டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஹரியானாவைச் சேர்ந்த பெண் மருத்துவரான பிரியங்கா சர்மாவிடம் தேசிய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி செங்கோட்டை அருகே நவம்பர் 10-ந் தேதி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் 10 பேர் பலியாகினர்; 24 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம், ஒரு தற்கொலைப் படை தாக்குதல் என்றும் டாக்டர் உமர் தற்கொலைதாரியாக செயல்பட்டார் என்றும் விசாரணை அமைப்புகள் தெரிவித்துள்ளன.
மேலும் ஹரியானாவின் அல்ஃபலா பல்கலைக் கழகத்தின் மருத்துவர்கள் 3 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்துக்காக சதித் திட்டம் தீட்டியதாக ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர்கள் உள்ளிட்டோர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கைது செய்யப்பட்ட டாக்டர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக மற்றொரு டாக்டர் பிரியங்கா சர்மாவும் தற்போது தேசிய புலனாய்வு ஏஜென்சியால் விசாரிக்கப்பட்டு வருகிறார். டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
