ADVERTISEMENT

பறிக்கப்படும் தலித் மக்களின் வாக்குரிமை

Published On:

| By Minnambalam Desk

Dalits voting rights being taken away

ரவிக்குமார்

சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த (எஸ்.ஐ.ஆர்) நடவடிக்கையைத் தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் இப்போது தேர்தல் ஆணையம் துவக்கியிருக்கிறது. பீகாரில் மேற்கொள்ளப்பட்ட இதேபோன்ற திருத்தத்தின்போது ஏற்கனவே கடுமையான முறைகேடுகள் நடந்துள்ளன. அங்கு லட்சக்கணக்கான வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன, தலித் மற்றும் முஸ்லிம் வாக்காளர்கள் அதிக அளவில் நீக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஆணையத்தின் சட்டப்பூர்வ அதிகாரத்திற்கு அப்பாற்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்) இப்போது நடத்தப்படுவதாகத் தெரிகிறது.

மூத்த பத்திரிகையாளர்களின் அமைப்பான ‘தி ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ்’ அறிக்கையின் படி, பீகாரின் 243 தொகுதிகளிலும் இறுதி வாக்காளர் பட்டியலில் சுமார் 1.32 கோடி வாக்காளர்கள் சந்தேகத்திற்குரிய அல்லது இல்லாத முகவரிகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

மேலும், 14.35 லட்சத்திற்கும் மேற்பட்ட சந்தேகத்திற்குரிய போலி வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் இரண்டு வெவ்வேறு வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்தாலும் ஒரே பெயர், ஒரே உறவினரின் பெயர் மற்றும் 0–5 ஆண்டுகள் மட்டுமே வயது வித்தியாசம் உள்ள வாக்காளர்கள் அடங்குவர். இவற்றில், 3.42 லட்சம் பேருக்கு இரண்டு அடையாள அட்டைகளிலும் உள்ள வயது சரியாக பொருந்துகிறது. பல்லாயிரக்கணக்கான தனிநபர்கள் தலா குறைந்தது மூன்று EPIC அடையாள அட்டைகளை வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இறுதி வாக்காளர் பட்டியல் துய்மைப்படுத்தப்பட்ட ஒன்று அல்ல என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

இந்த அரசியலமைப்புச் சட்டத்துக்கு முரணான நடைமுறையை நிறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK), திமுக உள்ளிட்ட கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்துள்ளன. அந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வரும் போதே, பீகாருக்கான தேர்தல் தேதிகளைத் தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக அறிவித்துள்ளது, இது ஜனநாயக செயல்முறையை நீர்த்துப்போகச் செய்வதாகும். இதற்குத் தேர்தல் ஆணையமே உடந்தையாக இருக்கிறதா என்ற கடுமையான சந்தேகம் எழும்பியுள்ளது.

ADVERTISEMENT

கர்நாடகாவின் ஆலந்து தொகுதியில் பாஜக வேட்பாளர் தேர்தல் ஆணையத்தின் துணையோடு 6018 வாக்குகளை நீக்கியிருப்பதை கர்னாடக மாநில சிறப்புப் புலனாய்வுக் குழு இப்போது அம்பலப்படுத்தியுள்ளது.

வாக்காளர்களின் விருப்பம் இல்லாமல் அவர்களுக்குத் தெரியாமல் அவர்களுடைய வாக்குகள் நீக்கப்படுகின்றன என்பது இன்றைய தேர்தல் பிரதிநிதித்துவ முறையை தலித்துகள் இனியும் நம்ப முடியுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

ADVERTISEMENT

இந்தியாவில் தேர்தல் பிரதிநிதித்துவ முறை என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில்தான் கொண்டுவரப்பட்டது. 1861இல் இங்கிலாந்தில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் இந்தியாவில் புதிய ஆட்சிமுறையை உருவாக்கினார்கள். அதற்கு இந்தியாவில் இருந்த சில பிரதிநிதிகளை நியமனம் செய்தார்கள். பிறகு 1882இல் ‘இந்தப் பிரதிநிதிகளை நாம் தேர்ந்தெடுப்பதைவிட அங்குள்ள மக்களே தேர்ந்தெடுக்கட்டும்’ என்று முடிவெடுத்தார்கள். அப்படி தேர்தெடுக்கும் வாக்காளர் என்ற தகுதியை எதன் அடிப்படையில் நிர்ணயிப்பது என்று ஆலோசித்து, ஒருவர் வாக்காளராக இருக்க வேண்டுமென்றால் , அவருக்கு நிலம் இருக்க வேண்டும், படித்திருக்க வேண்டும், குறிப்பிட்ட அளவுக்கு சமூக அந்தஸ்து இருக்க வேண்டும் என்று முடிவுசெய்தனர். அந்த நேரத்தில்தான் சென்னையில் இருந்த அயோத்திதாசப் பண்டிதர் முதலானவர்கள் தலித் மக்களுக்குப் பிரதிநிதித்துவம் வேண்டும், எனவே வாக்களிப்பதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ‘சொத்துரிமை’ என்ற விதியை ரத்து செய்து, படிப்பு, நன்னடத்தை முதலானவற்றின் அடிப்படையில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவத்தை அளிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினார்கள்.

Dalits voting rights being taken away

இங்குள்ள மக்களிடம் என்ன மாதிரியான பிரதிநிதித்துவம் வேண்டும் என்று கேட்டறிய பிரிட்டிஷ் குழுக்கள் இந்தியாவெங்கும் சென்றன. அப்போது 1916இல் சைமன் குழு இந்த பிரதிநிதித்துவம் குறித்து ஆராய்ந்தது. அந்தக் குழுவை அப்போதிருந்த காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. அம்பேத்கர் சைமன் குழுவிடம் தலித் மக்களுக்கான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி வாதாடினார். தலித் மக்களுக்கான பிரதிநிதித்துவம் வயதுவந்தோர் அனைவருக்குமான வாக்குரிமை மூலம் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதித்துவமாக இருக்க வேண்டும் என்று கோரினார். அதுமட்டுமல்லாமல் தனி வாக்காளர் தொகுதிகள் ( separate electorate) மூலமாக மட்டுமே தலித் மக்களுக்குப் பிரதிநிதித்துவத்தை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

1930 ஆம் ஆண்டு முதல் வட்டமேசை மாநாடு கூட்டப்பட்டது. முதல் வட்டமேசை மாநாட்டை காங்கிரஸ் கட்சி புறக்கணித்தது. அந்த வட்டமேசை மாநாட்டுக்கு அம்பேத்கரும் இரட்டைமலை சீனிவாசனும் சென்றனர். அங்குதான் தலித் மக்களுக்கு தனி வாக்காளர் தொகுதி வேண்டும், தலித் மக்கள் தாங்களாகவே தங்கள் பிரதிநிதியைத் தேர்தெடுக்க இரட்டை வாக்குரிமை வேண்டும் என்று கோரிக்கையை அவர்கள் முன்வைத்தனர். அவர்களின் வாதங்களைக் கேட்ட பிரிட்டிஷ் அரசு ‘உங்கள் கோரிக்கைகளைப் பரிசிலிக்கிறோம், ஒரே மாநாட்டில் எங்களால் இந்த முடிவுகளை எடுக்க முடியாது, மேலும், காங்கிரஸ் கட்சி இந்த மாநாட்டில் இடம்பெறவில்லை’ என்று கூறியது.

Dalits voting rights being taken away

முதல் வட்டமேசை மாநாட்டில் அம்பேத்கர் வலியுறுத்திய கருத்துகளை ஆங்கிலேயர்கள் ஏற்றுக்கொள்வதை அறிந்த காந்தி, அதுவரைக்கும் மாநாடுகளைப் புறக்கணித்து வந்ததை மாற்றி இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டார். அங்கு, தலித் மக்களுக்கு தனி வாக்காளர் தொகுதியும் இரட்டை வாக்குரிமையும் கொடுக்கக்கூடாது என்று வலியுறுத்தினார். மாநாட்டில் பங்கேற்றிருந்த முஸ்லிம் பிரதிநிதிகளை சந்தித்து தலித்துகளின் கோரிக்கையை ஆதரிக்க வேண்டாமெனக் கேட்டார். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் காந்தி கூறியதை ஏற்கவில்லை.

பிரிட்டிஷ் அரசு முஸ்லிம்களுக்கும் தலித்துகளுக்கும் இரட்டை வாக்குரிமையுடன் கூடிய தனி வாக்காளர் தொகுதி முறையை வழங்க முடிவு செய்தது. தலித் மக்கள் அடர்த்தியாக வசிக்கும் 78 இடங்களைக் கண்டறிந்து அவற்றைத் தலித் மக்களுக்கான தனி வாக்காளர் தொகுதிகளாக அறிவித்தது. அந்த அறிவிப்பு வந்த நேரத்தில் எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்த காந்தி, தலித் மக்களுக்கு தனிவாக்காளர் தொகுதி கொடுக்கக்கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து சாகும்வரை உண்ணாவிரதத்தைத் துவக்கினார். நாடு முழுவதும் காங்கிரஸ்காரர்களால் தலித் மக்களுக்கும் அம்பேத்கருக்கும் கடுமையான அழுத்தம் தரப்பட்டது. இந்தியா முழுவதும் தலித் மக்கள் தாக்கப்படும் ஆபத்து அதிகரித்து வருவதை உணர்ந்த அம்பேத்கர் இரட்டை வாக்குரிமை, தனி வாக்காளர் தொகுதி கோரிக்கையைக் கைவிட்டு, காந்தியோடு ஒப்பந்தம் செய்துகொள்ள சம்மதித்தார். 1932 ஆம் ஆண்டு செப்டம்பர் 24 அன்று ஏற்படுத்தப்பட்ட அந்த ஒப்பந்தமே ‘பூனா ஒப்பந்தம்’ என அழைக்கப்படுகிறது.

பூனா ஒப்பந்தத்தின் மூலம் மாகாண சட்டமன்றங்களில் 151 இடங்களும், மத்திய சட்டமன்றத்தில் 18% இடங்களும் தலித்துகளுக்குக் கூட்டு வாக்காளர் தொகுதி மூலம் வழங்கப்பட்டன. பிரிட்டிஷ் அரசாங்கம் வழங்கிய இடங்களைவிட பூனா ஒப்பந்தத்தின் மூலம் கூடுதலாக இடங்கள் ஒதுக்கப்பட்டதை காந்தியின் கருணைக்கு உதாரணமாகக் காங்கிரஸ் சித்திரித்தது. ‘தலித் மக்கள் மட்டும் வாக்களித்துத் தமது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தனி வாக்காளர் தொகுதிமுறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும்போதுதான் ஒருவர் அந்த மக்களின் உண்மையான பிரதிநிதியாக இருக்க முடியும், அனைத்துப் பிரிவினரும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் தனித் தொகுதி முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவர் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் அடிமையாகத்தான் இருக்க முடியும்’ என அம்பேத்கர் தெரிவித்தார்.அப்போது தலித் சமூகத்தில் சுமார் 10 விழுக்காட்டினருக்குத்தான் வாக்குரிமை வழங்கப்பட்டிருந்தது.

Dalits voting rights being taken away

பூனா ஒப்பந்த காலத்தில் தலித் மக்களின் பிரதிநிதித்துவத்துக்காகப் போராடிய அம்பேத்கர் சுதந்திர இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை இயற்றும் வாய்ப்பு கிடைத்தபோது வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமையை உறுதிசெய்ததன்மூலம் தலித் மக்களுக்கும் வாக்குரிமையை வழங்கினார். அதுவே இன்றளவும் தலித் மக்களுக்கு அரசியல் மதிப்பை அளித்து வருகிறது.

தலித்துகளின் அரசியல் மதிப்பைப் பறிக்க வேண்டுமென்ற எண்ணம் கொண்ட சனாதன பாஜக அரசு அரசமைப்புச் சட்டத்தில் தலித் மக்களுக்கு அம்பேத்கர் உறுதி செய்த வாக்குரிமையையும், பிரதிநிதித்துவ உரிமையையும் பறிப்பதற்கு சதி செய்கிறது என்பதையே எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை நமக்கு உணர்த்துகிறது.

ஒன்றிய அரசை ஆளும் பாஜக, தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என உறுதியாகத் தெரிந்த தலித் மக்களின் வாக்குகளையும் முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் வாக்குகளையும் வாக்காளர் பட்டியலிலிருந்தே நீக்குகிறது, அதன் மூலம் தனது வேட்பாளரின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது என்ற உண்மையை திரு ராகுல் காந்தி ஆதாரங்களோடு வெளிப்படுத்தியுள்ளார். இந்தச் சூழலில், தலித்துகள் தமது வாக்குரிமையையும் பிரதிநிதித்துவ உரிமையையும் பாதுகாப்பதற்குப் போராட்டக் களத்தில் இறங்கியாக வேண்டும். இல்லாவிட்டால் மீண்டும் அவர்கள் வாக்குரிமை அற்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

கட்டுரையாளர்:

Dalits voting rights being taken away - Article in Tamil By Dr D Ravikumar MP

முனைவர் டி.ரவிக்குமார் – கவிஞர், மொழிபெயர்ப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர். கவிதை, சிறுகதை, மொழிபெயர்ப்பு, விமர்சனம் என 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share