டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலைக்கு ‘பனிஷ்மென்ட்’ பதவி- மம்தாவுடன் மோதுகிறார்? ஓபிஎஸ் டீம் ‘டமால்’?

Published On:

| By Minnambalam Desk

வைஃபை ஆன் செய்ததும் “வடக்கே இருந்துதான் வரப் போகிறேன்” என சொல்லியபடியே டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ் அப்.

வடக்கே என்ன விஷேசம்?

ADVERTISEMENT

டெல்லியைப் பொறுத்தவரையில் பாஜக தலைவர் பதவி யாருக்கு? துணை ஜனாதிபதி பதவி யாருக்கு என்பதுதான் ஹாட் டாபிக்காக ஓடுகிறது.

துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் ஆகஸ்ட் 7-ந் தேதி தொடங்கிவிட்டது. இதுவரை யாரும் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ், பீகார் சிஎம் நிதிஷ்குமார் ஆகியோரது பெயர்கள் அடிபட்டாலும் இருவரும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள்; இதனால் இருவருக்கும் வாய்ப்பு இருக்காது. பாஜகவில் ஒருவரைத்தான் துணை ஜனாதிபதியாக்க வேண்டும் என ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது. அனேகமாக இந்தியா கூட்டணியுடனும் மத்திய அரசு ஆலோசனை நடத்தி பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்த வாய்ப்புண்டு; பாஜக தேசியத் தலைவர் பதவியில் இருந்து விடைபெறும் ஜேபி நட்டாவுக்கே அடுத்த துணை ஜனாதிபதிக்கான சான்ஸ் அதிகம் என்கின்றனர்.

ADVERTISEMENT

பாஜகவின் அடுத்த தேசியத் தலைவர் யார்?

தற்போதைய பாஜக தலைவர் ஜேபி நட்டா 2020-ம் ஆண்டு முதல் பதவியில் இருக்கிறார். 2023-ம் ஆண்டே ஜேபி நட்டாவின் பதவி காலம் முடிவடைந்துவிட்டது. மக்களவைத் தேர்தலை காரணம் காட்டி அவர் பதவியில் தொடர்ந்த நிலையில் தற்போது புதிய தலைவரத் தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இருக்கின்றன சங் பரிவாரங்கள்.

ADVERTISEMENT

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாஜக தேசியத் தலைவராக முயற்சிகளை முன்னெடுத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இதனை விரும்பவில்லை.

மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் பெயர் ஏற்கனவே அடிபட்டு வருகிறது. இவர்கள் இல்லாமல் தர்மேந்திர பிரதான், பூபேந்திர யாதவ், மனோகர் லால் கட்டாரியா, வசுந்தரராஜ சிந்தியா என பலரது பெயர்களும் இந்த பட்டியலில் அடிபடுகின்றன.

துணை ஜனாதிபதி பதவி தொடங்கி பாஜக தேசியத் தலைவர் பதவி வரை உள்ளூர் பாஜக தலைவர்கள் பெயரை தமிழக பத்திரிகைகளில் எழுதிவிடுவது வழக்கம். அதே போல, ராஜஸ்தான் பத்திரிகைகளும் வசுந்தரராஜே சிந்தியா அல்லது பூபேந்திர யாதவ் இருவரில் ஒருவர்தான் பாஜகவின் அடுத்த தலைவர்; 45 ஆண்டுகளாக ராஜஸ்தானை சேர்ந்தவர் பாஜக தலைவராக இருந்தது இல்லை; அதனால் இம்முறை ராஜஸ்தானுக்கே பாஜக தலைவர் பதவி என திட்டவட்டமாக எழுதி வருகின்றன.

பாஜகவின் தேசிய பதவி யாருக்கு என்பதில் இன்னமும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக இருதரப்பிலுமே ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் இழுபறி நீடித்து கொண்டே இருக்கிறதாம். நமக்கு கிடைத்த தகவல்களின் படி, ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தின கொண்டாட்டங்களுக்குப் பின்னர் பாஜக தலைவர் யார் என்ற அறிவிப்பு வெளியாகும். பாஜகவின் புதிய தேசிய பதவிக்கான ரேஸில் தர்மேந்திர பிரதான் முன்னணியில் இருக்கிறார் என்கின்றன டெல்லி தகவல்கள்.

தமிழக பாஜக தலைவர்கள் பலரும் இன்னமும் டெல்லியை பார்த்தபடியே இருக்கின்றனரே?

பாஜகவின் தமிழக நிர்வாகிகள் பட்டியல் வெளியான நிலையில் அதில் இடம் பெறாதவர்கள்தான் டெல்லியையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். குறிப்பாக அண்ணாமலையின் வார் ரூம்கள் சும்மா இருப்பது இல்லை; அண்ணாமலைக்கு அந்த பதவி.. இந்த பதவி என அடுத்தடுத்து பரப்பிவிட்டுக் கொண்டே இருக்கின்றன.

இந்த வரிசையில் தற்போது “மாநில தேர்தல் பொறுப்பாளர்” பதவி, அண்ணாமலைக்கு கிடைக்கப் போகிறது என்கிறார்கள்.

எந்த மாநில தேர்தல் பொறுப்பாளர் பதவி?

அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் மேற்கு வங்கத்துக்குதான் பாஜகவின் மேலிட தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை நியமிக்கப்படலாம் என்கின்றனர்.

பாஜகவின் சீனியர்கள் சிலர், அண்ணாமலைக்கு அப்படி ஒரு பதவி கிடைத்தால் அது கொண்டாட்டத்துக்குரியதாக இருக்காது; தண்ணி இல்லாத காட்டுக்கு அதிகாரிகளை மாற்றுகிற ‘பனிஷ்மென்ட் பதவி’ போல்தான் என்கின்றனர்.

அப்படி ஏன் சொல்ல வேண்டும் என கேட்ட போது, “மேற்கு வங்கத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இரும்புக் கோட்டையாக வைத்திருக்கிறார் முதல்வர் மம்தா பானர்ஜி. அம்மாநிலத்தில் இடதுசாரிகள், காங்கிரஸ் வாக்குகளை அப்படியே தம்முடையதாக்கி வலிமை பெற்று நிற்கிறது பாஜக. மத்தியில் அடுத்தடுத்து பாஜக ஆட்சியை கைப்பற்றி இருந்தாலும் கூட மேற்கு வங்க இரும்பு கோட்டையை மம்தாவிடம் இருந்து கைப்பற்ற முடியாத நிலையில்தான் பாஜக இருக்கிறது.

மம்தா பானர்ஜியைப் பொறுத்தவரை கட்சியை அடிநிலை வரை வலுவாக்கி வைத்திருக்கிறார். மம்தாவின் கட்சியின் மூத்த தலைவராக இருந்த சுவேந்து அதிகாரி போன்றவர்களை தங்கள் கட்சிக்கு தாவ வைத்துதான் பாஜகவே வளர முடிந்தது என்கிற நிலைமைதான். அவ்வளவு எளிதாக மம்தா பானர்ஜியுடன் மோதிவிட முடியாது.. அதனால்தான் மேற்கு வங்க தேர்தல் களம் கடுமையான மோதல் களமாகவே இருக்கும்.. அண்ணாமலைக்கு அப்படி பொறுப்பு கிடைத்தால் அது டஃப் அசைன்மெண்ட்டாகத்தான் இருக்கும் என்கின்றனர்.

சரி.. தமிழ்நாட்டுக்கு வருவோம்.. ராஜேந்திர பாலாஜி பெயர் அதிகமாக அடிபடுகிறதே?

பாஜகவுடன் கூட்டணி வைத்துவிட்டதால் தமக்கு சிவகாசி தொகுதி கிடைக்குமா? கிடைக்காதோ? என்கிற தவிப்பில் இருப்பவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. இதற்கு காரணம், பாஜகவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர்தானாம்.

அத்துடன் தேமுதிகவை எடப்பாடி பழனிசாமி கைவிட்டது குறித்தும் புலம்புகிறாராம் ராஜேந்திர பாலாஜி.

தமிழகத்திலேயே மக்களவைத் தேர்தலில் தேமுதிக, கடுமையான போட்டியை தந்தது விருதுநகர் தொகுதியில்தான். தேமுதிகவுக்கு விருதுநகர் மாவட்டத்தில் கணிசமான வாக்குகள் இருக்கும் போது அந்த கட்சியும் நம்முடன் இருந்திருந்தால் வெற்றி நிச்சயமாகி இருக்கும் என்கிறாராம் ராஜேந்திர பாலாஜி.

அடுத்த ரோடு ஷோவுக்கு தயாராகிவிட்டாரா சிஎம் ஸ்டாலின்?

ஆமாம்.. தருமபுரி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 17-ந் தேதி விசிட் அடிக்கிறார் ஸ்டாலின். அப்போது ரோடு ஷோ நடத்தக் கூடும் என்பதால் இப்போதே மா.செ. பழனியப்பன் தீவிரமாக களமிறங்கி விட்டாராம்.

பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ் டீம் அடுத்து என்ன செய்யப் போகிறதாம்?

சிஎம் ஸ்டாலினை சந்தித்த கையோடு திமுகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என பேசியும் அறிக்கையும் விட்டு வருகிறார் ஓபிஎஸ். ஓபிஎஸ்-ன் நடவடிக்கையால் அவரது அணியே பிளவுபடும் என்றெல்லாம் வதந்திகள் ரெக்கை கட்டி பறக்க, குறிப்பாக வைத்திலிங்கம் எம்.எல்.ஏ. மீண்டும் எடப்பாடி அணிக்கு போகிறார் என ஒரு தகவல் பரவியது.

ஆனால் வைத்திலிங்கமோ தமக்கு நெருக்கமானவர்களிடம், ஒருபோதும் எடப்பாடியிடம் தனியாக போகப் போவது இல்லை. எனக்கும் ஓபிஎஸ்க்கும் தனிப்பட்ட டீலிங்குகள் இருக்கின்றன. இதை புரியாமல் பரப்பி விடுகின்றனர் என்கிறாராம். ஆனால், நெருப்பில்லாமல் எதுவுமே புகையாது சாரே.. என எடப்பாடி டீம் கொளுத்திப் போடுவதாக டைப் செய்த படியே சென்ட் பட்டனை தட்டிவிட்டு ஆப் லைனுக்கு போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share