பாமக தலைவராக தன்னை அறிவிக்கும் வரை மாம்பழம் சின்னத்தை முடக்கி வைக்கக் கோரி டாக்டர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கில், நாளைக்குள் பதில் மனு தாக்கல் செய்ய அன்புமணி தரப்புக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதல் நீடித்து வரும் நிலையில், கட்சியின் மாம்பழம் சின்னம் மற்றும் கொடியை அன்புமணி தரப்பினர் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி ராமதாஸ் ஏற்கனவே சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், மாம்பழம் சின்னத்தை அன்புமணி தரப்புக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து ராமதாஸ் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராமதாஸ் தரப்புக்கு சிவில் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தியது. மேலும், தாக்கல் செய்யப்படும் மனுவை மூன்று நாட்களுக்குள் விசாரித்து முடிவெடுக்க சென்னை உரிமையியல் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, நீதிபதி எம்.தர்மபிரபு முன்பு நேற்று (செவ்வாய்க்கிழமை) முறையீடு செய்யப்பட்டது. அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவை இன்று (புதன்கிழமை ) விசாரணைக்கு எடுப்பதாகத் தெரிவித்தார். மேலும், மனு நகலை அன்புமணி தரப்புக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்நிலையில், இன்று (மார்ச் 25) நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, மாம்பழம் சின்னம் தொடர்பான வழக்கில் நாளைக்குள் அன்புமணி தரப்பு பதில் அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். நாளை இரு தரப்பு வாதங்களும் கேட்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.
விசாரணை முடிவில் சின்னம் யாருக்கு என்பது தெரியவரும்.
