வக்ஃப் வழக்கில் ஏற்கெனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீடிக்கும் என உச்சநீதிமன்றம் இன்று (மே 5) தெரிவித்துள்ளது. cji Sanjiv Khanna new order in waqf amendment bill
நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் திமுக எம்.பி ஆ.ராசா, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஏஐஎம்ஐஎம் எம்பி அசாதுதீன் ஒவைசி, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மற்றும் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் என சுமார் 73 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன் மற்றும் பி.வி. சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த மாதம் 17ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.
அப்போது வாதங்களை கேட்ட இந்த அமர்வு, புதிய வக்ஃப் சட்டத்திற்கு ஒரு வார காலத்திற்கு இடைக்கால தடை உத்தரவை விதித்த உச்சநீதிமன்ற அமர்வு, வழக்கு விசாரணையை வரும் மே 5ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
அதன்படி இன்று நடந்த வழக்கு விசாரணையின் போது, தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, ஏற்கெனவே வழக்கில் விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என்பதை உறுதி செய்தார்.
அவர், “இந்த விவகாரம் நியாயமான முறையில் விரைவாக விசாரிக்கப்பட வேண்டும். ஆனால் நான் விரைவில் (மே 13) ஓய்வு பெற உள்ளதால், இந்த வழக்கை முழுமையாக விசாரிக்க முடியாது. எனவே நீங்கள் ஒப்புக்கொண்டால், அடுத்த புதிய தலைமை நீதிபதி அமர்வு முன்பு இந்த வழக்கு பட்டியலிடப்படும்” என்ற பரிந்துரைத்தார்.
அதனை மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ஏ.எம். சிங்வி உள்ளிட்டோர் மற்றும் இந்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஏற்றுக்கொண்டனர்.
இதனையடுத்து ‘புதிதாக பொறுப்பேற்க உள்ள தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வு இவ்வழக்குகளை இனி விசாரிக்கும் என தெரிவித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, வழக்கை மே 15ஆம் தேதி ஒத்திவைத்தார். அதுவரை ஏற்கெனவே வழக்கில் விதிக்கப்பட்ட இடைக்கால தடை தொடரும் என அறிவித்தார்.
வரும் மே 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் பொறுப்பேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.