திமுக – விசிக இடையே இன்று (மார்ச் 24) 2 ம் கட்ட தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தலை முன்னிட்டு,ஆளும் தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு வார்த்தைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
அந்தவகையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தலைமையிலான குழுவினருடன், தி.மு.க. பொருளாளர் டி.ஆர். பாலு தலைமையிலான தொகுதிப் பங்கீட்டுக் குழு இன்று மீண்டும் பேச்சு நடத்த உள்ளது.
விசிக தரப்பில் இரண்டு இலக்க எண்ணிக்கையில் (குறைந்தது 10 முதல் 12 வரை) தொகுதிகள் எதிர்பார்க்கப்படும் நிலையில், தி.மு.க. தரப்போ ஒற்றை இலக்கத்தில் (7 முதல் 8 வரை) தொகுதிகளை ஒதுக்க மட்டுமே விருப்பம் தெரிவித்து வருகிறது. இதனால் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.
இதற்கிடையல் நேற்று (மார்ச் 23, 2026) சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் விடுதியில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் அக்கட்சியின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முக்கிய நிர்வாகிகள், தேர்தல் பணிகள், வேட்பாளர் தேர்வு, தி.மு.க.விடம் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை கேட்டுப் பெறுவது உள்ளிட்ட விவகாரங்களை விரிவாக விவாதித்தனர்.
இந்நிலையில், இன்று (மார்ச் 24, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. – விசிக இடையே இரண்டாம் கட்ட தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தச் சந்திப்பில் சுமூக முடிவு எட்டப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் விசிகவுக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறை கூடுதல் தொகுதிகள் கோரி விசிக தரப்பு உறுதியாக நிலைப்பாடு எடுத்துள்ளது. இருப்பினும், தி.மு.க. கூட்டணியில் புதிதாக இணைந்த தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை காரணம் காட்டி தொகுதி ஒதுக்கீட்டில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.இந்தப் பேச்சுவார்த்தையின் முடிவு விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் 4 தனித் தொகுதிகள், 2 பொதுத் தொகுதிகள் அடங்கும். இதையடுத்து 2 தனித் தொகுதி, 2 பொதுத் தொகுதி என நான்கு இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர்.
