கோவை விமான நிலையம் இப்போது 4 மடங்கு பெரியதாக விரிவுபடுத்தப்பட உள்ளதாகவும், முகப்பு தோற்றம் வேறுபகுதிக்கு மாற்றப்படும் என்றும் கோவை விமான நிலைய இயக்குநர் சம்பத்குமார் தெரிவித்தார்.
கோவை விமான நிலைய இயக்குநர் சம்பத்குமார் , கோவை விமான நிலையத்தில் இன்று (செப்டம்பர் 16)செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கோவை விமான நிலையத்தில் யாத்ரி சேவா திவாஸ், என்ற பெயரில் பயணியர் தினம் நாளை கொண்டாடப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
நாளை காலை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு பாரம்பரிய முறையில் வரவேற்பு கொடுப்பது , மரம் நடுவது, கலை நிகழ்ச்சிகள் நடத்துவது, பள்ளி மாணவர்களுக்கு விமான நிலையம் குறித்து விழிப்புணர்வு அளிப்பது, ரத்ததானம், கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை விமான நிலைய விரிவாக்கத்தை பொறுத்த வரை 605 ஏக்கர் பரப்பளவில் செய்யப்பட உள்ளது. இதற்கான சர்வே செய்யும் பணி ஜனவரியில் தொடங்கி உள்ளது. பிரச்சனைகள் இருப்பதால் மாநில அரசுடன் இணைந்து அளவீடு பணிகள் நடைபெற்று வருகின்றது. இறுதி கட்டத்தில் இருக்கும் அளவீடு பணிகள் முடித்தவுடன் விமான நிலைய விரிவாக்க பணிகள் துவங்கும் என்றார்.
விமான நிலையத்திற்காக சுற்றுசுவர் அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ள நிலையில் செப்டம்பர் 26 ம் தேதிக்குள் சுற்றுசுவர் அமைக்கபட வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது 2900 மீட்டர் இருக்கும் விமான நிலைய ஓடுபாதை 3800 மீட்டராக விரிவுபடுத்தப்படும். பெரிய விமானங்கள் வந்து செல்ல இது உதவும். இப்போது இருக்கும் அளவை விட 4 மடங்கு அதிகமாக விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. தற்போது 18000 சதுர மீட்டராக இருக்கும் விமான நிலையம், 4 மடங்கு அதிகமாக 75000 சதுர மீட்டராக விரிவுபடுத்த படும் என்றார்.
அதே சமயம் விமான நிலையத்தின் முகப்பு தோற்றம் லீ மெரிடியன் ஹோட்டல் அருகில் உள்ள அவினாசி சாலை பகுதிக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.