ஒன்றிய மாநில உறவு: இந்தியக் குடியரசின் வரலாற்றை வடிவமைக்கும் முதல்வர் ஸ்டாலின்

Published On:

| By Minnambalam Desk

CM Stalin

ராஜன் குறை

இந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு சட்டமன்றத்தில் இடம்பெற்றுள்ளது. ஒன்றிய மாநில உறவுகளை ஆராய உயர்நிலைக் குழுவை கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு அரசு அமைத்திருந்தது. முன்னாள் உச்சநீதிமன்ற நீதியரசர்  குரியன் ஜோசப், முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி  அஷோக் வர்தன் ஷெட்டி, முன்னாள் மாநில திட்டக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் நாகநாதன் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

அந்தக் குழு தனது ஆய்வறிக்கையின் முதல் பகுதியை முதல்வருக்கு சமர்ப்பிக்க, அதனை 18 பிப்ரவரி, 2026 அன்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கினார் முதல்வர். அதனை அறிவித்து எழுச்சிமிகு உரையினையும் நிகழ்த்தினார். ஹிண்டு ஆங்கில நாளேட்டிலும் இந்த அறிக்கையினைக் குறித்து ரத்தினச் சுருக்கமான, அதே சமயம் மிக ஆழ்ந்த பொருள் கொண்ட கட்டுரை ஒன்றையும் எழுதியுள்ளார் முதல்வர்.

ADVERTISEMENT
CM Stalin shaping the history of the Indian Republic

இந்தக் குழுவின் அறிக்கை இந்தியக் கூட்டாட்சி எப்படி வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை விளக்கியுள்ளது. மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளை வலியுறுத்தியுள்ளது. இதற்கு முன்னும் 1971-ஆம் ஆண்டு தி.மு.க அமைத்த ராஜமன்னார் குழுவும் பல பரிந்துரைகளை அளித்திருந்தாலும், இந்த முறை இந்தக் கூட்டாட்சி சிந்தனைக்கான தேசியத் தருணம் உருவாகியுள்ளதாகவே கூறலாம். “அதற்கான தருணம் உருவாகிவிட்ட ஒரு கருத்தைப் போல ஆற்றல்மிக்கது எதுவுமில்லை” (“Nothing is more powerful than an idea whose time has come”) என்றார் நாவலாசிரியர் விக்டர் ஹியூகோ.

மாநில சுயாட்சிக் கோரிக்கை என்பது தி.மு.க-வின் துவக்க கால இலட்சியத்தில் தலையானது. இந்திய கூட்டாட்சிக் குடியரசில் அது சாத்தியமில்லை என்றால் தென்னிந்திய கூட்டாட்சிக் குடியரசான திராவிட நாட்டினை உருவாக்கிட வேண்டும் என அது கோரியது. பின்னாளில் அவ்வாறு தனிக்குடியரசினைக் கோருவது பிரிவினை எனப்பட்டதால், இந்தியக் கூட்டாட்சிக் குடியரசிலேயே மாநில சுயாட்சியைக் கோரியது. இந்த கோரிக்கையை எழுப்ப இந்தியாவிற்கே வழிகாட்டியாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. இதன் அரசியல் தத்துவ முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

மக்களாட்சியின் அடிப்படை மக்கள் தொகுதியே

மானுட வரலாற்றில் பல்லாயிரம் ஆண்டுகளாக மன்னராட்சியே நிலவி வந்தது. மன்னராட்சியின் அடிப்படைக் கேள்வி “மன்னரின் குடிகள் யார்?” என்பதுதான். அதன் பொருள் ஒரு மன்னர் படையெடுத்து எந்த ஒரு நாட்டையும் கைப்பற்றி இணைத்துக்கொள்ளலாம்; அவ்வாறு செய்யும் போது அந்த மக்களும் அவரது குடிகள் ஆகிவிடுவார்கள் என்பதுதான். மன்னர்தான் இறையாண்மையின் வடிவம்; கொள்கலம்.

உலகில் மக்களாட்சிக் குடியரசு உருவானபோது இந்தக் கேள்வி உருமாறியது. “எந்த மக்கள் தொகுதி தங்கள் சுயாட்சிக்காகக் குடியரசை உருவாக்கிக் கொள்கிறது?” என்ற கேள்வியாக அரசியலின் அடிப்படைக் கேள்வி மாறியது. அரசன் குடிகளை இணைத்துகொள்வதற்குப் பதிலாக, குடிமக்களே தங்களுக்கான அரசை உருவாக்கிக் கொள்கிறார்கள் என்ற தெளிவு பிறந்தது. இறையாண்மையின் வடிவம், கொள்கலம் என்பது சுயாட்சியுள்ள மக்கள் தொகுதிதான். 

ADVERTISEMENT
Chief Minister Stalin shaping the history of the Indian Republic

இந்திய நிலப்பகுதி பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பிறகுதான் இந்தியக் குடியரசு உருவானது. அதன் அரசியலமைப்பு சட்டத்தை இந்திய மக்கள் பிரதிநிதிகள் அவை உருவாக்கியது. அதன் வரைவுக்குழுத் தலைவராக பாபாசாகேப் அம்பேத்கர் விளங்கினார். அந்த அரசியலமைப்பு சட்டத்தின் முகப்புரை இந்திய மக்களே எழுதுவதாக அமைந்துள்ளது. “இந்திய மக்களாகிய நாம்” (We, the people of India) என்றுதான் அது துவங்குகிறது.  “இந்த அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு, இயற்றி, நமக்கு நாமே அளித்துக்கொள்கிறோம்” என்று முடிகிறது.

எந்த மக்கள் தொகுதி இந்தியக் குடியரசை உருவாக்கியது என்றால் நாம் இந்திய மக்கள் தொகுதி என்று கூறுவதில் எந்த ஐயமும் இருக்க முடியாது. ஆனால் இங்கே இந்தியா என்பது ஒற்றை அரசா என்ற கேள்வி எழுகிறது. அரசியலமைப்பு சட்டம் இந்தியா என்பது அரசுகளின் ஒன்றியம் என்று வரையறுக்கிறது. அந்த அரசுகளும் மக்களாட்சியில் உருவாகுபவை என்னும்போது அவற்றையும் குறிப்பிட்ட மக்கள் தொகுதிகள்தான் உருவாக்க இயலும் என்பது தெளிவாகிறது. அப்படியானால் இந்திய மக்கள் தொகுதி என்பது பல மக்கள் தொகுதிகளின் கூட்டமைப்பு என்பதில் எந்த ஐயமும் இருக்க முடியாது. இதனைப் புரிந்துகொள்வதுதான் இந்திய குடியரசிற்கு வலுச்சேர்க்கும் உண்மையான தேசபக்தி எனலாம்.

இருப்பினும் தேசியவாத சொல்லாடலில், தேசத்தை உருவாக்கும் கதையாடல்களில் இந்திய மக்கள் தொகுதியை ஒரே மக்கள் தொகுதியாக உருவகிக்கும் போக்கு நிலவியது. அப்படியானால் ஏன் அந்த ஒரே மக்கள் தொகுதி பல அரசுகளை உருவாக்கி அவற்றை ஒன்றிய அரசாங்கமாக அமைக்க வேண்டும் என்ற கேள்வி எழும் அல்லவா? அதற்கான தெளிவான பதில், அல்லது சரியான அரசியல் தத்துவ கண்ணோட்டம் உருவாவதில் மிகுந்த சிக்கல் நிலவுகிறது. சிக்கலுக்குக் காரணம் ‘ஆரிய-சமஸ்கிருத மையவாத” தோற்றவியல் சிந்தனை எனலாம்.

இந்தியா என்ற தேசம் எப்படி உருவகிக்கப்பட்டது?

இந்திய நிலப்பகுதி முழுவதும் எந்த காலத்திலும் ஒரே அரசரால் ஆளப்படவில்லை. எண்ணிறைந்த குறுநில மன்னர்கள், அவ்வப்போது தோன்றி மறையும் பேரரசுகள் என ஏராளமான அரசமைப்புகள் நிலவி வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசாட்சியின் கீழேதான் இந்திய நிலப்பரப்பின் பெரும்பகுதி ஒரே ஆட்சியமைப்பின் கீழ் வந்தது. அப்போதும் கூட ஐநூறுக்கும் மேற்பட்ட குறுநில மன்னர்கள் இருந்தார்கள். அவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டிருந்தார்கள்.

அச்சு ஊடகங்கள், நவீன கல்விமுறை, போக்குவரத்து வசதிகள் பெருக்கம் ஆகியவற்றால் இந்தியாவின் பல பகுதிகளிலும் ஆங்கிலம் பயின்ற இந்தியர்கள் தங்களுக்குள் உரையாடிக்கொள்ள வசதி உருவானது. இதற்கு முன்னர் சமஸ்கிருதம் பயின்ற பார்ப்பனர்கள் இந்தியா முழுவதும் பரவியிருந்ததால் தங்களுக்குள் அந்த மொழியில் பேசிக்கொள்ளும் சாத்தியம் இருந்திருக்கலாம் என்றாலும், அது பரவலான செயல்பாடாக நிலவியதாகச் சொல்ல முடியாது. அவர்களும்கூட ஆங்கிலம் பயின்ற பிறகுதான் அதிக அளவில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ளத் துவங்கினார்கள் எனலாம்.

இந்தியா என்ற ஒற்றை நிலப்பகுதி, இந்திய மக்கள் என்ற மக்கள் தொகுதி குறித்த சொல்லாடல்கள், கதையாடல்கள் ஆங்கில மொழியில்தான் பெருமளவு உருவாயின. அதன் பின்னர் இந்திய மொழிகளிலும் அவை பரவலாக பயன்படுத்தப்பட்டன. சமஸ்கிருத மொழியில் “பரத கண்டம்” என்றுதான் மந்திர உச்சாடனங்களில் குறிப்பிட்டார்கள். தேஷ், தேசம் என்ற சொல் மன்னர்களின் ஆட்சிப் பகுதியைத்தான் குறித்தது. உதாரணமாக கலிங்க தேசம், சோழ தேசம் என்றெல்லம் கூறப்பட்டதை நினைத்துப் பார்க்கலாம்.  

Chief Minister Stalin shaping the history of the Indian Republic

இந்தியா என்பது ஒரே நிலப்பரப்பு, இந்திய மக்கள் என்பது ஒரே தொகுதி என்ற எண்ணம் இந்திய தேசிய காங்கிரஸ் 1885-ஆம் ஆண்டு தோன்றிய பிறகுதான் அதிகம் வலுப்பெற்றது. ஏற்கனவே சமஸ்கிருதத்தை பொதுமொழியாகக் கொண்டிருந்த பார்ப்பனர்கள் இதனை சுலபத்தில் ஏற்றுக்கொண்டார்கள். இந்திய வரலாறு, இந்திய பண்பாடு என பல நூல்களும், கட்டுரைகளும் எழுதப்பட்டன. இந்த நிலப்பகுதியில் நிலவிய பல்வேறு வழிபாட்டு முறைகளும், இறையியல் சித்தாந்தங்களும் “இந்து மதம்” என்ற ஒரே அடையாளத்தினுள் தொகுக்கப்பட்டு பேசப்படுவதும் நிகழ்ந்தது.

இவ்வாறாக இந்து மதம், இந்தியா என்ற ஒரே நிலப்பரப்பு, இந்திய மக்கள் என்ற ஒரே மக்கள் தொகுதி ஆகியவற்றை உருவாக்கியபோது ஆரியர்களின் வேதங்களையே இந்திய பண்பாடுகளின் தோற்றுவாயாகக் கருதும் போக்கும் வலுப்பெற்றது. வேத பண்பாட்டை மறுத்துத் தோன்றிய சிரமண மதங்களாகிய பெளத்தம், ஜைனம், அஜீவகம் போன்றவை போதிய கவனம் பெறவில்லை. இந்த மதங்களின் எழுச்சிக்குப் பிறகு தன்னை புதியதாகத் தகவமைத்துக்கொண்ட ஆரியப் பண்பாடு புராணங்கள், இதிகாசங்கள், தர்ம சாஸ்திரங்கள் ஆகியவற்றை உருவாக்கியது. அப்போது உருவான நால்வர்ண கோட்பாடு அரசுருவாக்கத்திற்கு வசதியாக இருந்ததால் இந்தியா முழுவதும் பரவியது.

இந்தியப் பண்மையினை மீட்பதன் இன்றியமையாமை

இந்தியாவில் மக்களாட்சி சார்ந்த சுயாட்சி உரிமைக்கான அரசியலை காங்கிரஸ் முன்னெடுத்தபோது, வர்ண தர்ம சிந்தனை உருவாக்கிய ஜாதீய ஏற்றத்தாழ்வு, தீண்டாமை ஆகியவை முக்கிய பிரச்சினைகளாக உணரப்பட்டன. ஒரு மக்களாட்சிக் குடியரசு என்பதை உருவாக்க வேண்டுமென்றால் அனைத்து குடிமக்களும் “சுதந்திரம், சமத்துவம். சகோதரத்துவம்” என்ற மானுட தர்மத்தினை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலை உருவாகியது. அப்போது பழைய மனு தர்மமா, புதிய மானுட தர்மமா என்ற குழப்பம் பலருக்கும் ஏற்பட்டது.

இந்திய தேசியவாதிகள் இதில் பலவிதமான குழப்பமான நிலைபாடுகளை எடுத்தாலும், இந்திய அரசியலமைப்பு சட்டம் மதச்சார்பற்ற, சமத்துவ நோக்கிலேயே உருவாக்கப்பட்டது. வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் ஒரே அரசு நிர்வாகம் சாத்தியமில்லை என்று உணரப்பட்டதால், மாநில அரசுகளின் ஒன்றியமாகவே இந்திய அரசு வடிவமைக்கப்பட்டது. ஆனால் அன்றிருந்த சூழ்நிலையில் ஆங்கிலம் படித்த மேட்டுக்குடியினரே அதிகம் அரசியலமைப்பு சபையில் இருந்ததால் அதிக அதிகாரங்கள் ஒன்றிய அரசில் குவிக்கப்பட்டன.

இந்தியாவில் பொதுத் தேர்தல்கள் நடக்கத் துவங்கி, மக்களாட்சி வலுப்பெற்றபோது மக்களின் அரசியல் தன்னுணர்வு என்பது அந்தந்த மாநில மொழிகளிலேயே உருப்பெறுவது சாத்தியமாக இருந்தது. இதனால் மொழிவாரி மாநிலங்களுக்கான கோரிக்கைகள் வலுப்பெற்றன. பல்வேறு போராட்டங்களின் ஊடாக மக்கள் தங்களுக்கான மாநில அரசுகளை உருவாக்கிக் கொண்டார்கள்.

இதற்கு முக்கியக் காரணம் மக்களுக்கு மிகவும் அவசியமான கல்வி, சுகாதாரம், நில உரிமை என்பன போன்ற பல்வேறு அம்சங்கள் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்தன. அதனால் தனி மாநிலக் கோரிக்கைகள் வலுப்பெற்றன. ஆனால் நிதியாதாரங்கள் ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டிருந்தது. மக்களாட்சியின் இயக்க விசை மாநிலங்களில் இருக்க, ஒன்றிய அரசில் அதிகாரங்கள் குவிந்திருப்பது குடியரசின் அடிப்படை முரண்பாடாக மாறியது. 

இதில் நம் கவனத்திற்குரிய நிலை என்னவென்றால் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பொருளாதாரத்தில் பலவீனமான மக்கள் மாநில அரசியலிலேயே அதிகம் பங்கேற்பதும், தங்கள் உரிமைகளைப் பெறுவதும் சாத்தியமாக இருந்தது. ஆனால் ஆதிக்க ஜாதிகள், மேட்டுக்குடியினர், பெருமுதலீட்டிய சக்திகள் ஒன்றிய அரசில் அதிகாரம் குவிந்திருப்பதை விரும்பின.   

தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும்

காங்கிரஸ் கட்சிதான் இந்திய தேசியத்தை முன்னெடுத்து பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற வழி வகுத்தது. ஆனால் அப்போதே காங்கிரஸ் கட்சி மாநில வாரியாகத்தான் அணிதிரட்டலைச் செய்தது. ஒவ்வொரு மாநிலத்தின் அந்த மாநில மக்களின் மொழி பேசும், அந்த பண்பாட்டினைச் சார்ந்த தலைவர்களே காங்கிரசை வளர்த்தார்கள். காந்தி, நேரு போன்றவர்கள் தேசிய தலைவர்களாக இருந்தாலும் அவர்கள் செய்தியை மாநிலங்களில் கொண்டு சென்றவர்கள் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களாகவே இருந்தார்கள்.

இயல்பாகவே, தேர்தல்கள் நடக்க நடக்க, காங்கிரசிற்குள்ளேயே மாநில அடையாளங்கள் வலுப்பெற்றன. காங்கிரசிலிருந்து விலகிய தலைவர்களே பல மாநில கட்சிகளை உருவாக்கினார்கள். காங்கிரஸ் கட்சியில் மாநில அளவில் நிகழ்ந்த கோஷ்டிப் பூசல்களை, மேலிடம் எனப்பட்ட காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைமை தீர்க்க வேண்டியிருந்தது. அந்த தீர்வுகள் திருப்தியளிக்காத போது பலரும் கட்சியிலிருந்து விலகி மாநில கட்சிகளைத் துவங்கினார்கள்.

அப்படி காங்கிரஸ் வலுவிழக்கத் துவங்கியபோதுதான், பழைய பார்ப்பனீய இந்துத்துவ அடையாளத்தில் இந்து ராஷ்டிரமாக இந்தியாவை கட்டமைக்க விரும்பும் பாரதீய ஜனதா கட்சி வலுவடைந்தது. பாஜக ஒற்றை தேசிய அரசாகவே இந்தியக் குடியரசை மாற்ற விரும்புகிறது. அது மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதையே எதிர்த்து வந்தது என்பது நினைவுகூறத் தக்கது.

பாஜக அரசியலில் எழுச்சி பெற்றதே மண்டல் கமிஷன் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்திய போது ஏற்பட்ட பிற்படுத்தப்பட்டோர் அரசியல் எழுச்சிக்கு எதிர்திசையில் அது அயோத்தி ராமர் கோயில் பிரச்சினையை கையில் எடுத்த போதுதான். அந்த முரண்பாட்டை “மண்டல் x மந்திர்” என்ற முரணாக அரசியல் வரலாற்றில் குறிப்பிடுவார்கள். சிலர் “மண்டலா, கமண்டலா” என்றும் குறிப்பிடுவது உண்டு. கமண்டல் என்பது இந்து சாமியார்கள் புனித நீரை எடுத்துச் செல்லும் பாத்திரமாகும்.

பாஜக ஆட்சியில் வலுப்பெறும் ஒன்றிய ஆதிக்கம்

பாஜக மாநில கட்சிகள், காங்கிரஸ் ஆகிய அனைத்து கட்சிகளையும் வலுவிழக்கச் செய்து தானே ஒன்றியத்திலும், அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி செய்ய விரும்புகிறது. அப்போது அது நினைத்தபடி அரசியலமைப்பு சட்ட த்தை மாற்றியமைத்து இந்தியக் குடியரசை இந்து ராஷ்டிரமாக மாற்றிவிடலாம் என்று அது விரும்பலாம். அப்படி நடந்தால் பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மதச் சிறுபான்மையினர் ஆகியோர் அனுபவித்து வரும் சமத்துவம் பாதிக்கப்படும் என்று அஞ்சுவதற்கும் இயல்பானது.

Chief Minister Stalin shaping the history of the Indian Republic

பாஜக எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு அது நியமிக்கும் ஆளுனர்கள் மூலம் மிகப்பெரிய இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது. தேர்தல் ஆணையத்தை பெரும் எதேச்சதிகார அமைப்பாக மாற்றி தேர்தல்  நடைமுறைகளின் மீது கடும் ஐயங்கள் உருவாகக் காரணமாகி வருகிறது. “ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற திட்டத்தில் மாநில தேர்தல்களை ஒன்றிய தேர்தல்களுடன் இணைத்து நடத்தி, மாநில அரசியலின் தனித்துவத்தை குறைக்க முயற்சிக்கிறது.

ஒன்றியத்தில் ஆளும் பாஜகவே மாநிலத்திலும் ஆட்சி செய்தால்தான் டபுள் எஞ்சின் சர்க்கார் என்ற நிலை உருவாகி மாநிலம் வளர்ச்சி பெறும் என்று பிரசாரம் செய்கிறது. இதனைச் செய்ய எதிர்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் கடும் ஓரவஞ்சனை செய்கிறது. மாநில அரசின் அதிகாரத்திற்கு உட்பட்ட கல்வி, சுகாதாரம் போன்றவற்றிலும் பல்வேறு விதங்களில் தலையிடுகிறது.

தேசியக் கல்விக்கொள்கை என்ற பெயரில் மும்மொழிக் கொள்கையை தமிழ்நாட்டின் மீது திணிக்க முயற்சிக்கிறது. அதனை ஏற்க மறுத்தால் நிதி ஒதுக்கீடு செய்ய முடியாது என மிரட்டுகிறது. பல்கலைக் கழக துணைவேந்தர் நியமனங்களில் ஆளுனர் மூலம் தலையீடு செய்து உயர்கல்வியில் மாநில அரசை செயல்பட விடாமல் தடுக்கிறது.

Chief Minister Stalin shaping the history of the Indian Republic

மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் மீது அமலாக்கத் துறை என்ற தனிப்பட்ட அதிகாரங்கள் படைத்த ஒன்றிய புலனாய்வு அமைப்பை ஏவி, அவர்கள் அரசியல் வாழ்க்கையை நிலைகுலையச் செய்கிறது. ஏனெனில் அமலாக்கத்துறை எத்தனை காலம் வேண்டுமானால் விசாரணையின்றி சிறையில் வைத்திருக்கும் கருப்புச் சட்ட அதிகாரங்களைப் பெற்றுள்ளது. புது டெல்லியை பெரும் மக்கள் ஆதரவுடன் ஆட்சி செய்து வந்த ஆம் ஆத்மி கட்சியினை அமலாக்கத்துறை அமைப்பின் மூலம் சீர்குலைத்து பாஜக டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது.

ஒன்றிய அரசை ஒரு ஏகாதிபத்திய அரசாக பாஜக அரசு மாற்றிவிட்டது எனலாம். இந்த நிலையில்தான் முன் எப்போதையும் விட ஒன்றிய மாநில உறவுகள் குறித்த ஆய்வுச் சிந்தனை தேவைப்படுகிறது. அதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பைத்தான் முதல்வர் ஸ்டாலின் மேற்கொண்டுள்ளார். மாநிலங்களின் சுயாட்சி உரிமைகளை, நிதி மேலாண்மையிலும் அதன் சுதந்திரத்தை உறுதி செய்யாமல் இந்தியக் குடியரசின் வளர்ச்சியோ, அதன் மக்கள் தொகுதிகளின் நல்வாழ்க்கையோ சாத்தியமில்லை.

இதனை இந்திய ஒன்றியத்தின் பொது மன்றம் உணரும் வகையில் ஒரு உயர்நிலைக் குழு அமைத்து, அதன் கருத்துக்களைத் தொகுத்து அறிக்கையாக வழங்கியுள்ளார் முதல்வர். திராவிடத் தமிழர் மக்கள் தொகுதி என்பது இந்திய ஒன்றியத்தின் தன்னுணர்வு மிக்க மக்கள் தொகுதிகளில் ஒன்றாகும். மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கத்தை எழுபத்தைந்து ஆண்டுகளாக எழுப்பி வரும் இயக்கம்தான் தி,மு.க. என்பது பெருமைக்குரிய வரலாறு. அந்த வரலாற்றுப் பயணத்தில் மீண்டும் ஒரு முக்கியமான கட்டத்தை வந்தடைந்துள்ளது தமிழ்நாடு. தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!   

கட்டுரையாளர் குறிப்பு:  

Chief Minister Stalin shaping the history of the Indian Republic - Article in Tamil By Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள:rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share