பெண் வழக்கறிஞருக்கு நடந்த கொடுமை : நீதிமன்ற அறையில் கண் கலங்கிய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்

Published On:

| By Kavi

Cruelty to a female lawyer Justice

இணையதளங்களில் பரப்பப்பட்ட பெண் வழக்கறிஞரின் வீடியோவை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. Cruelty to a female lawyer Justice

சென்னையைச் சேர்ந்த மாணவி ஒருவர் கல்லூரியில் படித்த போது, தனது ஆண் நண்பரை காதலித்துள்ளார். அவரும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்துள்ளார். இந்த நம்பிக்கையால் மாணவி காதலனுடன் நெருக்கமாக இருந்துள்ளார். 

இந்த நிலையில் மாணவி படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த சூழலில் அவரது நண்பர்கள், உனது வீடியோ ஒன்று இணையதளங்களிலும், ஆபாச வலைதளங்களிலும் வலம் வருவதாக கூறியுள்ளனர். 

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், அந்த வீடியோக்களை முடக்கி நீக்கவும் எதிர்காலத்தில் அது பரவாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசில் புகார் அளித்தார். 

ஆனால் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால், அந்த வீடியோ காட்சிகளை நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூலை 9) விசாரணைக்கு வந்தது. 

அப்போது 70க்கும் மேற்பட்ட இணையதளங்களில் பகிரப்பட்டுள்ள இந்த காட்சிகளை 48 மணி நேரத்தில் நீக்க வேண்டும் என்று மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார் நீதிபதி.

மேலும் அவர், “இதுபோன்று படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்வதும், அபாச வலைதளங்களில் பகிரப்படுவதும் அந்த பெண்ணை மிகுந்த மன வேதனைக்கு உள்ளாக்கியிருக்கிறது.

குடிமக்கள் அத்தனை பேரின் அடிப்படை உரிமைகளையும் கண்ணியத்தையும் பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. இதுபோன்ற வழக்கு ஒன்றில் மத்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளையும் மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்” என்றும் உத்தரவு பிறப்பித்தார். 

இது போன்ற வழக்குகளில் காவல்துறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு அறிவுறுத்திய நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த வழக்கில் டிஜிபியையும் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டார். 

இந்த வழக்கில் ஜூலை 14 ஆம் தேதிக்குள் மத்திய அரசு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது கலங்கிய கண்களுடன் விம்மிய குரலுடன் பேசிய நீதிபதி, இந்தப் பெண் வழக்கறிஞர் என் மகளாக இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.

எனது அறையில் அவரை சந்தித்து தைரியம் கூற வேண்டும். அவருடன் பேசும் போது நான் உடைந்துபோகாமல் இருக்க தற்போது என்னை நானே தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். மனுதாரர் வழக்கறிஞராக இருந்ததால் தான் அவரால் எதிர்த்து போராட முடிந்தது. அதுவே போராட தைரியமில்லாத மற்ற பெண்களுக்கு என்னவெல்லாம் நடக்கும்?” என்று உணர்ச்சிவசப்பட்டார்.

நீதிபதியே உணர்ச்சிவசப்பட்டது, நீதிமன்ற அறையில் இருந்தவர்களை கலங்கச் செய்தது. Cruelty to a female lawyer Justice

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share