ADVERTISEMENT

வித்தியாசமான டைட்டில் வைக்கலாம்தான்… அதுக்குன்னு இப்படியா?

Published On:

| By Kavi

ஒரு பிரபலத்தை மீடியாவில் கிண்டல் செய்யும் போது, அவர் பெயரின் எழுத்துக்களை முன்னே பின்னே மாற்றிப் போட்டு கிண்டல் செய்வது உண்டு .” என்னைத்தான் சொல்கிறார்கள்” என்று பிரபலங்களும் சொல்ல முடியாது . அதே நேரம் யாரைச் சொல்கிறார்கள் என்பது , எளிதாக எல்லோருக்கும் புரியும் .

உதாரணமாக அமிதாப் பச்சனை, பமிதாப் அச்சன் என்று பெயர் வைத்து எழுதுவது .. தங்கர் பச்சானை, பங்கர் தச்சான் என்பது எல்லாம் நடந்திருக்கிறது

ADVERTISEMENT

கமலும் ரஜினியும் கூட இதற்குத் தப்பியது இல்லை. ரஜினிஹாசன் , கமல்காந்த் என்ற பெயரில் கிண்டல் செய்யப்பட்டு இருக்கிறார்கள் . அதை நம்பி ஓர் இளம் நடிகர் கமல்காந்த் என்றார் பெயருடனேயே சினிமாவில் அறிமுகமானார். ரஜினிஹாசன் என்று யாரும் பெயர் வைத்துக் கொண்டு நடிக்க வந்ததாக மட்டும் தெரியவில்லை.

இப்போது ரயில்வான் பங்கநாதன் என்ற பெயர் கூட சோஷியல் மீடியாவில் பிரபலம் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.

ADVERTISEMENT

இந்த உத்தியின் அடிப்படையில் கொஞ்சம் வேறுபட்டு ஒரு படத்துக்குப் பெயர் வைத்து இருக்கிறார்கள்

‘டிராகன்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான வி ஜே சித்து கதையின் நாயகனாக நடித்து இயக்கும் ஒரு படத்துக்கு ‘டயங்கரம்’ என்று பெயர் வைத்து இருக்கிறார்கள். இந்த சித்து டிராகன் படம் மூலம் பெயர் வாங்கியவர் . வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார் .

ADVERTISEMENT

”சமகால இளைய தலைமுறையினரின் வாழ்வியலை மையப்படுத்தி , இளைஞர்கள் தங்கள் துடிப்பான ஆற்றல் மூலம் , சுய அடையாளத்தை கண்டுபிடிக்க உத்வேகம் தரும் வகையிலும் , நகைச்சுவை மற்றும் சென்டிமென்ட் இவற்றோடு. பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட படமாகவும் இந்த ‘டயங்கரம் ‘ இருக்கும் ” என்கிறது படக் குழு.

அப்போ அதான் கதை .

‘டரியல்’ ஆவது என்றால் பயப்படுவது . பயமுறுத்துவது பயங்கரம் .

பயப்படும் டரியல் நிலையில் இருந்து, பயங்கரம் என்று சொல்லப்படும் அளவுக்கு பயமுறுத்தும் நிலைக்குப் போவது, ‘டயங்கரம்’!

அல்லது டிராகன் (வி ஜே சித்துவுக்கு திரை வெளிச்சம் கொடுத்த படம் அல்லவா?) செய்யும் பயங்கரம்தான் டயங்கரம்.

இந்த இரண்டும் இல்லை என்றால் பிடியுங்கள் பாராட்டுகளை !

-ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share