தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு விழாக்காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் புகார் எண்களை போக்குவரத்துத் துறை தரப்பில் இன்று (அக்டோபர் 13) வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வரும் 14.10.2025 முதல் 21.10.2025 வரையில் தீபாவளி பண்டிகை தினத்தை முன்னிட்டு விழாக்காலத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளை ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை மூலம் உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுதல் தொடர்பாக போக்குவரத்து ஆணையரின் அறிவுரையின் கீழ் காணும் வரன்முறைகளை பின்பற்றும் படி அனைத்து சரக இணைப்போக்குவரத்து ஆணையர்கள் /துணைப்போக்குவரத்து ஆணையர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. எதிர்வரும் தீபாவளி பண்டிகை தொடர் விடுமுறை நாட்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளை ஆய்வு செய்து, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.
2. அரசு பேருந்துகள் மற்றும் அரசு விரைவு பேருந்துகள் செல்ல சுங்கச்சாவடியில் தனி வழி (Separate Bay) அமைக்க சுங்க சாவடி அலுவலர்கள் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சீரான வாகன போக்குவரத்தினை உறுதிசெய்ய தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
3. மோட்டார் வாகன ஆய்வாளர்களை சுங்க சாவடிகளில் பணியமர்த்தி அரசு பேருந்துகள் விரைவாக சுங்கசாவடியை கடந்து செல்ல நடவடிக்கை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்படுகிறது.
4. அவ்வாறு சுங்கச்சாவடிகளில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், பணியின் போது தமிழ்நாடு மற்றும் பிற மாநில ஆம்னி பேருந்துகளையும் ஆய்வு செய்து உரிய வரி மற்றும் ஆவணங்கள் நடப்பில் உள்ளதா என்பதை கண்டறிந்து, குறைபாடுடைய வாகனங்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பயணிகள் கூடுதல் கட்டணம் மற்றும் பிற புகார்களுக்கு கீழ்காணும் எண்கள் மூலம் தொலைப்பேசி வாயிலாகவோ, வாட்ஸ் ஆப் மூலம் குறுஞ்செய்தி அல்லது குரல் பதிவாகவோ புகார் தெரிவிக்க வேண்டப்படுகிறது.

மேலும், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்காமல், போக்குவரத்து துறையின் மூலம் எடுக்கப்படும் நடவடிக்கையினை தவிர்க்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.