வைஃபை ஆன் செய்ததும், ‘பெருந்துயர இருள்வலி- இமை மூட மறுக்கிறது’ என்றபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.
கரூர் துயரத்தில் இருந்து எழுவதற்குள் பரபரன்னு அரசியல் நிகழ்வுகள் நடக்குதே..
ஆமாய்யா.. கரூர் முழுவதும் மரண ஓலம் கேட்டப்ப அங்க தங்காமல், அந்த மக்களை பார்க்காமல் சென்னைக்கு விஜய் வந்தது ரொம்பவே விமர்சிக்கப்படுது..
இன்னொரு பக்கம், கரூர் சம்பவத்தால ரொம்பவே அப்செட் ஆகியிருப்பது விஜய் மட்டுமல்ல அவரோட அட்வைசர் ஜான் ஆரோக்கியசாமியும்தானாம்.. சனிக்கிழமை நைட் போனை ஸ்விட்ச் ஆப் செஞ்சவரு நேற்று காலையிலதான் ஆன் செஞ்சாரு.. இப்ப பலரிடமும் ஜான் பேசினாலும், அவரால அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல்தான் இருக்கிறாராம்..
புஸ்ஸி ஆனந்த் ரொம்பவே புலம்பிகிட்டே இருக்கிறாராம்.. “நம்ம பசங்க கண்ட்ரோல் ஆகமாட்டேங்கிறாங்க.. கட்டுப்படுத்த முடியலைன்னு சொன்னேனே.. இப்படி ஆகிடுச்சேன்னு” ரொம்பவே கவலைப்படுறாராம்.
ஆதவ் அர்ஜூனாதான், ” நாம இப்படியே இருந்தா திமுக நெருக்கடி தரும்.. நாம கோர்ட்டுக்கு போகனும்.. சிபிஐ விசாரணை நடத்த சொல்லி மனு போடலாம்,.. அறிக்கை கொடுக்கலாம்” என்றெல்லாம் ‘அரசியல்’ ரீதியாக பேசுகிறாராம்..
சரி.. இன்னைக்கு விஜய் வீட்டை விட்டு வெளியே வந்தாராமே?
விஜய் பனையூர் வீட்டுக்கு சனிக்கிழமை நைட் போன பின்னர் 34 மணிநேரம் கழிச்சு இன்னைக்கு காலையிலதான் வெளியில வந்தார்.. விஜய்யோட கார் பனையூர் கட்சி ஆபீஸ் போகும்னுதான் பார்த்தாங்க.. ஆனா அந்த கார் அப்படியே சென்னைக்குள் வந்து பட்டினப்பாக்கத்தில் உள்ள இன்னொரு ஆபீஸுக்கு போனது..
அந்த ஆபீஸில் யாரெல்லாம் இருந்தாங்களாம்? என்ன பேசுனாங்களாம்?
பட்டினப்பாக்கம் ஆபீசுக்கு போன விஜய்யின் முகம், அதிர்ச்சியில் இருந்தே இன்னும் அவர் வெளியே வரலைன்னு காட்டுச்சு.. இதனால ஒருவித இறுக்கமாக- அமைதியாகத்தான் இருந்தாங்க..
பட்டினப்பாக்கம் ஆபீசில் தவெகவின் பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்டவர்களுடன் விஜய் ஆலோசனை நடத்தினாரு..
இந்த ஆலோசனையில் கரூர் சம்பவம், ரியாக்சன்ஸ் பற்றி எல்லாம் டீட்டெயிலாக கேட்டுகிட்டாராம் விஜய்.
விஜய் கரூர் போறாருன்னு நேத்து ராத்திரியில் இருந்தே தகவல் வந்துச்சே?
ஆமாம்.. பட்டினப்பாக்கம் ஆபீசில் நடந்த டிஸ்கஷனில் கரூருக்கு போய் நிவாரண தொகையை கொடுக்கனும்.. அப்படி கரூருக்கு போனா என்ன நடக்கும்? போலீஸ் ஒத்துழைப்பு தருவாங்களா? பொது மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பாங்களா? என ஏகப்பட்ட கேள்விகளாக கேட்டு பதில் வாங்கிட்டு இருந்தாரு விஜய்…
அப்ப விஜய்யிடம், “ஏற்கனவே தமிழக அரசு அறிவிச்ச நிவாரண நிதி ரூ.10 லட்சத்தை கனிமொழி, நேற்று விடிய விடிய ஒவ்வொரு வீடாக தேடிப் போய் பார்த்து ஆறுதல் சொல்லி கொடுத்துட்டு வந்துட்டாங்க.. இன்னைக்கு பிரதமர் மோடி அறிவிச்ச ரூ.2 லட்சம் நிவாரண நிதியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூரில கொடுக்க போறாங்க.. அதனால இன்னைக்கே கரூர் போனா சரியா வராதே..” எனவும் சொல்லப்பட்டதாம்.
அதுசரி.. விஜய்கிட்ட ராகுல் பேசுனதா சொல்றாங்களே?
ராகுல் மட்டுமா பேசினாரு.. டெல்லியில் இருந்து யார் யாரெல்லாம் பேசுனாங்க சொல்றேன் பொறுமய்யா.
கரூர் சம்பவத்தை தொடர்ந்து மத்திய அரசு தமிழ்நாட்டு பக்கம் ரொம்ப தீவிரமாக திரும்பி இருக்குன்னு நேற்று டிஜிட்டல் திண்ணையில் சொல்லி இருந்தோம்ல.. தமிழக அரசிடம் ஆளுநர் ரவி மூலமாக அறிக்கை கேட்டிருக்கு என சொன்னோம்..
அதோட நிற்காமல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் போனில் பேசியிருக்கார்.. அப்ப கரூர் சம்பவம் குறித்து விலாவாரியாக கேட்டிருக்கார் அமித்ஷா.
முதல்வரும் கரூரில் என்ன நடந்தது? எப்படி சம்பவம் நடந்துச்சுன்னு சொன்னாராம்..
அதே கையோடு, நடிகர் விஜய்யிடமும் அமித்ஷா பேச முயற்சித்திருக்காரு..
இதை இன்னைக்கு பட்டினப்பாக்கத்துல நடந்த டிஸ்கஷனில் விஜய் விளக்கமாக ஷேர் செஞ்சிருக்காரு..
இதுபற்றி நம்மிடம் பேசிய விஜய்க்கு நெருக்கமானவர்கள்,
பாஜக தேசிய பொதுச்செயலாளர் பிஎல் சந்தோஷ் சைடில் இருந்துதான் முதலில் கூப்பிட்டாங்களாம்.. ஹோம் மினிஸ்டர் (அமித்ஷா) பேசனும்னு நினைக்கிறாரு.. கரூரில் என்னதான் நடந்துச்சுன்னு அவருகிட்ட விளக்கமாக பேசிடுங்க என சொன்னாங்களாம்..
தளபதி (விஜய்) யோசனையாக இருந்தாராம்.. அப்புறம் திரும்ப திரும்ப பிஎல் சந்தோஷ் தரப்பில் இருந்து முயற்சி செஞ்சாங்களாம்.. ஆனாலும் ‘நான் அமித்ஷாகிட்ட பேசலைன்னு’ எங்ககிட்ட சொன்னாரு தளபதி..
அதே மாதிரி சிஎம்கிட்ட பேசின ராகுல் காந்தியும் தளபதிகிட்ட பேசினாராம்..”ராகுல் காந்திகிட்ட நமக்கு நல்ல நட்பு இருக்கிறதால கரூரில் என்ன நடந்துச்சுன்னு விளக்கமாகவே சொல்லிட்டேன்” என் எங்களிடம் ஷேர் செய்தார் தளபதி.
எல்லாத்தையும் கேட்டுகிட்ட ராகுல் காந்தி கடைசியா கேட்ட கேள்விதான் புதிராக இருக்குன்னு விஜய் சொன்னாரு.. அதாவது கரூர் சம்பவத்தை முழுசாக கேட்டுகிட்ட ராகுல் காந்தி, “உங்களுக்கு கரூர் சம்பவத்துல ஏதாவது சந்தேகமாக இருக்குதா? இந்த சம்பவத்துக்கு பின்னணி வேற இருக்குன்னு நினைக்கிறீங்களா?” என அழுத்தமாக கேட்டாராம்..
இந்த கேள்விக்கு பதிலாக சில விஷயங்களை தளபதி ஷேர் செஞ்சிருந்தாலும் “இப்படி நம்மகிட்ட ஏன் ராகுல் காந்தி கேட்கனும்?” என்பதுதான் தளபதி மனசுல ஓடுற ஒரே கேள்வி என்கின்றனர் என டைப் செய்தபடியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.