கோவை மாணவி கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இது எந்த பெண்ணிற்கும் நடக்க கூடாத கொடூரம் என குடியரசு துணை தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
கோவை ஒன்னிபாளையம் கருப்பராயன் கோயில் இன்று (நவம்பர் 4) நடைபெறும் கோயில் திருவிளக்கு பூஜையில் கலந்து கொள்ள குடியரசு துணை தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் கோவை வந்துள்ளார்.
இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “விளக்கு பூஜையில் ஆயிரம் கணக்கான தாய்மார்களுடனும், சகோதரிகளுடனும் கலந்து கொள்கிறேன். அதற்காக இன்று மீண்டும் தமிழகத்திற்கு இரண்டாவது முறையாக வந்துள்ளேன் என்றார்.
அப்போது கோவையில் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாத ஒரு கொடூரம். நம்முடைய கொங்கு மண்டலத்தில் நடந்துள்ளது என்பது தாங்க முடியாத வேதனையை தருகிறது.
குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதும் அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்று தருவதும், காவல்துறையின் பொறுப்பு. நிச்சயமாக காவல்துறை கண்ணும் கருத்துமாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையை பெற்றுத் தருவார்கள் என்று நம்புகிறேன். சகோதரிக்கும் அவரது பெற்றோர்க்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது நடக்க கூடாதது தான் சில நேரங்களில் தவிர்க்க இயலாமல் நடந்து விடுகிறது. வருத்தத்தில் இருக்கும் அவர்களுக்கு நாம் என்றென்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றார்.
