பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்கள் ஆதார் எண் பயன்படுத்தி விண்ணப்பிக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த ஆண்டு இறுதியில் பீகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையம் பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளை மேற்கொண்டது. இதைத்தொடர்ந்து பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்த சுமார் 65 லட்சம் வாக்காளர்களை தேர்தல் ஆணையம் அதிரடியாக நீக்கியது. இதனால் பீகார் வாக்காளர் எண்ணிக்கை 7.9 கோடியிலிருந்து 7.24 கோடியாக குறைந்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன. தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிராக ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 22) மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்கள் தங்கள் வசிப்பிட சான்றாக ஆதார் அட்டையை பயன்படுத்த அனுமதி வழங்கி உள்ளனர். ஏற்கனவே உள்ள 11 ஆவணங்கள் அல்லது ஆதார் எண்ணை வைத்து விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நடைமுறை வாக்காளர்களுக்கு எளிமையாக இருக்கும் வகையில் அமைத்து தர வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தையும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
அதேசமயம் வரைவு வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு உதவ முன்வராத அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் ஆச்சரியமளிப்பதாகவும் “உங்கள் வாக்குச்சாவடி முகவர்கள் என்ன செய்கிறார்கள்? என்றும் நீதிமன்றம் விமர்சனத்தை முன் வைத்தது.
மேலும் இந்த வழக்கை வரும் செப்டம்பர் 8ம் தேதி ஒத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.