வங்க கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது தற்போது கடலூர்- புதுச்சேரி நோக்கி நகருவதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று 3 மணிநேரத்திலேயே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதனால் புதுச்சேரி முதல் ராமநாதபுரம் வரையில் பல மாவட்டங்களில் கனமழை கொட்டியது. டெல்டா மாவட்டங்களிலும் மழை வெளுத்தெடுத்தது.
இந்த நிலையில் தற்போது, இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, கடலூர்- புதுச்சேரி நோக்கி நகருவதாகவும் இதனால் டெல்டா மாவட்டங்கள் மழையின் பிடியில் இருந்து விடுபடுவதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை விட்டு விட்டு தொடரும் என்றும் தனியார் வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
அரபிக் கடலில், கோவாவில் இருந்து 1020 கிமீ தொலைவிலும் லட்சத்தீவுகளில் இருந்து 630 கிமீ தொலைவிலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
