மழைக்காலங்களில் கூடுதல் கவனத்துடன் நெல் கொள்முதலை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த சமயத்தில் குறிப்பாக நவம்பர், டிசம்பரில் அதிகளவு மழை பெய்யும். இதனால் கடந்த காலங்களில் பயிர்கள் நீரில் மூழ்கி போவது, நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவது போன்ற காரணங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று(2.10.2025) முகாம் அலுவலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், கடலூர், திருச்சிராப்பள்ளி மற்றும் அரியலூர் ஆகிய டெல்டா மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நெல் கொள்முதல், சேமிப்பு, இருப்பு, நகர்வு, அரவை மற்றும் உரங்கள் இருப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மாவட்டவாரியாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களின் எண்ணிக்கை, இருப்பு, சேமிப்பு, நகர்வு, கிடங்கு வசதி மற்றும் உரங்கள் இருப்பு ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தங்கள் மாவட்டத்தில் தற்போது நடைபெற்றுவரும் கொள்முதல் பணிகள், அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவை குறித்து எடுத்துரைத்தனர்.
தொடர்ந்து, ‘கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை சேமிக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சேமிப்புக் கிடங்குகள் மட்டுமின்றி, வேளாண் துறையின் கீழ் வரும், வேளாண் விற்பனைத் துறை சேமிப்புக் கிடங்குகளையும், வேளாண் உற்பத்தித் துறையில் உள்ள ஒரு இலட்சம் மெட்ரிக் டன் கிடங்கு வசதியினையும்;
வேறு பல துறைகளின் கிடங்குகளையும் தேவைப்படும் இடங்களில் பயன்படுத்திக்கொள்ளவும், கொள்முதல் செய்யப்படும் நெல் உடனடியாக அரவை ஆலைகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளுக்கு கொண்டு செல்லும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும்’ என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
அதுமட்டுமின்றி, டெல்டா மாவட்டங்களுக்கு சிறப்பு கண்காணிப்பு அலுவலர்களை நியமித்திடவும், வேறு மாவட்டங்களிலிருந்து கூடுதல் அலுவலர்களை அனுப்பி பணிகளை மேற்பார்வையிடவும் அறிவுறுத்திய முதல்வர், ‘நெல் கொள்முதல் நிலையங்களில் 2025 – 26 ஆம் ஆண்டில் மிக அதிகமாக நெல் கொள்முதல் எதிர்பார்க்கப்படுவதால் அனைத்து இடங்களிலும் போதுமான எண்ணிக்கையில் பணியாளர்கள் இருப்பதையும், விவசாயிகளுக்கு எவ்விதச் சிரமமும் இன்றி கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப்படுவதையும் உறுதிப்படுத்திட வேண்டும் என்றும்,
டெல்டா மாவட்டங்களின் நெல் கொள்முதல் நிலையங்கள் மற்றும் கிடங்குகளிலிருந்து கூடுதல் இரயில்வே வேகன்கள் மூலம் பிற மாவட்டங்களுக்கு விரைந்து நெல் மூட்டைகளை அனுப்பிடவும்
மழைக்காலங்களில் கூடுதல் கவனத்துடன் நெல் கொள்முதலைச் சிறப்பாகச் செய்திடவும், உரத் தேவையை நிறைவு செய்திடவும், நெல் சேமிப்பு மற்றும் நகர்வைத் துரிதப்படுத்தவும், டெல்டா மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார் முதல்வர் ஸ்டாலின்.
