நாட்டில் சிறந்த போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரம் என்ற உயரிய தேசிய விருதான நகர்புற போக்குவரத்து திறன் விருதை சென்னை மாநகர் போக்குவரத்து கழகத்திற்கு மத்திய அரசு வழங்கி உள்ளது.
அரியானா மாநிலம் குருகிராமில் நேற்று (நவம்பர் 9) மத்திய நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் சார்பில், இந்திய நகர்புற இயக்க மாநாடு மற்றும் கண்காட்சி 2025 நடைபெற்றது. இதில் மத்திய நகர்புற வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டார், இணை அமைச்சர் டோகன் சாஹு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் நாட்டின் சிறந்த பொது போக்குவரத்து அமைப்பை கொண்ட நகரமாக சென்னை தேர்வு செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார், இணை அமைச்சர் டோகன் சாஹு இணைந்து, நகர்ப்புற போக்குவரத்து திறன் விருதை வழங்கினர். இதை தமிழக போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் மற்றும் சென்னை மாநகர போக்குவரத்து மோலாண் இயக்குநர் பிரபு சங்கர் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
சென்னையை சுற்றி உள்ள 660 வழித்தடங்களில் மகளிர் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு இலவச பயணம், மின்னணு பயணச்சீட்டு வழங்கும் திட்டம், மெட்ரோ ரயில் சேவை உள்ளிட்ட காரணங்களுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இது சென்னையை நிலைத்த மற்றும் சிறப்பான போக்குவரத்து நகரமாக உயர்த்தும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று தனது எக்ஸ் பதிவில், “A city’s living standards are reflected in the reliability and quality of its public transport. இந்தியாவிலேயே சிறந்த பொதுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட நகரம் என விருது பெற்றுள்ள சென்னை மாநகர போக்குவரத்து கழத்திற்கும், துறைக்குப் பொறுப்பேற்று வழிநடத்தும் சிவசங்கருக்கும் பாராட்டுகள்!
நள்ளிரவிலும் பாதுகாப்பான பயணம், டிஜிட்டல் பயணச்சீட்டு முறைகள், தாழ்தள மின்சாரப் பேருந்துகள் என நாளுக்கு நாள் மெருகேறி வரும் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், பயணிகளின் தேவையறிந்து, சீரான இடைவெளியில் தொடர்ந்து பேருந்துகளை இயக்கிச் சிறந்திட வாழ்த்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.
