2026 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை எப்படி நடைபெற்றது? திமுக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு எப்படி? கூட்டணி கட்சிகள் திமுகவை மிரட்டுகின்றனவா? தமிழகத்தில் போராட்டங்கள் அதிகரித்துள்ளது ஏன்? என்பது உள்ளிட்ட கேள்விகளுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
நமது மின்னம்பலம் யூடியூப் சேனலுக்கு மு.வீரபாண்டியன் அளித்த பேட்டி:
கேள்வி: தொகுதி பங்கீடு நிறைவடைந்துவிட்டது. வாழ்த்துக்கள். நான்கு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு ஐந்து அப்படிங்கிற ஒரு நம்பர்க்குள்ள தான் வர முடிந்தது. வேற வழியில்லாமல் இதற்குள் வரவேண்டிய ஒரு நிலைமையா?
மு. வீரபாண்டியன்: சூழல்தான். முதல்வர் கூறியது போல் அதிக கட்சிகள் அணி சேர்ந்திருக்கின்றன. எனவே அவர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். நாங்களும் எங்கள் இடங்களை விட்டுத் தருகிறோம், நீங்களும் ஒன்று விட்டுத் தாருங்கள் என்று முதல்வர் விடுத்த ஒரு வேண்டுகோள் அல்ல, ‘ஒத்துழையுங்கள்’ என்று அவர் கேட்டுக்கொண்டார். அந்த வகையில் நாங்கள் அதை பரிசீலனை செய்தோம். மூன்று கட்டம் பேசினோம். ஆறு இடங்களாவது எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டோம். விருப்பம் இருந்தாலும் சூழல் இடம் தரவில்லை, ‘ஒத்துழையுங்கள்’ என்று அவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க, ஒரு இடத்தை நாம் குறைத்துக் கொண்டாலும் நமது அரசியல் வெற்றி பெற வேண்டும். அரசியலுக்காக இருக்கிற நமது கூட்டணிக்கு எந்த நெருக்கடியும் வந்துவிடக் கூடாது. எனவே அந்த வகையில் அரசியலை மனதில் நிறுத்தி இந்த முடிவிற்கு நாங்கள் வந்தோம்.
கேள்வி ஆனா சிபிஎம் இன்னும் விடாப்பிடியாக அதுல இருக்காங்க. அதாவது கடந்த முறை ஆறு தொகுதி, அதையாவது பெற்றுவிட வேண்டும் அப்படிங்கிறதுல ஒரு உறுதியா இருக்காங்களோ?
மு. வீரபாண்டியன்: அது அவங்க உரிமை, அவங்க கடமை. அவங்க ஒரு கோட்பாடாகத் தான் அதை வலியுறுத்துகிறார்கள். அதை விடாப்பிடியாக அல்லது நெருக்கடி தருவதாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
கேள்வி: ஆனா எதன் அடிப்படையில் இப்போ நீங்க ஒரு 10 தொகுதி, 6 தொகுதி வேணும் அப்படின்னு இப்போ இந்திய கம்யூனிஸ்ட் கேட்கிறதை எப்படி புரிஞ்சுக்கிறது?
மு. வீரபாண்டியன்: இப்பொழுது நாங்கள் தமிழ்நாடு முழுதும் தனித்து இதுவரைக்கும் நிற்கல. உள்ளாட்சிகளில் அதுபோல் ஒரு சோதனைகளில் நாங்கள் ஈடுபட்டாக வேண்டும். எங்களுக்கென்று அமைப்பு இருக்கிறது, மக்கள் இருக்கிறார்கள், எங்களுக்கும் வாக்களிக்கிற ஏராளமான உழைக்கும் மக்கள் இருக்கிறார்கள். நல்ல சிந்தனையாளர்கள் இருக்கிறார்கள். ஏராளமான மாணவர் இளைஞர்கள் இருக்கிறார்கள். இன்னும் நாம அந்தப் பரிசோதனைக்கு நாங்க இன்னும் போகல. எதிர்காலத்தில் நாங்கள் அதைப் பரிசோதித்துப் பார்ப்போம். நாடு முழுதும் கிளைபரப்பி இருக்கிறோம், இயக்கங்கள் இருக்கிறது. நாங்கள் அரசியலாக இருக்கிறோம். எங்களுக்குரிய எண்ணிக்கை அல்ல இது. ஆனால் எண்ணிக்கைக்குள் எங்களை அடக்கிவிட முடியாது. சட்டமன்ற நாடாளுமன்ற எண்ணிக்கைக்குள் கம்யூனிஸ்ட்களை அடக்கிவிட முடியாது. அதைத் தாண்டியும் உழைக்கும் மக்களின் உரிமைப் போர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள், நாடு கடந்து உலகம் முழுவதும் இருக்கிற விடுதலைக்கான போராட்டங்கள்.. இதனுடன் நாங்கள் கொள்கிற நட்புறவு, இவற்றோடு எம்மை இணைத்துப் பார்க்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
கேள்வி: இல்ல மக்கள் உரிமைகளுக்காகப் போராடக்கூடியவர்களாக கம்யூனிஸ்ட்கள் என்றுமே பார்க்கப்படுவார்கள். ஆனா தமிழ்நாட்டுல அவர்களுடைய வாக்கு சதவீதம் அப்படின்னு பார்த்தா 1 சதவீதம் தான் இருக்கு. அப்ப இது ஏன் தொடர்ந்து கொண்டே இருக்கு? இதை அடுத்த கட்டத்துக்கு நீங்க உயர்த்துறதுக்கு என்ன செஞ்சிருக்கு கம்யூனிஸ்ட்?
மு. வீரபாண்டியன்: நிச்சயம் அடுத்து நாங்கள் அது குறித்து சிந்திப்போம். நாங்கள் 10 இடங்களில் போட்டியிட்டுவிட்டு 1 சதவீதம் என்கிறீர்கள் நீங்கள். இப்ப 200 இடங்களில் நாங்கள் போட்டியிடுகிற போதுதான் எங்களது முழு சதவீதம் வெளிப்படும். அந்த காலச் சூழல் எழும். நாங்களும் தமிழ்நாட்டில் நமக்குரிய இடம்தான் என்ன? மக்களிடம் நமக்குள்ள தொடர்புதான் என்ன? இதை போராட்டங்களின் மூலம் பலமுறை நாங்கள் சோதித்துப் பார்த்திருக்கிறோம். அங்கே வெற்றி அடைய முடிகிறது எங்களால். ஆனால் தேர்தலில் இன்னும் அந்த சோதனையில் நாங்கள் ஈடுபடவில்லை. எதிர்காலத்தில் உங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான மக்களின் கோரிக்கையும் அதுதான். அதை நோக்கி நாங்கள் பயணப்படுவோம் எதிர்காலத்தில். இப்பொழுது பிஜேபியை வீழ்த்தியாக வேண்டும். எனவே நாங்கள் கவனம் திரும்ப மாட்டோம். எங்களது குறியீடு முழுவதும் பிஜேபியை வீழ்த்துவது.
கேள்வி: ஆனா போராட்டங்கள்ல வெற்றி பெறுவோம் அப்படின்னு சொல்றீங்க. ஆனா சாம்சங் போராட்டமாக இருக்கட்டும், தூய்மைப் பணியாளர்கள் போராட்டமாக இருக்கட்டும், அந்த நேரத்துல மக்கள் பக்கம் கம்யூனிஸ்ட் நிக்கிறீங்க. ஆனா அதற்கான தீர்வைப் பெற்றுத் தர்றீங்களா?
மு. வீரபாண்டியன்: அதை முன்னெடுத்துப் போராடுவதும் தான் எங்களுடைய கொள்கை நிலை. தீர்க்க வேண்டிய இடத்தில் அரசு இருக்கிறது. தீர்க்க நாங்கள் நிர்ப்பந்திப்போம். எப்போதுமே உழைக்கும் மக்களின் பக்கம் நின்று குரல் எழுப்புவது தான் எங்கள் கொள்கை நிலை.
கேள்வி: ஆனா அதற்கான அந்தக் குரல் எழுப்புவதோட அடிநாதம் என்ன இருக்கும்? அந்த மக்களுடைய தீர்வு, மக்களுக்கான தீர்வு பெற்றுத் தருவது அப்படிங்கிறது. அப்ப இதோட என் கடமை முடிஞ்சிருச்சு அப்படின்னு நம்ம சொல்லிட்டுப் போக முடியுமா? அந்த அழுத்தத்தைக் கொடுக்க முடியாத நிலையில் அரசுக்குக் கொடுக்க முடியாத நிலையில தான் கம்யூனிஸ்ட் இருக்காங்களா?
மு. வீரபாண்டியன்: இல்ல கம்யூனிஸ்ட்களின் போராட்டம் இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும். இன்னும் ஒரு அழுத்தங்களை நாங்கள் தர வேண்டும். தீர்வுகள் வந்து இந்தியாவில் வெறும் அரசு வடிவம் சார்ந்து இல்லை. சட்ட வடிவம் சார்ந்தும் இருக்கு. சில தீர்வுகள் நீதிமன்றத்தால் பெறப்பட வேண்டியது இருக்கிறது. சில தீர்வு அரசால் அமைச்சர்களால் பெற வேண்டியது இருக்கிறது. எல்லாவற்றுக்கும் போராட்டம் தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் நடைபெற்ற எல்லா போராட்டங்களும் உரிமைக்கான போர் தான். அரசு கூடாது என்பதற்கான போராட்டங்கள் அல்ல. இதை இவ்வாறும் பார்க்கணும். ஏன்னா நடைபெறுகிற போராட்டமெல்லாம் அரசுக்கு எதிரான போராட்டம் போல் பிஜேபியும் அதிமுகவும் சித்தரிப்பது தவறு. இந்தப் போராட்டங்கள் யாவும் உழைக்கும் மக்களின் உரிமைப்போர். இந்தப் போரை ஒரு ஜனநாயக விரோதமாகப் பார்க்கக் கூடாது. இது ஜனநாயகத்தை வளர்த்தெடுப்பதற்கான போர் தான் அது. பல்வேறு நிலைகளில் முதல்வர் எங்களது கோரிக்கையை ஏற்றிருக்கிறார். பல கோரிக்கைகள் இன்னும் நிறைவேறாமல் இருக்கிறது. அடுத்து அவர்தான் ஆட்சிக்கு வருவார், இந்தக் கூட்டணி தான் வெற்றி பெறும். இந்தக் கோரிக்கைகளை முன்னெடுக்கிற முதல் கட்சியாக நாங்கள் இருப்போம், இடதுசாரிகள் இருப்போம்.
கேள்வி: என்னென்ன கோரிக்கைகள் இன்னும் தீர்க்கப்படாமல் ஒரு சிக்கலாகவே இருக்கு தமிழ்நாட்டுல?
மு. வீரபாண்டியன்: இல்ல எங்க இடம் வந்து அதிகாரத்துக்கான இடம் அல்ல. தமிழ்நாட்டில் அனைத்து உழைக்கும் மக்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக முதல்வரே ஒப்புக்கொள்ளவில்லை. இன்னும் பல கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். அதற்குரிய ஒன்றிய அரசு நிதி எங்களுக்குத் தர வேண்டிய நிதி ஒன்றிய அரசிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர் கோருவதை நாங்கள் வழிமொழிகிறோம்.
கேள்வி: ஆனா எல்லா இடத்துலயும் பாஜகவைக் கை காட்டிட்டே இங்க மாநில அரசியல்ல ஒரு முழு மூச்சாக இல்லாம இருக்கிறது தான் கம்யூனிஸ்ட்களுடைய இந்த நிலைமைக்குக் காரணம் அப்படிங்கிறதை எடுத்துக்கிறதா?
மு. வீரபாண்டியன்: இல்ல அது மிக மிக பிழையான கருத்தாகிவிடும். அரசியலில் பல கட்சி இயங்குமுறை கொண்ட அரசியலில் கட்சிகள் வெற்றி அடைவதும் தோல்வி அடைவதும் மிக இயல்பு. ஆனால் ஜனநாயகம் தோற்றுவிடக் கூடாது. இப்ப நீங்க இந்தியா உலகத்தில் வேறெந்த நாட்டிலும் நிலவாத நாடாளுமன்ற ஜனநாயகம். நாடாளுமன்றம் என்பதே சட்டம் இயற்றுகிற இடம். அங்க வெறும் குரல் வாக்கெடுப்பில் சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகின்றன. வெறும் கரங்களை உயர்த்தி சட்டம் நிறைவேற்றப்படுகிறது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்படுகிற தாக்குதல். இன்னொன்று இந்தியாவினுடைய விழுமியம் என்பது ஜனநாயக விழுமியம் என்பது பன்முகம். அதன் அடித்தளம் மதச்சார்பின்மை. இதை அப்பட்டமாக வெறுக்கிறது, சிதைக்கிறது பிஜேபி. ஜனநாயக விழுமியங்களைச் சிதைப்பது தான் பேராபத்து. எனவே அந்தப் பேரபாயத்தின் குறியீடாக இருக்கிற பிஜேபியை வீழ்த்துவது தான் அரசியலில் முதல் கடமை. இது வந்து வெறும் ஒரு கட்சியைத் தோற்கடித்து ஒரு கட்சி வெற்றி பெறுவதல்ல. அடுத்தடுத்த தலைமுறைக்காக நாட்டையும் ஜனநாயகத்தையும் கைமாற்றித் தருவதற்கான மகத்தான விழுமியம் தாங்கிய போர் இந்தப் போர். அப்படிப் பாக்கணும் இதை. இல்லனா எங்களுக்கு பிஜேபி மேல என்ன வெறுப்பு? மாண்புமிகு உள்துறை அமைச்சர், மாண்புமிகு பாரதப் பிரதமர் மீது எங்களுக்கு என்ன வெறுப்பு? நாங்கள் அவர்களை மதிக்கிறோம்.
கேள்வி: சரி, ஆனால் பெரும்பாலான மாநிலங்கள்ல இன்று பாஜக தான் அடுத்தடுத்து வெற்றி பெற்றுக்கொண்டே வருகிறது. ஆனா இதை எதிர்ப்பதற்கு பாஜகவை எதிர்ப்பதற்கு ஒரு வலுவான அணியாக கட்டமைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உருவானது தான் இந்தியா கூட்டணி. ஆனா இந்த இந்தியா கூட்டணி இன்றைய நிலைமை என்னவாக இருக்கிறது?
மு.வீரபாண்டியன்: கொள்கை போதாது, முன்னெடுப்புகள் போதாது, இடதுசாரிகள் போன்ற துடிப்பு அங்க தேவைப்படுகிறது. ஆனா அந்தத் துடிப்பு அங்க இருப்பதாகத் தெரியவில்லை. நிறைய மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும், அவர்களின் விருப்பார்வங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் இந்தியா கூட்டணி. ஆனாலும் ஒரு மாற்றம் தேவைப்படுகிறது. இடறினாலும் வீழ்ந்தாலும் ஒரு மாற்று இந்தியாவிற்கு அவசியம்.
கேள்வி: இடதுசாரிகள் போன்ற துடிப்பு தேவைப்படுகிறது அப்படின்னு சொல்றீங்க. ஆனா இடதுசாரிகளே தலைமையேற்றுச் செல்வதற்கு கூட அந்த கூட்டணி விரும்பவில்லை இல்லையா? அவங்களை முன்னெடுக்கவில்லையா? அப்ப அந்த இடதுசாரிகளுடைய நிலைமை என்னவாக இருக்கு அந்த இதுலையும்?
மு. வீரபாண்டியன்: இல்ல இடதுசாரிகளை நீங்கள் கடந்து போக முடியாது. நீங்கள் கொள்கைன்னா இங்கதான் வந்தாகனும்.. அப்ப மதச்சார்பின்மையை யார் முன்மொழிவது? அதற்கான போராட்டங்களை யார் முன்னெடுப்பது?
கேள்வி: அதான் காங்கிரஸ் இருக்காங்களே
மு.வீரபாண்டியன்: எங்க முன்னெடுக்கிறாங்க? அந்த போராட்டங்கள் நடந்தால் சந்தோஷம்..நாங்கள் பின்னாடி போகலாமே.. இந்த நேரத்தில் காங்கிரஸை குறைத்து மதிப்பிடவில்லை. காங்கிரஸ் ஒரு தேசியக் கட்சி. இப்போது போர் நடைபெறுகிறது. நமது அயலுறவுக் கொள்கை என்ன சொல்லுது? அணிசாராக் கொள்கையை முன்மொழிகிறது. காங்கிரஸ் அல்லவா இந்தப் போராட்டங்களை முன்னெடுத்திருக்கணும்? எடுக்கணும். நாங்க அதை விரும்புகிறோம். நேரு தானே பஞ்சசீலக் கொள்கையை உலகிற்கு அளித்தார். எனவே காங்கிரஸ் தான் இந்த முன்னெடுப்புகளை செய்யணும் அப்படின்னு காத்திருக்காமல் கம்யூனிஸ்டுகள் அதை முன்னெடுக்கிறோம். அரசியல் அது தானே. எனவே இந்த இடத்தில் நாங்க எங்கேயுமே இடறல. நாங்கள் எங்கள் பணிகளைச் செய்கிறோம். இன்னும் கூடுதலாகச் செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லுவீர்களானால் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
கேள்வி: ஆனா காங்கிரஸ் இந்தக் கூட்டணிக்குத் தலைமை ஏற்பதற்குச் சரியான ஒரு கட்சியா அப்படிங்கிற கேள்வி எழுந்திருக்கா இந்தக் கூட்டணிக்குள்ள?
வீரபாண்டியன்: இல்லை, அது பல்வேறு கருத்துக்கள் ஜனநாயகத்தில் வரும் இயல்பு. எங்களைப் பொறுத்தவரை எந்தக் கட்சித் தலைமை என்பதல்ல, எத்தகைய கொள்கை என்பதுதான்.
கேள்வி: இதை ஒப்பிட்டு நான் பேசுறேன் அப்படின்னு நினைக்க வேண்டாம். தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடைய தலைவர் திரு வேல்முருகன் அவர்கள். அவர் ஒருத்தர் தான் எம்.எல்.ஏ அந்தக் கட்சியில. ஆனா இப்போ சீட்டு கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை, ஒரு பத்து அம்ச கோரிக்கைகள் நான் வைக்கிறேன், இதை நீங்க நிறைவேற்றிக் கொடுங்க, அப்பதான் நான் கூட்டணிக்கு வர்றதைப் பற்றி யோசிக்க முடியும் அப்படிங்கிறது அவருடைய பேச்சாக இருக்கிறது. அவருடைய கோரிக்கையா இருக்கிறது. அப்போ அதுமாதிரியான ஒரு கோரிக்கைகளை ஏன் வந்து மற்ற கட்சிகள் வைக்கிறதுல கம்யூனிஸ்டு கூட ஏன் இப்ப தொழிலாளர் நலன் சார்ந்த சட்டங்களை நீங்க முன்னெடுங்க, அவங்களுக்கான திட்டங்களை எங்களுக்கு நிறைவேற்றிக் கொடுங்க அப்படின்னா இந்தச் சூழல்ல அவங்களும் பண்ண வேண்டிய ஒரு கட்டாயம் வருமில்லையா?
மு.வீரபாண்டியன்: இப்ப கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ, கட்சி அறிக்கையை நாங்க அந்தத் தேர்தல் அறிக்கையா நாங்க முன்மொழிய இருக்கிறோம். இப்பொழுது சட்ட வடிவில் இருக்கிற 100-க்குப் 90 சட்டமே எங்கள் முன்னோர்கள் போராடி அவர்களது சிந்திய இரத்தத்தால், அவர்கள் ஏகிய சிறையால், அவர்கள் சந்தித்த வழக்கால் பெறப்பட்டது தான்.
கேள்வி: சரி, அப்ப இப்ப மேனிபெஸ்டோ தயாராகிட்டு இருக்கு. 2021-ல நீங்க கொடுத்தீங்க இல்லையா தேர்தல் வாக்குறுதி, அதெல்லாம் நிறைவேற்றப்பட்டிருக்குன்னு உங்களுக்கு எண்ணம் இருக்கா? இல்ல அதுல எதுவும் மீதம் இருக்கா?
மு.வீரபாண்டியன்: அத முதலமைச்சர் சொல்றாரு. பல்வேறு கோரிக்கைகளை நான் நிறைவேற்றி விட்டேன், இன்னும் கோரிக்கைகள் இருக்கிறது. அந்த நிறைவேற்றப்படாத கோரிக்கைகளை அடுத்து மீண்டும் முதலமைச்சராக நான் வந்து நிறைவேற்றுவேன் என்கிறார். நாங்கள் அதை ஏற்கிறோம், நம்புகிறோம். அவ்வாறு செய்யத் தவறினால் செய்யுங்கள் என்று நாங்கள் குரல் எழுப்பி முதலமைச்சரைச் செய்யச் செய்வோம். முதலமைச்சரும் செய்வார் என்று நம்புகிறோம்.
கேள்வி: சி.பி.எம் மாநிலச் செயலாளர் சண்முகம் அவர்கள் கூட ஒருமுறை குறிப்பிட்டாங்க, களத்துக்கு நாங்களும் தான் போகணும் கூட்டணிக் கட்சி. இப்ப மக்களை நாங்களும் தான் சந்திக்கணும். நீங்க தேர்தல் வாக்குறுதியெல்லாம் நிறைவேற்றினால்தானே நாங்க பேச முடியும்னு கேட்டிருந்தாங்க. அந்த மாதிரியான விஷயங்கள் இருக்கா உங்களுக்கு?
மு.வீரபாண்டியன்: நிச்சயமா. தொடர்ந்து கோரிக்கைகள் இருக்கிறது, தொடர்ந்து மக்கள் போராடுகிறார்கள். எப்பொழுதும் நாங்கள் அதை முன்மொழிந்து கொண்டே இருக்கிறோம். அவர்களோடு சேர்ந்து நாங்கள் போராடுகிறோம். அவர்கள் பிடிக்கிற கொடியெல்லாம் செங்கொடி தான்.
கேள்வி: அதேசமயம் 2021 எனக்கு ஞாபகம் இருக்கிறது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும், சாதியக் கொடுமைகள் எல்லாம் நீங்க வேண்டும். இதற்கெல்லாம் நாங்க போராடுவோம், இதை வலியுறுத்துவோம் அப்படின்னு நீங்க கொடுத்திருந்தீங்க வாக்குறுதிகள் எல்லாம். இப்போ அந்த இடமெல்லாம் அப்படியே ஒரு பெண்டிங்ல இருக்கிற மாதிரியே இருக்கே?
மு.வீரபாண்டியன்: இல்லையே. இன்னைக்கும் சி.பி.ஐ, சி.பி.எம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, அதே போன்று தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், விடுதலை சிறுத்தைகள் நாங்கள் களமாடுகிறோம். பாதிக்கப்படுகிற இடங்களுக்கெல்லாம் நாங்க செல்கிறோம். ஒரு சட்ட வடிவம் கோருகிறோம். சட்டப் பாதுகாப்பைக் கோருகிறோம். தலையீடுகள் செய்கிறோம். அதுல தீண்டாமை ஒழிப்பு முன்னணியெல்லாம் ஒரு முன்கை எடுக்குறாங்க. எல்லாரும் கம்யூனிஸ்டுகள் தானே. அதே போன்று அறியப்படாமல் இருக்கிற மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் பெரும் பாதுகாப்பா இருக்குறாங்க. நான் சொல்றது பீகார்ல. அவங்களைத்தான் நக்சலைட்டுன்னு சொல்லி அரசு ஒடுக்குது. ஆனா அவங்கதான் பழங்குடி மக்களுக்கும் தலித் மக்களுக்கும் பேர் ஆதரவாக இருக்கிறாங்க. அவர்கள் மீதுதான் ஏராளமான வழக்கு. அவர்கள் தான் ஏராளமாக சிறையில் இருக்கிறார்கள். ஏற்ற இறக்கமாக நக்சலைட் என்றாலும் லெனினிஸ்ட் என்றாலும் மாவோ என்றாலும் சி.பி.ஐ, சி.பி.எம் என்றாலும் இதற்காகப் போராடுவதும் வழக்குகளைச் சந்திப்பதும் சிறை ஏகுவதும் இடதுசாரிகளாகத் தான் இருக்கிறோம்.
கேள்வி: ஆனா இவ்வளவு போராட்டங்கள் நடக்குது அப்படின்னாலே அங்க பிரச்சனைகள் அதிகமாக இருக்குன்னு தானே நம்ம எடுத்துக்க வேண்டியது இருக்கு. அப்போ அரசுப் பள்ளிகளோட தரம் என்னவாக இருக்கு அப்படின்னு நம்ம இப்ப எடுத்துக்கணும்?
மு.வீரபாண்டியன்: நீங்க என்ன சொன்னாலும் சொல்லுங்க, அரசுப் பள்ளி போல், அரசு மருத்துவமனை போல் ஒரு சிறப்பானது ஏதுமில்லை. இப்ப நீங்க அரசு மருத்துவமனைக்கு நிகரான மருத்துவம் – ராஜீவ் காந்தி மருத்துவமனை. இந்த மருத்துவமனைக்கு நிகரான மருத்துவமனை ஒன்னு சொல்லுங்க. கொரோனா வந்தது, அப்பல்லோ இழுத்து மூடிட்டாங்க. பெரிய பெரிய தனியார் மருத்துவமனை பயந்து மூடுனாங்க. ஒரு லட்சம் பேருக்கு மருத்துவம் பார்த்து மகத்தான சேவை செய்து வெற்றி பெற்றது ராஜீவ் காந்தி மருத்துவமனை. அரசு மருத்துவமனை.
கேள்வி: நல்லக்கண்ணு போன்ற தலைவர்களைத் தாண்டி யாரு அரசு மருத்துவமனையில இன்னைக்குச் சிகிச்சை பெறறா? எந்தத் தலைவர்கள் பெறறா?
மு.வீரபாண்டியன்: இல்ல, எல்லாருமே இடதுசாரிகள் எல்லாருமே நாங்கெல்லாம் எங்களுக்குலாம் அரசு மருத்துவமனையில தான் எப்ப போனாலும் நல்லபடி ட்ரீட்மென்ட் பண்ணுவாங்க.
கேள்வி: கம்யூனிஸ்ட் மட்டும்தான் அரசு மருத்துவமனையைப் பயன்படுத்திக்கிட்டு இருக்கீங்க.
மு.வீரபாண்டியன்: அப்படியும் சொல்ல முடியாது, எல்லா கட்சியிலயும் பிற கட்சியிலயும் அதைப் பயன்படுத்துகிற மனிதர்கள் இருக்கிறார்கள். தனியார் மருத்துவமனை கூடாதுன்னு நம்ம சொல்லல. அதுல போய் சிகிச்சை பெறக்கூடாதுன்னு நம்ம சொல்லல. நமக்கு இருக்கிற கோரிக்கையெல்லாம் என்னன்னா, அதனை விடச் சிறந்த மருத்துவர்கள் இங்கே இருக்கிறாங்க அரசு மருத்துவமனையில. கட்டமைப்புகள் இங்கே குறைவாக இருக்கிறது. அது குறித்து ஆழமாக அரசு சிந்திக்க வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். நாடு முழுவதுமே. ஒன்றிய அரசுக்கும் அந்தப் பார்வை வேண்டும், தமிழக அரசுக்கும் அந்தப் பார்வை வேண்டும்.
கேள்வி: கட்டமைப்புலே எடுத்துக்கிட்டோம் அப்படின்னா ஒரு பள்ளிக் கல்வித் துறைக்கு இலக்கு வைத்து அதை மேம்படுத்துவதற்காக உழைக்கலாம் ஒரு அரசு. ஆனா டாஸ்மாக்குக்கு ஒரு இலக்கு வைத்து இந்த அரசாங்கம் செயல்பட்டது அப்படிங்கிற குற்றச்சாட்டெல்லாம் எதிர்க்கட்சிகள் வச்சாங்க. இப்போ இது வந்து அடுத்த அரசியல் தேர்தல் அரசியல்ல இது எப்படி இருக்கும்னு நினைக்கிறீங்க?
மு.வீரபாண்டியன்: அது வந்து ஒரு நீண்ட நெடுங்காலமாக இருக்கிறது. மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து இருக்கிறது அந்தப் பழக்கம். ஆனா அங்கிருந்து பொருளீட்டுவது என்பது ஏற்புடையதல்ல. நமது ஏற்றுமதியில் குறிப்பாக விவசாயம், விவசாயம் சார்ந்த தொழில், காடு, காடு சார்ந்த தொழில், மலை, மலை சார்ந்த தொழிலில் கூடுதல் முன்னுரிமை அளிக்கப்பட்டு இங்கிருந்து ஏற்றுமதியாகுற பொருளிலிருந்து பெறப்படுகிற நிதி இருக்கிறது அல்லவா அதற்கு முன்னுரிமை நம்ம தரணும். நாடு தன்னியல்பில் தன்னியல்பில் கட்டமைப்புகளுக்கு உரிய முன்முயற்சிகளை அளிக்கணும். நாடு கடந்த நிறுவனங்களின் மூலதன முதலீடுகளுக்குப் பெரிய அளவில் முன்னுரிமை அளிப்பதை விட உள்ளூரில் மரபு சார்ந்த நீண்ட நெடுங்காலப் பண்பு பழக்கங்கள் சார்ந்த தொழில் இருக்கிறது அல்லவா அந்தத் தொழிலுக்கு, சிறு தொழிலுக்கு, குறுந்தொழிலுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்பதான் நாடு ஒரு பெரும் முன்னேற்றத்தை அடையும் என்பது எங்கள் கொள்கை.
கேள்வி: சரி களம் 2026. நான்கு முனைப் போட்டியாக இருக்கிறது. எப்படி என்ன எதிர்பார்க்கிறீங்க? எப்படி இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?
மு.வீரபாண்டியன்: மகத்தான வெற்றியை திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி பெறும். கூட்டணி வலுவால் மட்டும் நான் இதைச் சொல்லவில்லை. அரசின் நலத்திட்டங்கள் சிறப்பாக இருக்கிறது எனவே நாங்கள் வென்று விடுவோம் என்று மட்டும் நான் சொல்லவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ் மக்களின் ஒற்றுமை உணர்வு, தமிழ் மக்களிடம் இருக்கிற நல்லிணக்க கலாச்சாரம். இதான் எங்களுக்குப் பெரும் ஆதரவு. பிஜேபி ஒரு பதற்ற அரசியலைச் சுமந்து வருகிறது. தெரிந்தோ தெரியாமலோ அதிமுக துணை நிற்கிறது. எனவே பதற்ற அரசியலைத் தமிழ் மக்கள் விரும்ப மாட்டாங்க. அடிப்படைவாத அரசியலை மத அடிப்படைவாத அரசியலைத் தமிழ் மக்கள் எப்பொழுதும் விரும்ப மாட்டார்கள். மனிதர்களைப் பிரிக்கிற அரசியலைத் தமிழக மக்கள் எப்பொழுதும் விரும்ப மாட்டார்கள். இதையெல்லாம் சுமந்து வருகிறது பிஜேபி. அதன் அருகில் கரம் கோர்த்து வருகிறது அதிமுக. எனவே பிஜேபிக்கு அடிக்கிற அடி அதிமுகவுக்கு விழும், அதிமுகவுக்கு விழுற அடி பிஜேபிக்கு விழும். இந்த மக்களின் அந்த நற்சிந்தனை இருக்குதல்லவா கூட்டுச் சிந்தனை, இது எங்கள் கூட்டணிக்கு வலுவாக இருக்கும். எனவே தான் திமுக கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெறும், நாங்கள் வெல்வோம்.
கேள்வி: கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தல்ல அப்போ ஆட்சியில இருந்து தேர்தலைச் சந்தித்த அதிமுக-பாஜக கூட்டணி, அதே மாதிரி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு போட்டியிட்ட திமுக கூட்டணி. திமுக வந்தது. ஆனா இரண்டு பேருக்குமான அந்த இடைவெளி வாக்குச் சதவீதம் ஒரு மூன்றரை சதவீதம் தான். அப்போ அந்த அடி விழுந்திருக்கணுமோ?
மு.வீரபாண்டியன்: இப்ப வந்து பிஜேபி என்னவென்று உணர்ந்து விட்டார்கள். பிரதமர் பேசியிருக்கிற உரை, அமித்ஷா நடந்துகொள்கிற விதம் மிரட்டி மிரட்டி கூட்டணி அமைக்கிறார். மிரட்டுகிறவரால் மிரண்டு போனவர்களின் கூட்டணியாக இருக்கிறது. இதைத் தமிழ்நாட்டு மக்கள் நல்லாப் பார்க்குறாங்க. ஓகோ சுத்தி வளைக்கிறாங்க இவங்க. ஒவ்வொருத்தரையும் மிரட்டி மிரட்டி அணி சேர்க்கிறாங்க. எனவே இவர்களுக்கு நல்ல பாடத்தைக் கற்றுத் தர வேண்டும் என்று தமிழக மக்கள் காத்திருக்கிறார்கள். மக்களை அவ்வளவு எளிதில் ஏமாற்றி விட முடியாது. எங்களைப் போல் விருப்பப்பூர்வமான கூட்டணி அல்ல அந்தக் கூட்டணி. டெல்லிக்கு வரவழைத்து ஒவ்வொருவரையும் மேடையில் அமர்த்தி மிரட்டி மிரட்டி உருவாக்கப்பட்ட கூட்டணி. எனவே மிரட்டியவர்களும் மிரண்டு போனவர்களும் இருக்கிற போது கொள்கை இடம் தோற்றுப் போவார்கள். எனவே தான் நாங்கள் வரலாறு காணாத வெற்றியைப் பெறுவோம் என்று அறுதியிடுகிறோம்.
கேள்வி: இங்க திமுக காங்கிரஸ் கூட்டணி அமைந்த போது கூட அந்தப் பிரச்சனை வந்ததோ, இந்த மிரட்டிப் பார்க்கிறீங்களா அப்படிங்கிற பிரச்சனை வந்ததோ?
மு.வீரபாண்டியன்: இல்லை இல்லை அது உரையாடலில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். மிரட்டுவதற்கு அதிகாரம் யாரிடம் இல்லை. இந்த ஒன்றிய அரசிடம் குவிந்திருக்கிறது போல் அதிகாரம் யாரிடம் இல்லை. இங்க யாரும் உள்துறை அமைச்சர் போல் நடந்துகொள்வதில்லை. நாடு முழுதும் நம்ம பார்க்கிறோம். யாரை மிரட்டுவார்கள், யாரை அணி சேர்ப்பார்கள் பிறகு யாரை விழுங்குவார்கள். ஆக்டோபஸ் கரங்கள் கொண்டு என்று நாட்டுக்கே தெரியும். எனவே அதைத்தான் நாங்கள் சொல்லுகிறோம்.
கேள்வி: இதே செல்வப்பெருந்தகை அவர்கள் கூட சொல்லியிருக்கிறார், எங்களை ஒப்பிட்டு யாரும் பேசாதீங்க சீட்டு கேட்கறதுக்கு அப்படின்னு நான் வலியோடு சொல்றேன், எவ்வளவு பெரிய கட்சி எங்களுக்கு அப்படின்னு ஒரு வார்த்தையை கூறியிருக்கிறார். இதை எப்படி பார்க்கிறீங்க?
மு.வீரபாண்டியன்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுத்தவரை எப்போதும் இன்னொருவரை குறிப்பிட்டு நாங்க எங்கேயும் பேசல. மார்க்சிஸ்ட் கட்சி பேசியிருந்தாலும், அவர்கள் வந்து ஒரு காங்கிரஸ்ஸை சிறுமைப்படுத்தும் நோக்கத்துல மாநில செயலாளர் அவ்வாறு பேசவில்லை. பிறருக்கு தருகிற போது, பிறருக்கு இடங்களை எண்ணிக்கையில் அதிகரிக்கிற பொழுது அதற்குரிய நியாயங்கள் எங்களுக்கும் உண்டு அல்லவா என்கிற பொருளில் தான் அவர் சொன்னாரே தவிர, காங்கிரஸை வந்து குறைத்து மதிப்பிடவோ அதை எளிதில் கடந்து செல்கிற விதமாகவோ அவர் சொன்னதாக நான் கருதவில்லை.

கேள்வி: விஜய்யும் இந்த 2026 தேர்தலில் களத்துக்கு வந்த சூழலில், திமுகவுக்கு கூட்டணி கட்சிகள் ஒரு மறைமுக நெருக்கடி அப்படின்னு தான் நம்ம இதை எடுத்துக்கணுமா? காங்கிரஸ் அதிக இடங்கள் கேட்டதாக இருக்கட்டும், நீங்களும் நான்கு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒப்புக்கொண்டாலும் சரி, இன்னும் விசிக இருக்கு, தேமுதிக இருக்கு, அப்ப திமுக ஒரு நெருக்கடியான சூழ்நிலையை தான் இருக்குதா?
மு.வீரபாண்டியன்: மிக இயல்பு அது. அங்கே ஒரு ஜனநாயக இடம் இருக்குதுன்னு இதற்கு பொருள். கேட்க முடியும், உரையாடல் செய்ய முடியும், நிறைவில் ஒரு தீர்வை எட்ட முடியும் என்பதற்குரிய இடம் இங்கே இருக்கிறது. ஒரு சின்ன டோன் கூட நான் முதல்வரிடத்தில் இதுவரைக்கும்… ஏன்னா நான் சொல்றத கேளுங்க அப்படின்னு அவர் சொல்லல. ஏன்னா தெரியும், அரசியல் இயக்கம் அரசியல் கட்சி என்பது அவருக்கு நல்லா தெரியும். எனவே அதற்குரிய மதிப்போடு தான் அணுகிறார். அதற்குரிய சமமான தோழமையோடு தான் நாங்களும் அணுகுகிறோம். நான்கு கட்டம் பேசிருக்கிறோம் பாருங்க, அங்க இடம் இருக்கு எங்களுக்கு. இருந்து சொல்றோம்ல, சொல்ல முடியுதுல, அதை நான் ஓப்பனா வந்து பத்திரிகையில சொன்னேன். ஒரு இடத்துலையும் கட்டளையிடவில்லை. ஒரு இடத்திலும் சுயமரியாதைக்கு பாதிப்பு வருவது போல் அவர் நடந்து கொள்ளவில்லை. ரொம்பவும் தோழமையாக நடந்து கொள்கிறார். நாங்களும் விருப்பப்பூர்வமாக நடந்து கொள்கிறோம்.
கேள்வி: அதே சமயம் இவ்வளவு கட்சிகளையும் சேர்க்க வேண்டிய சூழலும் இந்த திமுக கூட்டணிக்கு, திமுகவுக்கு ஏற்பட்டிருக்கிறதா விஜய் வரவால்?
மு.வீரபாண்டியன்: விஜய் வரவால் இல்ல. அந்த சோசியல் இன்ஜினியரிங் அப்படின்னு இந்தியாவினுடைய உள்துறை அமைச்சர் இறங்கிடுவார். ஒரு ஒரு மத்திய அமைச்சருக்கும் ஒரு ஒரு தெருவை பொறுப்பு போட்டு எல்லாரையும் சுற்றி வளைப்பதற்குரிய முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுடுவாங்க. எனவே அவர்கள் முன் முயற்சி எடுப்பதற்கு முன்னால் சிறு துரும்பு என்றால் அதை சேர்த்து இந்த யுத்தத்தில் அவர்களை வீழ்த்த வேண்டும் என்று முதல்வர் ஒரு யுத்த, ஒரு போர் தந்திரத்தை வகுக்கிறார். அப்படித்தான் நான் கருதுகிறேன்.
கேள்வி: அவ்வளவு பலமா தேசிய ஜனநாயக கூட்டணி?
மு.வீரபாண்டியன்: அவ்வளவு ஆபத்து. தேர்தல் கூட்டணி பலம், வாக்கு பலம் என்றால் நாங்கள் பலம். ஆனால் கருத்தியல் மிக மோசமான ஆபத்தாக இருப்பதால் இதை எப்படியாவது வீழ்த்த வேண்டும்.
கேள்வி: அந்த கருத்தியல் தமிழ்நாட்டு மக்களிடம் எடுபடாதுன்னு நீங்க தான் பேச்சுக்கு பேச்சு சொல்லுவீங்க?
மு.வீரபாண்டியன்: நிச்சயமா. எடுபடாததுனால வீழ்த்தணும்ல. வீழ்த்தி தான அதை நிறைவேற்றணும். எடுபடாதுன்னு சொல்லிட்டு அமைதியா இருக்க முடியாது இல்ல. வீழ்த்தணும்ல.
கேள்வி:சரி அதே சமயம் விஜய்யுடைய அரசியல் வருகை. இப்ப அவரும் வந்து இப்ப கூட்டணி அப்படிங்கிற மாதிரி பேச்சுவார்த்தை இப்ப தனித்து அப்படிங்கிறது உறுதியாயிட்டார். சரிங்க. அப்ப அவருடைய அந்த தனித்துப் போட்டி அப்படிங்கிறது எப்படிப்பட்ட சூழலை உருவாக்கும் இந்த தேர்தல்ல?
மு.வீரபாண்டியன்: அரசியல்ல பல கட்சி இயங்குமுறை கொண்ட ஒரு தேசத்தில் யாரும் கட்சி அமைக்கலாம். அவர் அமைக்கிறார். நேற்று வரை அவர் நடிகர், இன்று ஒரு கட்சியின் தலைவர் நாம் மதிக்கிறோம். எளிதில் கடந்து செல்ல நாங்கள் நினைப்பதில்லை. அங்க இருக்குறவங்க எல்லாம் சிறிய வயது அவங்களுக்கு என்ன தெரியும் அப்படின்னு நாங்க ஒருபோதும் கருதுவதில்லை. அது ஒரு கட்சி. ஆனால் அந்த ஒரு கூட்டத்தை வைத்தே நாங்கள் மதிப்பீடு செய்து விடுவதில்லை. நிறைவில் கொள்கை சீர்தூக்குவார்கள் மக்கள். அப்படின்னா கொள்கை கூட்டணி எது என்று பார்த்து தான் வாக்களிப்பார்கள். மக்கள் நிச்சயமாக திமுகவுக்கு தான் வாக்களிப்பார்கள் மக்கள். எம்ஜிஆர் போன்ற மிக பிரபலமான மனிதர்கள் இருந்த போதே திமுகவினுடைய வாக்கு வங்கி சரிந்தது இல்லை. அது ஒரு சாலிடான அந்த வாக்கு வங்கி. இன்னும் பல கட்சிகள் நாங்கள் சேர்ந்திருக்கிறோம். எல்லோருக்குமே ஒரு இடம் இருக்கிறது. எல்லாம் கூட்டி கழித்து பார்க்கிற போது ஒரு பிரம்மாண்டமான வெற்றியை நாங்கள் தான் பெறுவோம்.
கேள்வி: இல்ல எம்ஜிஆர் இருந்த போது கூட அந்த வாக்கு சதவீதம் குறையவில்லை என்றாலும் எம்ஜிஆர் இருக்கிற வரைக்கும் திமுக ஆட்சிக்கு வர முடியல. அது மாதிரி இங்கே என்ன மாதிரியான யாருடைய வாக்குகள் பிரியும்? வாக்கு சதவீதத்தை நீங்க வச்சுக்காட்டி வெற்றி என்று பார்க்கும்போது, சீட்டுன்னு பார்க்கும்போது…
மு.வீரபாண்டியன்: திமுக ஆட்சிக்கு வர முடியாததற்கு காரணம் அன்னைக்கு நாங்க சிபிஐ, சிபிஎம் எல்லாம் இருந்தோம். கம்யூனிஸ்ட்கள் இருந்தோம். எனவே தனித்தே அப்படி ஒன்றும் வெற்றி பெற்று விட முடியாது. எப்பவுமே துணை தேவைப்படுகிறது. அதையும் நீங்க சேர்த்து பார்க்கணும். இன்னைக்கு விஜய்யிடம் அப்படி இல்ல, சீமானிடம் அப்படி இல்ல. திமுகவிடம் அது இருக்கிறது. எல்லா ஜனநாயக சக்திகளும் இங்க இருக்கு. எல்லா இடதுசாரி சக்திகளும் இங்க இருக்கிறோம். இதை தாண்டி ஒரு எந்த கட்சியும் சாராத அரசியலை மிக விழிப்பாக கண்ணுறுகிற மக்கள் இருக்கிறாங்க. அவங்க வாக்களிப்பாங்க. அவங்க ரொம்ப சீர்தூக்குவாங்க. எது பேராபத்து, எது வந்துவிடக் கூடாது அப்படிங்கிறதுல ரொம்ப உறுதியா இருப்பாங்க.
கேள்வி: அப்ப திமுக தனித்து நிற்பதை விட கூட்டணி கட்சிகளுடைய பலம் அதை வந்து வெற்றி பெற வைக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?
மு.வீரபாண்டியன்: அதை திமுக கூட மறுக்கவில்லையே. கொள்கை மட்டுமல்ல, திட்டங்கள் மட்டுமல்ல, கூட்டணி பலமும் தான் சொல்றாரு முதல்வர். அப்புறம் என்ன? அவரே முன்மொழிகிறாரே.
கேள்வி: சீமான் அவர்களுடைய அந்த தேர்தல் அறிக்கை வெளியாகி இருக்கிறது. அதுல உள்ள அந்த விஷயங்கள் பற்றிய உங்களுடைய பார்வை என்னவா இருக்கு?
மு.வீரபாண்டியன்: இருந்தா நல்லது, நல்லது தான் சொல்றாரு நல்லா இருக்கட்டும். நல்லது தான். தமிழ் தேசியத்தோடு எங்களுக்கு ஒன்றும் எந்த முரணும் இல்லை. தமிழ் தேசியம் இந்தியாவின் கூட்டிசைவோடு இருக்க வேண்டும் என்பது தான் நாங்கள் விரும்புகிறோம். உலகத்திற்கே மொழி வழி தேசியம் சம்பந்தமான இலக்கணத்தை வகுத்தளித்தது லெனின், தோழர் ஸ்டாலின்.
கேள்வி: எதிர்கட்சிகள் எல்லாம் குற்றம் சாட்டுவது சட்டம் ஒழுங்கு அப்படிங்கிறதுல இங்க பிரச்சனை இருக்கு தமிழ்நாட்டுல அப்படிங்கிறத திரும்பத் திரும்ப அதை வலியுறுத்துறாங்க. இப்ப இந்த இடம் எல்லாம் உங்களுக்கு எப்படி இருக்கிறது?
மு.வீரபாண்டியன்: எதிர்கட்சிகள் செய்வது திட்டமிட்ட பொய் பிரச்சாரம். மாண்புமிகு முன்னாள் அமைச்சர் அன்புமணி அவர்கள், சகோதரர் அன்புமணி அவர்கள் திமுக ஆட்சியில் சென்னை கொலை நகரம் என்றார். அது உண்மையா அது? ஆயிரம் ஆண்டுகளில் ஜாதி கலவரம், மதக் கலவரம் நடைபெறாத உலகத்தின் தலைசிறந்த நகரம் சென்னை. அதை கொலை நகரம்றாரு. அதை மத்திய அமைச்சர்கள், பிரதமர் உட்பட அதை ரசிக்கிறாங்க. இது எவ்வளவு பெரிய பிழை அது.
கேள்வி: இல்ல புள்ளி விவரங்கள் எல்லாம் சொல்றாங்க அரசு தரப்பில் இருந்தும். ஆனா நம்ம கண் முன்னாடி பொதுமக்கள் பார்வைக்கு தானே இருக்கு. ரோட்ல ஓடவிட்டு விரட்டுறது, இதெல்லாம் வந்து எந்த கணக்குல எடுத்துக்கறது?
மு.வீரபாண்டியன்: இல்ல, இல்லை இதை நான் மறுக்கவே இல்லை. இந்தியாவில் இதுபோல் கலவரங்கள் இருக்கு. கொலைகள் உண்டு. பாலியல் கொடுமைகள் உண்டு.
கேள்வி: தமிழ்நாட்டுல?
மு.வீரபாண்டியன்: இந்தியா முழுவதுமே, தமிழ்நாடு உட்பட எல்லா இடங்களும் அங்கொன்றும் இங்கொன்றும் உண்டு. இதுல இவ்வாறு நடைபெற்றால் முதல்வர் எந்த பக்கம் இருக்கிறார்? குற்றவாளிகள் பக்கமா இருக்கிறார்? குற்றவாளிகளை நீதியின் முன்னால் நிறுத்துகிற தண்டிக்கிற இடத்தில் இருக்கிறார்.
கேள்வி: இப்ப இந்த தூத்துக்குடி மாவட்டத்தில் அந்த பெண் வந்து கொலை செய்யப்பட்டிருக்கிறார். இத்தனை நாட்கள் ஆயிருச்சு. இன்னைக்கு தான் வந்து அந்த குற்றவாளியே கண்டறிஞ்சு இருக்கிறோம் அப்படிங்கிறாங்க. அப்ப என்ன அங்க நடக்குது?
மு.வீரபாண்டியன்: இல்லை எந்த தாமதமும் எந்த தாமதமும் கூடாது. பாதிக்கப்படுபவர்களின் பக்கம் அரசு இருக்க வேண்டும். நீதி வழங்கப்பட வேண்டும். அந்த கொள்கை எங்கள் கொள்கை. நீங்க நமது நிர்வாகம் இருக்கிறதே.. ஒட்டுமொத்தமான நிர்வாகம் ஐபிஎஸ், ஐஏஎஸ், ஐஎஃப்எஸ். இதெல்லாம் வந்து ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பின் அங்கம் தான். இந்த அதிகாரம் படைத்தவர்கள் வந்து அதிகாரம் தனக்கு மக்கள் அளிப்பதை மறந்து விடுகிறார்கள். இவங்க எல்லோருமே வேலையாட்கள். மக்கள் தான் எஜமானர்கள். அந்த கலாச்சார வடிவம் பெறணும் அதிகார வர்க்கம்.
கேள்வி: இல்ல இதை கட்டுப்படுத்த வேண்டிய இடத்தில் நிர்வாகம்னு ஒன்னு இருக்கு இல்லையா? முதல்வர் கட்டுப்பாட்டின் கீழ் தானே இந்த துறை வருகிறது.
மு.வீரபாண்டியன்: நிச்சயமாக. முதல்வர் பலமுறை வேண்டுகோள் விடுக்கிறாரு. ஐபிஎஸ், ஐஏஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளை வைத்துப் பேசுகிறாரு. ஆனாலும் இந்த சமூக அமைப்பு நீடிக்கிற வரை அந்த சிந்தனையில் பெரும் மாறுதல் வராது. எனவேதான் இந்த சமூகத்தையே புரட்டிப் போட வேண்டும் என்று நாங்கள் துடிக்கிறோம்.
வீடியோ
