போர் நிறுத்தத்துக்கு டிரம்ப் மத்தியஸ்தம் செய்தாரா?: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!

Published On:

| By Kavi

Did Trump mediate the ceasefire

இந்தியா பாகிஸ்தான் இடையேயான சண்டையை தான் தலையிட்டு தீர்த்து வைத்ததாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வரும் நிலையில், இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்துள்ளார். Did Trump mediate the ceasefire

பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும்  இடையே  கடும் ஆயுத சண்டை நடைபெற்றது. இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில்  பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது. 

இந்தநிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்  இரு நாட்டுக்கு இடையேயான சண்டையில் தலையிட்டு போரை நிறுத்தியதாக கூறி வருகிறார். 

இன்று, வெள்ளை மாளிகையில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவுடனான  சந்திப்பின் போதும் இதை கூறியிருக்கிறார். அதாவது,  “இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலைத் தீர்க்க நான் உதவினேன். நான் அதை வர்த்தகம் மூலம் தீர்த்து வைத்தேன்” என்று கூறியிருக்கிறார் டிரம்ப். 

இந்தநிலையில் போர் நிறுத்தப்பட்டு 11 நாளில் 8 முறை இதையே டிரம்ப் சொல்லியிருக்கிறார். ஆனால் இதுகுறித்து பிரதமர் மோடி வாய்கூட திறப்பதில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார். 

ராஜஸ்தானில் இன்று (மே 22) பேசிய மோடி, ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசினார். ஆனால் டிரம்பின் மத்தியஸ்தம் குறித்து பேசவில்லை. 

இந்தநிலையில்,  ஆறு நாள் அரசுமுறைப் பயணமாக ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருக்கும் மத்திய அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இன்று நெதர்லாந்து நாட்டு ஊடகச் சந்திப்பில் பேசினார். 

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமைதியை நிலைநாட்ட மத்தியஸ்தம் செய்வதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூற்றுகளை வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் உறுதியாக நிராகரித்துள்ளார்,

இதுதொடர்பாக அவர் கூறுகையில்,   ”கடந்த மே 10 ஆம் தேதி, பாகிஸ்தான் ராணுவம் தான் துப்பாக்கிச் சூட்டை நிறுத்தத் தயாராக இருப்பதாக செய்தியை அனுப்பியது.  இரண்டு நாடுகள் மோதலில் ஈடுபடும்போது, பொதுவாக மற்ற உலக நாடுகள் அழைத்து பேசுவதும், கவலை  தெரிவிப்பதும் வழக்கமானதுதான். 

ஆனால்  துப்பாக்கிச் சூடு மற்றும் ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாக இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. 

அமெரிக்காவிற்கு மட்டுமல்ல எங்களுடன் பேசிய அனைத்து நாடுகளிடமும்  நாங்கள் ஒரு விஷயத்தை மிகத் தெளிவாகக் கூறினோம். பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டை நிறுத்த விரும்பினால், அவர்கள் எங்களிடம்தான் சொல்ல வேண்டும், நாங்கள் அதை அவர்களிடமிருந்து கேட்க வேண்டும்,  பாகிஸ்தான் ஜெனரல் இந்திய ஜெனரலை அழைத்து இதைச் சொல்ல வேண்டும் என்று சொன்னோம். அதுதான் நடந்தது. 

இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் ஏற்பட்டிருந்த போது, இரு நாடுகளும் பேசிக்கொள்ள ஒரு அமைப்பு இருந்தது. அப்படித்தான், மே 10ஆம் தேதி பாகிஸ்தான் ராணுவம் ஒரு தகவலை அனுப்பியது, அதில், தாக்குதலை நிறுத்த தயார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை ஏற்று நாங்களும் செயல்பட்டோம்” என்று தெரிவித்துள்ளார். Did Trump mediate the ceasefire

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share