சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினை காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அமைப்பு பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தற்போது சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் பேசப்பட்டது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 41 தொகுதிகளைக் கேட்டது. ஆனால் திமுக தரப்பில் 25 முதல் 28 தொகுதிகள் வரை வழங்க முன்வந்தது. காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில் 30 தொகுதிகள் வரை திமுக வழங்கக் கூடும் எனவும் கூறப்பட்டது. தற்போது திமுக கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் வந்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 27 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட்டை திமுக வழங்கலாம் எனவும் பேசப்பட்ட நிலையில் சென்னையில் ஸ்டாலினை கே.சி. வேணுகோபால் இன்று சந்தித்து பேசியுள்ளார்.
இச்சந்திப்பில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் உடன் இருந்தனர்.
முதல்வர் ஸ்டாலினுடனான கே.சி.வேணுகோபாலின் இந்த சந்திப்பைத் தொடர்ந்து திமுகவின் பேச்சுவார்த்தை குழுவினருடன் காங்கிரஸின் ஐவர் குழு பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகளை இறுதி செய்யும்.
முன்னதாக திமுகவின் தொகுதிப் பங்கீட்டு குழு இன்று முஸ்லிம் லீக் கட்சி குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது, கூட்டணியில் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புதியதாக இடம் பெறுவதால் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளைக் குறைக்க வேண்டும் என திமுக குழு தங்களிடம் கூறியதாக முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் கூறியிருந்தார்.
திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, மநீம, சிபிஎம், சிபிஐ, மமகா உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக குழு அடுத்தடுத்து பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறது.
