வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு : அரசுக்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published On:

| By Kavi

சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் வேட்டையின்போது சிறப்பு அதிரடிப்படையினரால் மனித உரிமை மீறல்களுக்கு ஆளானவர்களுக்கு ரூ.2.59 கோடி இழப்பீட்டை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது தமிழக மற்றும் கர்நாடக சிறப்பு அதிரடிப்படையினர், அப்பாவி மக்கள் மீது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார்கள் குவிந்தன. இந்தப் புகார்களை விசாரித்த ஆணையம், பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்த உத்தரவின்படி, தமிழக அரசு ஆரம்பத்தில் ரூ.1 கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கியது.

இந்தசூழலில் பாக்கி தொகை 3 கோடியே 79 லட்சம் ரூபாயை வழங்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

ADVERTISEMENT

இந்த உத்தரவை எதிர்த்து தலைமை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் இன்று (நவம்பர் 4) விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது அரசு சார்பில், ‘இரண்டாவது தவணையாக ஒரு கோடியே 20 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் 8 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளது’ என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தொகையை விடுவிக்காதது குறித்து உயர் நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்தது. இழப்பீடு வழங்க உத்தரவு பிறப்பித்து ஓராண்டாகியும் அதை அமல்படுத்தாதது நீதிமன்ற அவமதிப்புச் செயல் என்று நீதிபதிகள் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தனர்.

“பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது அரசின் கடமைதான். ஆனால், அது இழப்பீட்டிற்கு ஈடாகாது. இழப்பீடு என்பது மக்களின் உரிமை,” என்று நீதிபதிகள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டனர்.

மேலும், “இழப்பீடு என்பது அரசின் பணம் அல்ல, அது மக்களின் பணம். அரசு வெறும் அறங்காவலன் மட்டுமே” என்று கூறி, ஏழை மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசு ஏன் நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்று கேள்வி எழுப்பினர்.

ஏழை மக்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு அரசு மேல்முறையீடு செய்வது வருத்தமளிப்பதாகவும் நீதிபதிகள் கூறினர்.

எஞ்சிய ரூ.2 கோடியே 59 லட்சம் ரூபாயை உடனடியாக விடுவிக்குமாறு சேலம் மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்த தமிழக தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இழப்பீடு வழங்கியது குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share