பாஜக அடுத்த தலைவர் நட்டா, தமிழக தலைவர்?

By Balaji

|

Published on 18 Jan 2020, 12:00 AM

இந்தியாவை இரண்டாவது முறையாக ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சியின் புதிய தலைவராக ஜே.பி.நட்டா வரும் 20 ஆம்தேதி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். பாஜகவின் தலைவராக தற்போது இருக்கும் அமித் ஷாவின் பதவிக் காலம் ஏற்கனவே முடிந்துவிட்ட போதும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்காக அவரே தலைவர் பதவியில் நீட்டிக்கப்பட்டார்.

கடந்த தேர்தலில் வென்று அமித் ஷா உள்துறை அமைச்சரான பின்னர், உடனடியாக புதிய தலைவர் பொறுப்பேற்க வேண்டிய அவசியமேற்பட்டது. அதனால் தேசிய இளைஞரணித் தலைவராக இருந்த ஜே.பி.நட்டா பாஜகவின் செயல் தலைவராக பொறுப்பேற்றார்.

ADVERTISEMENT

இந்நிலையில் பாஜகவின் அகில இந்திய தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் 20 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவரும் கட்சியின் தேசிய தேர்தல் பிரிவு பொறுப்பாளருமான ராதா மோகன் சிங் நேற்று அறிவித்தார்.

20 ஆம்தேதி பாஜக தலைவர் பதவிக்கான வேட்பு மனு தாக்கல் நடக்கிறது. அன்று காலை 10 முதல் 12.30 வரை மனு தாக்கல் நடக்கும். மனுக்கள் 1.30 க்கு பரிசீலிக்கப்படும் என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. ஜேபி நட்டா தற்போது செயல்தலைவராக இருக்கும் நிலையில் அவரே அகில இந்திய தலைவர் ஆவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.

ADVERTISEMENT

தொடர்ந்து பல மாநிலங்களுக்கான பாஜக தலைவர்கள் தேர்தல் நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தமிழக பாஜக தலைவருக்கான கருத்துக்கேட்புக் கூட்டம் கடந்த வாரமே முடிந்துவிட்ட நிலையில் அகில இந்திய தலைவராக நட்டா பொறுப்பேற்கும் முன்னர் தமிழக பாஜக தலைவர் பதவி நிரப்பப்படுமா என்ற எதிர்பார்ப்பு தமிழக பாஜகவில் எழுந்துள்ளது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Balaji

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel