கள். ஏனெனில் புனிதமானது என்று ஒன்றைக் கருதிவிட்டால் அதன் மேல் எந்த கறையும் படியாது.  

இவ்வாறான புனிதத்தன்மையின் தேவை மானுடம் சமூக வாழ்க்கையை மேற்கொள்ளத்தொடங்கிய காலத்திலிருந்தே இருந்ததாகவே கூறலாம். முக்கியமாக தெய்வம், கடவுள் அல்லது இறைவன் என்ற கருத்தாக்கம் சமூக வாழ்வை ஒருங்கிணைக்க இன்றியமையாததாக மாறியது. அரசர்கள் தெய்வாம்சம் பொருந்தியவர்களாக, இறைவனின் சார்பாக ஆட்சி செய்பவர்களாக அறியப்பட்டார்கள். பூசாரி வர்க்கம், மதகுருக்கள் அரசனுக்கும், இறைவனுக்கும் பாலமாக விளங்கத் தொடங்கினார்கள். 

பதினைந்தாம் நூற்றாண்டில் அச்சு இயந்திரம் உருவாகி, நூல்களை பெருமளவு அச்சிட்டுப் படிக்கும் சாத்தியம் பெருகியபோது, பகுத்தறிவு சார்ந்த விழுமியங்கள் அடிப்படையில் குடியரசு உருவாக வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது. மத நிறுவனங்கள் மற்றும் பூசாரி வர்க்கத்திற்கும் பகுத்தறிவாளர்களுக்கும் இடையிலான முரண்பாடே நவீன அரசியலை வடிவமைத்தது எனலாம். 

இந்த முரண் எத்தனையோ நுட்பமான வடிவங்களை எடுத்தது. காரணம் இறைநம்பிக்கையிலும் பூசாரி வர்க்கத்தின் மேலாதிக்கத்தை எதிர்க்கும் மக்கள் மைய பக்தி இயக்கங்கள் என்றுமே தோன்றிவந்துள்ளன. அதே போல நவீன பகுத்தறிவிலும் அதிகாரக் குவிப்பிற்கும், அதிகாரப்பரவலுக்குமான முரண் தோன்றி வலுவடைந்தது.       

இந்த நிலையில்தான் புனிதத்தன்மை என்பது இறைவன் என்பதிலிருந்து பரவி பல்வேறு மையங்களுக்கு, உருவகங்களுக்குப் பரவியது. அதன் அடிப்படை குணம் என்னவென்றால் கேள்விகளுக்கு அப்பால் ஒன்றினை நம்பவேண்டும், விசுவாசிக்க வேண்டும் என்பதுதான். அனைத்துமே கேள்விக்குறியது, அப்படி கேள்விகள் கேட்பதே பகுத்தறிவு என்ற கருத்து இந்த புனிதவாத சிந்தனைக்கு எதிராக இயங்குவது. 

இதனை நாம் முழுமையாக உணரும்போதுதான் பெரியார் என்ற பகுத்தறிவுப் பகலவன் எப்படி இந்தியக் குடியரசின் விழுமியங்களை கட்டமைக்க விரும்பினார் என்பதையும், அவரை அடியொற்றி அண்ணா, கலைஞர் ஆகியோர் தலைமையில் திராவிட இயக்கம் பகுத்தறிவு இயக்கமாக இன்று வரை பயணிக்கிறது என்பதையும் காண முடியும். 

ஆனால் வெகுஜன மன நிலை புனிதத்தன்மையினை நம்பும் தன்மை கொண்ட து. அவர்கள் பகுத்தறிவு இயக்கத்தையே ஆதரித்தாலும், புனிதவாதத்தை கைவிடாமல் இருப்பார்கள். இத்தகைய முரண்பட்ட நிலையை இத்தாலிய மார்க்சீய சிந்தனையாளர் கிராம்சி பொதுப்புத்தியின் பண்பாகக் கூறினார். இதனால்தான் தி.மு.க இன்றும் வெகுஜன அரசியலில் எதிர்நீச்சல் போடுகிறது என்றால் மிகையாகாது.  இதனை நாம் விரிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். 

புனிதத்தன்மை எடுக்கும் வடிவங்கள் 

காலனீய ஆட்சிக்கு எதிராக இந்திய தேசிய அடையாளத்தை உருவாக்கும்போது அதனை ஆரியர்களது வேதங்கள், பிற்காலத்தில் உருவான வேதாந்தம், புராணம், பார்ப்பனீய வர்ண தர்மம் ஆகியவற்றை புனித மையங்களாக கட்டமைத்தே அது உருவானது. தமிழ் உட்பட இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் இந்த ஆரியக் கதையாடல்கள், உருவகங்கள் நிலைபெற்றிருந்தன. பலதெய்வ வழிபாட்டினைக் கொண்ட இந்திய பண்பாட்டில், யார் எங்கே எந்த தெய்வத்தை வழிபட்டாலும் அதனை ஆரிய புராணக் கற்பனையுடன் இணைத்துக் கொண்டனர். 

வேதங்களை ஏற்காத மதங்களாகிய புத்தம், ஜைனம் உள்ளிட்ட மதங்களிலும் ஆரிய புனிதவாதத் தன்மைகள் ஏற்றப்பட்டன. துவக்கநிலை பகுத்தறிவு அம்சங்கள் குறைக்கப்பட்டு உருவ வழிபாட்டைக் கொண்ட புனிதத்தன்மை பெருகியது. அரசர்களுக்கும் பேரரசு உருவாக்கத்திற்கு புனிதத்தன்மையே கைகொடுக்கும் என்பதால் அவர்களும் பூசாரி வர்கத்தை, இந்தியாவில் பார்ப்பனர்களை பெருமளவு ஆதரிப்பதே இயல்பானது. அத்துடன் வர்ண தர்மத்தின் ஏற்றத்தாழ்வான கட்டமைப்பை சமூகத்தில் நிலை நிறுத்தும் முயற்சிகள் தொடர்ந்தன. 

இத்தகைய வரலாற்றுப் பின்னணி கொண்ட நாட்டில் காந்தி எளிய மக்களுக்கான விழுமியங்களைக் கொண்ட குடியரசையே விரும்பினார். அதனை நிறுவ அரசியலில் வெகுமக்கள் பங்கேற்பு இருக்க வேண்டும் என்று எண்ணினார். அப்படி பங்கேற்கச் செய்ய புனிதத்தன்மையை பயன்படுத்துவதே பலனளிக்கும் என்று நினைத்தார். அதனால் அவரே தெய்வீக ஆற்றல்கள் பொருந்திய மகாத்மாவாகக் கட்டமைக்கப்பட்டார். 

DMK Counter Swimming and the 2026 Elections

எப்படி ஒத்துழையாமை இயக்க காலத்தில் உத்திரபிரதேசத்தில் வெளியான இந்தி மொழி உள்ளூர் ஏடுகளில் காந்தியின் தெய்வீகத்தனமை குறித்த கதைகள் பரவின என்பதை பேராசிரியர் ஷஹித் அமின், அடித்தள மக்கள் ஆய்வுத்தொகுப்பில் எழுதியுள்ளார். காந்தியை திட்டுபவன் வீட்டில் தீ பற்றிக்கொண்டது, துர்மரணங்கள் நிகழ்ந்தன என்றும், காந்தியை வழிபடுபவனுக்கு புதையல் கிடைத்த து என்றும் “உண்மை சம்பவ” கதையாடல்கள் அதில் பதிவாயின. 

இந்தியில் எழுதப்பட்ட அளவு தமிழில் எழுதப்படாவிட்டாலும், காந்தியின் தெய்வீகமும், தேசியமும் தமிழில் பரவலாக எடுத்துரைக்கப்பட்டன. ஆரியமே இந்தியப் பண்பாட்டின் அடித்தளம் என்ற கருத்தும் பலரால் எடுத்துரைக்கப்பட்டது. வர்ண தர்ம பாகுபாட்டை, ஏற்றத்தாழ்வை தவறென்று நினைத்தவர்கள் கூட, அது நல்ல பண்பாட்டில் ஏற்பட்ட திரிபுதான், சரி செய்துவிட்டால் புனிதமான பண்பாட்டை மீட்டுவிடலாம் என்று நினைத்தனர். 

DMK Counter Swimming and the 2026 Elections

திராவிட இயக்கத்தின் எதிர்நீச்சல் 

ஆரிய பண்பாடே இந்தியாவின் அடித்தளம் என்ற கருத்தையும், அதனையொட்டி முன்மொழியப்பட்ட சமஸ்கிருதம் என்ற தேவபாஷையின் மேன்மைவாதம், சமஸ்கிருதமயப்பட்ட இந்தி மொழியை தேசிய மொழியாக்கும் முயற்சி, பார்ப்பனீய கருத்தியல் மேலாதிக்கம், சமூக அதிகாரம் ஆகிய அனைத்தையும் பகுத்தறிவின் துணைக்கொண்டு எதிர்க்கும் மகத்தான பண்பாட்டுப் புரட்சியை சுயமரியாதை இயக்கமாகத் துவங்கினார் பெரியார். 

திராவிட முன்னேற்றக் கழகம் அந்த பகுத்தறிவின் துணைகொண்டு சாமானியர்களை அரசியலமைப்பாக்கி அதிகாரத்தை நோக்கி கொண்டுசெல்லும் மகத்தான வரலாற்று எதிர்நீச்சலை மேற்கொண்டது. அது ஒரே நேரத்தில் பழைய புனிதவாத அதிகார மையங்களையும், புதிய பகுத்தறிவு அதிகாரக் குவிப்பு கட்டமைத்த தேசிய அரசு என்ற வடிவத்தின் மேலாதிக்கத்தையும் எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது.

தி.மு.க தமிழ் மொழியை புனிதமான ஒன்றாகக் கருதினாலும், தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழ்நாடு அரசின் பாடலாக அறிவித்தாலும் பகுத்தறிவைக் கைவிடவில்லை. அதனால்தான் திராவிட இயக்கத்தவர் உலகெங்கும் பகுத்தறிவு அரசியலை முன்னெடுத்தவர்கள் பெயர்களை தங்கள் பிள்ளைகளுக்குச் சூட்டினார்கள். இங்கர்சால், பிராட்லா, லிங்கன், ரூசோ என்ற எத்தனையோ பேர். கலைஞரே இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரை முறியடித்து பொதுவுடமை அரசைக் காத்த ஜோசப் ஸ்டாலின் இறந்த போது பிறந்த தன் மகனுக்கு ஸ்டாலின் எனப் பெயர் சூட்டினார். 

இறை மறுப்பு என்பதை தி.மு.க தன் கொள்கையாக அறிவிக்கவில்லை. மாற்றாக அதனை தனி வாழ்க்கையின் அம்சமாகக் கருதியது. பொதுவாழ்வில் இறை நம்பிக்கையின் பேரில் எந்த மூட நம்பிக்கையையும் பின்பற்றக் கூடாது என்பதுதான் அதன் கருத்தியல். அதனை உணர்த்தவே “ஓன்றே குலம், ஒருவனே தேவன்” என்ற திருமூலர் கூற்றினை தன் கொள்கையாக அறிவித்தார் அண்ணா. அந்த அடிப்படையிலேயே தி.மு.க-வினர் உளச்சான்றின்படி நடப்பதாக உறுதிகூறித்தான் பதவி ஏற்பார்களே தவிர கடவுளின் பெயரால் உறுதி கூற மாட்டார்கள். 

DMK Counter Swimming and the 2026 Elections

புனிதத்தன்மை பாதுகாப்பும், பகுத்தறிவின் எதிர்நீச்சலும் 

புனித மையங்களை, குறியீடுகளை வைத்து சமூக வாழ்வை ஒழுங்கமைப்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் அரசியல் யுக்தி. அதனை பின்பற்றுபவர்களுக்கு அந்த புனிதவாதம் பாதுகாப்பு வழங்கும். சிறைக்குச் சென்ற சாமியார்களையும் பக்தர்கள் விடாது வணங்குவது போல. 

ஆனால் அந்த புனித மையங்கள் உருவாக்கிய ஏற்றத்தாழ்வை எதிர்த்து பகுத்தறிவை முன்னிறுத்தி அரசியல் செய்பவர்களுக்கு அந்த பாதுகாப்பு கிடைக்காது. அதுதான் டெஃலான் கோட்டிங் இல்லாத தன்மையாகும். இதனை நாம்  மிகச் சுலபமாக சமகால உதாரணங்களைக் கொண்டு விளக்கலாம். 

இந்திய அரசியல் வரலாற்றில் அதிக பட்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கட்சி பாஜக. ஆனால் மக்கள் அதனை ஒரு போதும் மனதில் கொள்வதில்லை. உதாரணமாக ஒன்றேயொன்றைப் பார்ப்போம். கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா ஊழல் வழக்கில் கைதானவர். கட்சியை விட்டே நீக்கப்பட்டவர். ஆனால் அவரை மீண்டும் இணைத்துக் கொண்டது பாஜக. அவர் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை விலைபேசி வாங்கி ஆட்சியைக் கவிழ்த்தார். 

அவரைத் தொடர்ந்து பசவராஜ் பொம்மை அரசேற்றபோது ஊழல் தலைவிரித்தாடியது. ஒப்பந்தக்காரர் ஒருவர் கடிதம் எழுதிவைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அமைச்சர்கள் கமிஷன் வாங்குவதற்கு உச்சரவரம்பு விதிக்க வேண்டும் என ஒப்பந்தக்காரர்கள் பகிரங்க கோரிக்கை வைத்தார்கள். இத்தனைக்கும் பிறகு எடியூரப்பா மகனுக்கு மாநில தலைவர் பதவி கொடுத்துள்ளது வாரிசு அரசியலை எதிர்க்கும் பாஜக. 

மதச்சார்பின்மை, பகுத்தறிவு பேசும் காங்கிரசிற்கும் இந்த சலுகை கிடைக்காது. போஃபர்ஸ் ஊழல் குற்றச்சாட்டு ராஜீவ் காந்தி மேல் ஒட்டியதால் அவர் பதவி இழந்தார். ஆனால் குற்றம் பல ஆண்டு விசாரணைக்குப் பிறகும் நீரூபிக்கப்படவேயில்லை. அடுத்து 2G அலைக்கற்றை ஊழல் தி.மு.க, காங்கிரஸ் அடங்கிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது சுமத்தப்பட்டு ஒட்டியது. ஒன்றியத்திலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. ஆனால் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் விசாரணை அமைப்புகளை கண்டித்தது. 

ஆனால் ரஃபேல் ஊழல், தேர்தல் பத்திர ஊழல், அதானி பங்குச் சந்தை ஊழல், சாலைக் கட்டுமானப் பணி ஊழல்கள் என எண்ணற்ற பிரம்மாண்டமான ஊழல்கள் திட்டவட்டமான புள்ளி விவரங்களுடன் வெளியான பிறகும் பாஜகவின் மீது அவை ஒட்டுவதில்லை. 

அது மட்டுமல்லாமல், பாஜக மதவாத அரசியலின் புனிதத்தன்மை ஆற்றல் எப்படிப் பட்டது என்றால் அவர்களே கடுமையாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்திய அமைச்சர்கள் அவர்கள் கட்சியில் இணைந்தால் அவர்களை புனிதமாக்கிவிடுவார்கள். இதனை வாஷிங் மெஷின் அரசியல் என்று அழைக்கிறார்கள். 

உதாரணமாக மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் தலைவரான அஜித் பவார் மீது 25,000 கோடி ரூபாய் ஊழல் புகாரை அமலாக்கத்துறை சுமத்தியுள்ளது. அவர் பாஜக கூட்டணிக்கு வந்தவுடன் அவர் துணை முதல்வராக்கப்பட்டார். குற்றச்சாட்டு குப்பைக் கூடைக்குப் போனது. சென்ற வாரம் கெடுவாய்ப்பாக அவர் விமான விபத்தில் இறந்துவிட்டார். உடனே அவர் மனைவி சுனேத்திரா பவாரை துணை முதல்வராக பதவியேற்கச் செய்துள்ளது பாஜக. 

ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக அவருடன் வசித்த சசிகலாவின் சகோதரி மகன் டி.டி.வி.தினகரன். அரசுப் பதவியில் நேரடியாக இல்லாத மன்னார்குடி குடும்பம் பெரும் செல்வாக்கு செலுத்தியது வித்தியாசமான காட்சி. சசிகலா ஜெயலலிதாவுடன் சேர்ந்து பின்னவரின் அதிகாரத்தை பயன்படுத்தி சொத்து சேர்த்தாக உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்தவர். டி.டி.வி.தினகரனும் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைதானவர். 

இவர்களையெல்லாம் இணைத்துக்கொண்டு அரசியல் செய்யும் பாஜக, இனி வரும் மாதங்களில் தி.மு.க மீது ஊழல், வாரிசு அரசியல் என்று குற்றம் சாட்டி சண்டமாருத பிரசாரம் செய்யும்போதுதான் புனிதவாதம் முற்றாகப் பல்லிளிக்கும். ஆனால் இது போன்ற ஒரு அரசியல், எந்த விளக்கமும் இல்லாமல் “தி.மு.க தீய சக்தி” என்று கூவும் அரசியல் சாத்தியமாவதற்குக் காரணமே தி.மு.க புனிதவாதத்திற்கு எதிராக மேற்கொண்ட பகுத்தறிவு எதிர்நீச்சல்தான் என்றால் மிகையாகாது. மக்களாட்சி நிலைக்கவேண்டுமானால் பகுத்தறிவே வெல்ல வேண்டும்.

கட்டுரையாளர் குறிப்பு:  

DMK Counter Swimming and the 2026 Elections - Article in Tamil By Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share