கல்குவாரியில் இளைஞர் சடலம் மீட்பு.. திமுக எம்எல்ஏ பழனியாண்டி மகன் மீது அரசியல் கட்சிகள் புகார்

Published On:

| By Pandeeswari Gurusamy

stone

திண்டுக்கல் நத்தம் அருகே தனியார் கல்குவாரியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள செந்துறை அடுத்துள்ள சரளைபட்டியில் இயங்கி வரும் தனியார் கல்குவாரியில், சில மாதங்களாக சரளைபட்டியை சேர்ந்த மூக்கன் மகன் கருப்பசாமி (வயது 25) என்ற இளைஞர் சுற்றித் திரிந்த நிலையில் 10 நாட்களுக்கு முன் காணாமல் போனதாக உறவினர்கள் தேடி வந்தனர். அவர் மன நிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர், நத்தம் காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றர்.

ADVERTISEMENT

இது குறித்து அதிமுக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,”ஸ்ரீரங்கம் திமுக MLA பழனியாண்டியின் மகன் விஜயபாரதிக்கு சொந்தமான குவாரி ஒன்றில், திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டியில் 10 நாட்களுக்கு முன்பு காணாமல் போன இளைஞர் கருப்பசாமி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.

ஏற்கனவே, தனக்கு சொந்தமான குவாரியில் சட்டவிரோத நடவடிக்கை இருப்பதாக வந்த குற்றச்சாட்டு குறித்து செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர் மற்றும் கேமராமேன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தி, தனது திமுக ஆளுங்கட்சி பலத்தால் மறைக்க முயன்றவர் தான் இந்த குண்டரும், திமுக MLA-வுமான பழனியாண்டி.

ADVERTISEMENT

மறுபடியும் அவர் மகனுக்கு சொந்தமான குவாரியில் ஒரு சடலம் என்பது பல்வேறு கேள்விகளை மக்களிடையே எழுப்புகிறது.

எந்த பாரபட்சமும் பாராமல், இளைஞர் கருப்பசாமியின் மரணம் குறித்து சட்டப்பூர்வமாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பதிவில், “திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே, 10 நாட்களாக காணாமல் தேடப்பட்டு வந்த கருப்பசாமி என்ற இளைஞர் உடல், அந்தப் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியில், பத்து அடி ஆழத்தில் இருந்து, அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், சந்தேகத்தையும் அளிக்கிறது.

ஏற்கனவே சில நாட்கள் முன்பு, இளைஞர் கருப்பசாமியைத் தேடி, இந்தக் குவாரியில் விசாரித்தபோது, அவர் அங்கு வரவில்லை என்று கூறியதாகத் தெரிகிறது.

இந்தக் குவாரி, ஶ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டிக்குத் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்தப் பழனியாண்டி, ஊடகவியலாளர்களையே கடத்தி தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகியிருந்தது. ஆனால், திமுக எம்எல்ஏ என்பதால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தற்போது, ஒரு இளைஞர் உயிர் பறிபோயிருக்கிறது. இது விபத்தா அல்லது கொலையா என்பது குறித்த முழுமையான விசாரணை நடைபெற வேண்டும். எனவே, இந்த குவாரி நிர்வாகம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள அரசியல் தொடர்புகள் குறித்து முழுமையான விசாரணை நடத்தி உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்று காவல்துறையை வலியுறுத்துகிறேன்.”என தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டியில் உள்ள கல்குவாரி ஒன்றில், அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞரின் உடல் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் பின்னணியில் பல மர்மங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சரளைப்பட்டி கல்குவாரியை திருவரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவரது மகன் விஜயபாரதி பெயரில் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்ற இளைஞரை கடந்த 10 நாள்களாக காணவில்லை.

கருப்பசாமி காணமல் போன சில நாள்களிலேயே சந்தேகத்தின் அடிப்படையில் அவரது உறவினர்கள் கல் குவாரிக்கு சென்று விசாரித்த போது, அங்கு அவர் வரவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போது அவரது உடல் அங்கிருந்து அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.

திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டியின் சாகசங்கள் ஒட்டுமொத்த தமிழ்நாடும் அறிந்தவை தான். கரூர் பகுதியில் அவருக்கு சொந்தமான குவாரியில் நடக்கும் முறைகேடுகள் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற தொலைகாட்சி செய்தியாளர்கள் குழுவை அவர் கடத்திச் சென்று தாக்கியதும், அந்த வழக்கில் அவர் கைது செய்யப்படாமல் இன்று வரை சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருப்பதையும் நாடே அறியும்.

எனவே, சரளைப்பட்டி கல்குவாரியில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர் கொலை செய்யப்பட்டாரா? அதன் பின்னணியில் வேறு சதித் திட்டங்கள் உள்ளனவா? என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த தமிழக அரசு ஆணையிட வேண்டும்.”என வலியுறுத்தி உளளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது எக்ஸ் பதிவில், ”திண்டுக்கல் மாவட்டம் சரளைப்பட்டியில் இயங்கி வரும் ஸ்ரீரங்கம் தொகுதியின் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டியின் மகனுக்குச் சொந்தமான குவாரியில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருப்பதாக ஊடகங்களிலும், நாளிதழ்களிலும் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.

ஏற்கனவே, இதே திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு பழனியாண்டி அவர்களுக்குச் சொந்தமான குவாரியில் சட்டவிரோதச் செயல்கள் நடைபெறுவதாகக் கூறி செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.பழனியாண்டி அவர்களின் குடும்பத்திற்குச் சொந்தமான குவாரியில் நடைபெற்றிருக்கும் இந்த சந்தேக மரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தி, தொடர்புடைய அனைவரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறேன்.” என தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share