சட்டமன்ற தேர்தல் 2026: தொகுதியை மாற்றிய அதிமுக சீனியர்கள் – எடப்பாடியின் புது வியூகம்!

Published On:

| By Pandeeswari Gurusamy

ADMK

தமிழகத்தில் நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 25) வெளியிட்டுள்ளார்.

முதற்கட்டமாக 23 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
மயிலம் தொகுதியில் சி.வி. சண்முகம்:

முன்னாள் அமைச்சரும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம், 2001 ,2006 சட்டமன்ற தேர்தலில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டார். கடந்த 2011, 2016 தேர்தல்களில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது முதல் முறையாக மயிலம் தொகுதியில் களம் காண்கிறார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த இவர், 2022 ஜூன் மாதம் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை உறுப்பினராக சுமார் 4 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், சி.வி. சண்முகம் வரும் சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் களம் காண்கிறார்.

ADVERTISEMENT

அதேசமயம் சி.வி.சண்முகத்தின் சொந்த ஊரான அவ்வையார்குப்பம் மயிலம் தொகுதிக்குள் வருவதாலும், வன்னியர்கள் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி என்பதாலும் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்ற நோக்கத்தில் அவர் மயிலம் தொகுதியில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.

இன்னும் இரண்டு ஆண்டுகள் எம்.பி. பதவிக்காலம் எஞ்சியுள்ள நிலையில், அவர் மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் களம் இறங்குவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ADVERTISEMENT
சிவகாசி தொகுதியில் ராஜேந்திர பாலாஜி:

அதேபோல், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி இந்த முறை சிவகாசி தொகுதியில் போட்டியிட உள்ளார்.கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவர், தற்போது மீண்டும் சிவகாசி தொகுதியிலேயே களம் காண்கிறார்.

கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் மீண்டும் சிவகாசி தொகுதியில் களம் காண்பது கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் சிவகாசியில் போட்டியிடுகிறார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரப் பணிகளில் வேகம் காட்டத் தொடங்கியுள்ளது. அடுத்தடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலசபாக்கம் தொகுதியில் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போளூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி இந்த முறை கலசபாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share