காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நேற்று (அக்டோபர் 2) வடகலை தென்கலை பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் துப்புல் வேதாந்த தேசிகர் மங்களா சாசன உற்சவம் நேற்று நடைபெற்றது. அப்போது துப்புல் வேதாந்த தேசிகர் மங்களா சாசன உற்சவத்திற்காக காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் கோவிலுக்கு வருகை தந்த வேதாந்த தேசிகர் முன்பு தாத்தாச்சாரியார்கள் வகையறாவினர் மற்றும் வடகலை பிரிவினர் பாடல் பாடுவது மரபாக உள்ளது.
இந்நிலையில் நேற்று மாலை வேதாந்த தேசிகர் முன்பு தாத்தாச்சாரியார்கள், வடகலை பிரிவினர் பாடல்களை பாடினர். அப்போது மணாவள மாமுனிகளை ஆச்சாரியராக கொண்ட தென்கலை பிரிவினரும் பாடல்களை பாட முற்பட்டனர்.
இதனால் வடகலை பிரிவினர் தென்கலை பிரிவினரை பாடல் பாட அனுமதிக்க கூடாது என கோவில் நிர்வாக அறங்கவலரும், உதவி ஆணையருமான ராஜலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விஷ்ணு காஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர சுப்பிரமணியன் தலைமையில் போலீசார் வரவழைக்கப்பட்டதை தொடர்ந்து வடகலை பிரிவினரிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
இதைத்தொடர்ந்து வடகலை பிரிவினர் நீதிமன்றத்தில் முறையிடப் போவதாக கூறியதையடுத்து தென்கலை பிரிவினர் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.