முதல்வர் படம், அரசின் திட்டங்களுக்கு தடை இல்லை- அதிமுக வழக்கில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு என்ன?

Published On:

| By Kavi

தமிழ்நாடு அரசின் திட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் பெயர், படம் பயன்படுத்த தடை கோரி அதிமுக தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் படி பதவியில் உள்ள முதலமைச்சரின் படங்களை பயன்படுத்தலாம்; அதேநேரத்தில் கட்சியின் கொள்கை தலைவர்கள், முன்னாள் முதல்வர் படங்களை பயன்படுத்த கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு முதல்வரின் பெயரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் குறித்த விளம்பரத்தில், முன்னாள் முதல்வர் கலைஞரின் புகைப்படம், திமுக சின்னம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், “உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் படமும், இந்நாள் முதல்வர் ஸ்டாலினின் படமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணானது.  தனி மனித சாதனை போல விளம்பரப்படுத்துகின்றனர். அரசு பணத்தை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்துவது ஏற்புடையதல்ல. 2026 தேர்தலை மனதில் வைத்துதான் இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றனர். இந்தத் திட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு திமுகவினர் தேர்தல் பரப்புரையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

எனவே உங்களுடன் ஸ்டாலின் திட்ட விளம்பரத்தில் முன்னாள் முதல்வர், இந்நாள் முதல்வர் படங்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று கோரியிருந்தார்.

ADVERTISEMENT

இந்த மனு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வில் நேற்று (ஜூலை 31) விசாரணைக்கு வந்தது. 

அப்போது சிவி சண்முகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ‘உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படுகின்றன. உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணைய விதிகளுக்கு எதிராக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  அரசின் விளம்பரங்களில் அரசியல் கட்சி தலைவர்கள் சின்னங்கள் மற்றும் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது. 

ADVERTISEMENT

எனவே உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரையோ அல்லது புகைப்படங்களையோ பயன்படுத்த தடை விதிக்க வேண்டும். வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி தொடங்கப்பட உள்ள நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்டத்திலும் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார். 

அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், “அரசு திட்ட விளம்பரங்களில் முதல்வர் படம் மட்டுமின்றி துறை அமைச்சர்களின் படமும் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறி இருக்கிறது. உச்ச நீதிமன்ற உத்தரவு படியே அரசு திட்ட விளம்பரங்களின் நடைமுறை பின்பற்றப்படுகிறது’ என்று கூறினார். 

திமுக சார்பில், மூத்த வழக்கறிஞர் பி வில்சன் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். 

இந்த வழக்கு அரசியல் உள்நோக்கத்துடன் தொடரப்பட்டுள்ளதாக கூறிய அவர், ’அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மா உணவகம், அம்மா மருந்தகம் போன்ற பெயர்களில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. மத்திய அரசின் திட்டங்களில் கூட பிரதமர் மோடியின் பெயர் பயன்படுத்தப்படுகிறது. நமோ என்ற திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆந்திராவில் ஜெகன் திட்டம் செயல்படுத்தப்பட்டது.  அதுபோலத்தான் தமிழகத்திலும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. உச்ச நீதிமன்றத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன’ என்று தெரிவித்தார். 

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், “உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, பதவியில் உள்ள முதலமைச்சரின் புகைப்படத்தை வெளியிட அனுமதிக்கப்படுகிறது. ஆனால், கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ முன்னாள் முதல்வரின் புகைப்படத்தையோ  பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது. 

அதுபோன்று அரசாங்கத் திட்டங்களில் வாழும் அரசியல் ஆளுமையின் பெயரைக் குறிப்பிடுவது அனுமதிக்கப்படாது. எந்தவொரு ஆளும் அரசியல் கட்சியின் பெயரையும், அதன் சின்னம்/கொடி ஆகியவற்றையும் பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளுக்கு எதிரானது.

எனவே, அரசு நலத்திட்டங்களைத் தொடங்கும்போதும் செயல்படுத்தும்போதும், எந்தவொரு ஆளுமையின் பெயர், முன்னாள் முதலமைச்சர்/சித்தாந்தத் தலைவர்களின் புகைப்படம் அல்லது கட்சி சின்னம்/ கொடி ஆகியவற்றைப் பயன்படுத்தக்கூடாது என்று இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கிறோம்.

அதேசமயம், அரசு நலத்திட்டம் தொடங்குவதற்கும் செயல்படுத்துவதற்கும் எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. 

உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வர் பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கொடுத்த புகாரை தேர்தல் ஆணையம் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது” என்று கூறி வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 13ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share