திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து நலம் விசாரித்தது தனிப்பட்ட முறையிலானது; கூட்டணி குறித்து உரிய நேரத்தில் தெரிவிப்போம் என்று தேமுதிக (DMDK) பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.
சென்னையில் முதல்வர் ஸ்டாலினை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, பொருளாளர் எல்.கே.சுதீஷ் உள்ளிட்டோர் இன்று ஜூலை 31-ந் தேதி சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் உடல்நலனை விசாரிக்க சென்றோம். “நான் நல்லா இருக்கிறேன்.. இன்று முதல் பணிகளைத் தொடங்குகிறேன்” என்று சொல்லி தலைமை செயலகம் செல்வதற்கு ரெடியாக இருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

விஜயகாந்த்- கலைஞர்- ஸ்டாலின்
எங்கள் திருமணம் நடந்தது கலைஞர் தலைமையில்தான். கேப்டனுக்கும் (விஜயகாந்துக்கும்) கலைஞருக்குமான நட்பு 40,45 ஆண்டுகாலம். அப்போதிருந்தே ‘அண்ணன்’ ஸ்டாலின் அவர்களும் கேப்டனுடன் மிகப் பெரிய நட்பில் இருந்தார்.
கேப்டன் பல முறை மருத்துவமனை சென்று வந்தாலும் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் உடனடியாக போன் செய்து முதல்வர் ஸ்டாலின் நலம் விசாரிப்பார்; நேரில் வந்தும் சந்தித்திருக்கிறார். அதே மாதிரி கேப்டன் குணமாக வேண்டும் என்றும் பல அறிக்கைகளையும் வெளியிட்டிருந்தார் முதல்வர் ஸ்டாலின்.

விஜயகாந்திடம் ஆசீர்வாதம்
ஒவ்வொரு முறையும் மேயராக இருந்தாலும் அமைச்சராக, துணை முதல்வராக இருந்தாலும் கேப்டனை சந்தித்து ஆசீர்வாதம் வாங்குவார் ஸ்டாலின்.
குடும்பம், நட்பு ரீதியாக..
இப்ப ஸ்டாலின் , முதல்வராக இருக்கிறார். அவருக்கு உடல் நிலை சரியில்லை என்கிற போது குடும்ப ரீதியாக, நட்பு ரீதியாக நேராக போய் சந்தித்தோம். எங்களுடன் தேமுதிக நிர்வாகிகள் சுதீஷ், பார்த்தசாரதி வந்திருந்தனர். ரொம்ப சந்தோஷமாக இருந்தார்..நல்லா இருக்கேன் என்றார்.. சீக்கிரம் நீங்கள் குணமடைய வேண்டும் என கேப்டன் சார்பாக, தேமுதிக சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு வந்தோம்.
அரசியல் சந்திப்பு இல்லை
இந்த சந்திப்பை பத்திரிகையாளர்கள்தான் அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர். எங்களைப் பொறுத்தவரையில் இது நட்பு ரீதியானது;அவங்க, எங்க குடும்பத்தின் மீது வைத்த பற்றும் நாங்க அவங்க குடும்பத்தின் மீது வைத்த பற்றும் காரணமாகவே 100% அவரது உடல்நிலை குறித்து அக்கறை தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே சென்றோம். இந்த சந்திப்பின் போது, அண்ணி இருந்தாங்க.. உதயா இருந்தார்.. அமைச்சர்கள் இருந்தாங்க.. எல்லோரிடமும் பேசிவிட்டு வந்துள்ளோம்.

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம்
நாங்கள் தேமுதிகவின் வளர்ச்சியில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்துகிறோம். ஆகஸ்ட் 3-ந் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் நாங்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறோம். கும்மிடிப்பூண்டி முதல் குமரி வரை முதல் கட்ட பயணம், 2-ம் கட்ட பயணம், 3-ம் கட்ட பயணம் மேற்கொள்கிறோம். கடலூரில் ஜனவரி 9-ல் மாநாடு நடத்துகிறோம். எங்களுடைய பணிகள் தற்போது தேமுதிகவை வலிமைப்படுத்துவதுதான். தேமுதிகவின் நிர்வாகிகள், மக்களை சந்திப்பது என்கிற அடிப்படையில்தான் எங்கள் பணிகள் இருக்கின்றன. அதனால்தான் “இல்லம் தேடி உள்ளம் நாடி” என்ற முழக்கத்துடன் நிர்வாகிகளை சந்திக்கப் போகிறோம். கேப்டனின் ரத யாத்திரை- மக்களை சந்திக்க மக்கள் தலைவர் என்ற நிகழ்ச்சியையும் நடத்த இருக்கிறோம்.
கூட்டணி குறித்து?
நீங்கள் கேட்பதைப் போல, யார் யாருடன் கூட்டணி? என்பதை முன்கூட்டியே சொல்ல இயலாது. அதற்காக நேரம் வரும் போது நிச்சயமாக உங்களுக்கு அறிவிப்போம். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.