டெல்லி செங்கோட்டை அருகே 10 பேரை பலி கொண்ட கார் குண்டு வெடிப்பு நிகழ்விடத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆய்வு மேற்கொண்டார்.
டெல்லியில் இன்று இரவு சுமார் 7 மணியளவில் செங்கோட்டை அருகே நிறுத்தப்பட்ட கார் வெடிகுண்டு வெடித்து சிதறியது. இதில் அருகே இருந்த வாகனங்களும் தீ பிடித்து எரிந்தன. பயங்கர சப்தத்துடன் கார்கள் அடுத்தடுத்து வெடித்து சிதறியதால் அங்கிருந்து பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர்.
இந்த கொடூர சம்பவத்தில் 10 பேர் பலியாகி உள்ளனர். 24 பேர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் டெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு நிகழ்விடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் சென்று ஆய்வு நடத்தினார். இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது; உள்துறை அதிகாரிகளுடன் நாளை ஆலோசனை நடத்தப்படும் என்றார். இக்குண்டு வெடிப்பு சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்த மத்திய அமைச்சர் அமித்ஷா, ஆறுதல் கூறினார்.
