ராஜன் குறை
முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக பதவியேற்று எட்டாமாண்டு துவங்கியுள்ளது. சென்ற வாரம் அதனையொட்டி பலரும் கருத்துக்கள் கூறியிருந்தனர். இந்த ஏழாண்டுகளில் அவர் சாதித்துள்ளவற்றை எண்ணிப் பார்த்தால் பெரும் வியப்பாகத்தான் இருக்கும். அவர் பதவியேற்றபோது தமிழ்நாட்டு அரசியலில் ஒரு நீண்ட சகாப்தம் முடிந்து, புதிய சகாப்தம் துவங்கியது எனலாம். அதாவது கலைஞர் – எம்.ஜி.ஆர் 1977-1987, கலைஞர்-ஜெயலலிதா 1989-2016 ஆகிய ஒன்றையொன்று தொடர்ந்த இரு துருவ அரசியலின் நாற்பதாண்டுகால சகாப்தம் இரு முனைவுகளிலும் முடிவுக்கு வந்திருந்தது.
ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார் என்பதில் தெளிவில்லாமல் இருந்ததால் அ.இ.அ.தி.மு.க-வின் வரலாற்றுத் தொடர்ச்சி கேள்விக்குள்ளாகி இருந்தது. ஆனால் தி.மு.க-வில் கலைஞரின் வயோதிகம், உடல் நிலை காரணமாக ஸ்டாலின் செயல் தலைவராக ஏற்கனவே இயங்கி வந்ததால், கலைஞருக்குப் பின் தலைமைப் பொறுப்பேற்பது இயல்பானதாக இருந்தது. இருப்பினும் இரு துருவ அரசியலின் முகங்களாக இருந்த தலைவர்கள் அடுத்தடுத்து மறைந்ததால் தழிநாட்டின் அரசியலில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதாக ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வந்தன.
அவருடைய முதல் பெரும் சாதனை அன்று வெற்றிடம் என்ற பேச்சையே வெட்டிப் பேச்சாக மாற்றியதுதான். திராவிட இயக்க வரலாற்றின் தொடர்ச்சியாக நானிருக்கிறேன் தலைவனாக என்று விசுவரூபம் எடுத்தார். தி.மு.க-வின் எதிரிகளே “Stalin is more dangerous than Karunanidhi” என்று கூறுமளவு அவர் தன் அரசியல் ஆகிருதியை வெளிப்படுத்தினார். இன்று இந்தியா முழுவதும் தமிழ்நாட்டின் அரசியல் முகமாக, பாஜக-வின் பாசிச முனைப்புகளை எதிர்த்து நிற்கும் இந்தியா கூட்டணியின் முன்னணி தலைவராக அறியப்படுகிறார், கொண்டாடப் படுகிறார். தமிழ்நாட்டின் திராவிடவிய அரசியல் வரலாற்றின் தொடர்ச்சியாக போற்றப்படுகிறார். அவருடைய சாதனைகளின் பரிமாணங்களை நாம் சிந்தித்துப் பார்ப்பது அவசியம்.

கொள்கைப் பற்று; கோட்பாட்டுத் தெளிவு
அவர் தலைமைப் பொறுப்பேற்ற நிகழ்விலேயே தெள்ளத் தெளிவாக, அழுத்தம் திருத்தமாக பாரதீய ஜனதா கட்சியின் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக செயல்படுவேன் என அறிவித்தார். அறிஞர் அண்ணா 1942-ஆம் ஆண்டு எழுதிய “ஆரிய மாயை” நூல் உயிர்பெற்றது. திராவிட இயக்கத்தின் கொள்கை பாரதீய ஜனதா கட்சியின் மீட்பு வாத, பார்ப்பனீய சார்புக் கொள்கைக்கு துவக்கம் முதலே முற்றிலும் எதிரானது. சொல்லப்போனால் ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் என்ற ஆர்.எஸ்.எஸும், பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் ஒரே ஆண்டில் 1925-ஆம் ஆண்டில் துவங்கப் பெற்றவைதான். இது நூறாண்டுகால கொள்கை முரண். இந்திய அரசியலின் அடிப்படை முரண்.
முதல்வர் ஸ்டாலின் தலைமைப் பொறுப்பேற்றவுடன் தன் திராவிட இயக்க கொள்கைப் பற்றினை, சமரசமற்ற இந்துத்துவ எதிர்ப்பினை ஐயத்திற்கு அப்பால் முழங்கினார். இன்று பீகார் மாநிலத்திற்குச் சென்று அங்கே வோட்டுத் திருட்டிற்கு எதிராக பெருந்திரள் மக்கள் பேரணியை நட த்திக் கொண்டிருக்கும் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு மூத்த சகோதரராக தன் ஆதரவை பலத்த உற்சாக ஆரவாரத்திற்கிடையே வழங்கிவிட்டு வந்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் அனைத்து பிற்போக்கு நடவடிக்கைகளுக்கும் கடும் எதிர்ப்பை தி.மு.க வெளிப்படுத்தி வந்திருக்கிறது. மக்கள் மன்றத்திலும், சட்ட மன்றம், நாடாளுமன்றத்திலும், நீதிமன்றத்திலும் அயராது போராட்டங்களை முன்னெத்து வருகிறது. பொருளாதாரத்தில் நலிவுற்றோர் இட ஒதுக்கீடு, காஷ்மீர் மாநில தகுதி நீக்க சட்டம், குடியுரிமை சீர்திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்கள் என பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை முழுமையாக எதிர்த்து நின்று வந்துள்ளார். இந்தியாவிலேயே அனைத்து அம்சங்களிலும் இத்தகைய சமரசமற்ற முழுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவது தி.மு.க-தான் என்று துணிந்து கூறலாம்.
காஷ்மீர் மாநிலத் தகுதி நீக்கப்பட்டு, அந்த மாநில கட்சிகளின் தலைவர்கள் கைது செய்யப்பட்ட போது, தலைநகர் டில்லியில் தி.மு.க-தான் சர்வகட்சி கூட்ட த்தை முன் நின்று நடத்தியது; நடத்தச் செய்தார் ஸ்டாலின். மாநில உரிமைகள் பாதிக்கப்பட்டால் அது எந்த மாநிலமாக இருந்தாலும் எதிர்த்து களமாடுவதில் தி.மு.க முன் நிற்கும் என்பதை இந்த நிகழ்வு காட்டியது.
அதே சமயம், தி.மு.க மத அடையாள அரசியலுக்கு, இந்து பெரும்பான்மைவாத பாசிசத்திற்குத்தான் எதிரியே தவிர, இறை நம்பிக்கையாளர்களுக்கு எதிரி அல்ல என்பதையும் கோட்பாட்டுத் தெளிவுடன் வெளிப்படுத்தி வருகிறார். இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவை சுதந்திரமாக செயல்பட அனுமதித்து திருக்கோயில் நிர்வாகங்களை பெரிதும் சீர்படுத்தி, ஆன்மீக நெறிகளுக்கு உரமளித்து வருகிறார். கோயில் நிலங்கள் மீட்கப்படுகின்றன; பழைய கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு குடமுழுக்கு நட த்தப்படுகின்றது. ஆன்மீக மாநாடுகள் நட த்தப் படுகின்றன. இது பொறுக்காத இந்துத்துவ சக்திகள் கோயில்களை அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலிருந்து மீட்போம் என பிற்போக்கு முழக்கமிடுகின்றன. அ.இ.அ.தி.மு.க கண்மூடித்தனமான தி.மு.க எதிர்ப்பில் அவர்களுடன் கைகோர்த்து நிற்கின்றது.

தேர்தல் வெற்றிகள்
மக்களாட்சியில் ஒரு அரசியல் கட்சித் தலைவரின் முக்கிய தகுதி கட்சியை தேர்தல்களில் வெற்றி பெற வைப்பது.
அவர் தலைமையில் தி.மு.க கூட்டணி பங்கேற்ற முதல் நாடாளுமன்றத் தேர்தலில், 2019 தேர்தலில், ஆளுகின்ற அ.இ.அ.தி.மு.க, பாஜக கூட்டணியை 39 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். அந்த தேர்தலிலேயே, காங்கிரஸ் கட்சியே அதைச் செய்யாதபோதும் இந்தியாவின் விடிவெள்ளி ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்தார்.
அதற்கு அடுத்து நடந்த சட்டமன்ற தேர்தலில் ஒன்றிய அரசில் ஆட்சி செய்யும் பாஜக-வும், தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த அ.இ.அ.தி.மு.க-வும் இணைந்து போட்டியிட்டன. அதிகார பலம், பணபலத்துடன் போட்டியிட்ட அந்த கூட்டணியை எதிர்த்து ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற, தி.மு.க 133 தொகுதிகளுடன் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்தது.
பிறகு நிகழ்ந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்டாலின் பாஜக அரசிற்கு எதிராக காங்கிரஸ் மற்றும் பல்வேறு மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார். தமிழ்நாட்டில் அந்த கூட்டணியின் 40/40 என்ற அபார வெற்றிக்கு வகை செய்தார். பாஜக ஒன்றிய அரசாங்கத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத நிலையை இந்தியா கூட்டணி உருவாக்கியது. அந்த தேர்தலில் பாஜக-வின் வெற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகளில் தேர்தல் முறைகேடுகள் செய்வதன் மூலம் சாத்தியமானது என்ற குற்றச்சாட்டை வலுவான சான்றாதாரங்களுடன் ராகுல் காந்தி எழுப்பியுள்ளார்.
சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல்களைத் தவிர இடையிடையே நடைபெற்ற பல்வேறு உள்ளூராட்சி தேர்தல்களிலும் தி.மு.க வேட்பாளர்கள், தி.மு.க ஆதரவு பெற்ற வேட்பாளர்களே பெருவெற்றி பெற்றுள்ளார்கள். இப்படி அனைத்து மட்டங்களிலும் கட்சிக்கு வெற்றிகளை ஈட்டித் தரும் தலைவரக இந்த எட்டாண்டுகளில் ஸ்டாலின் நிலைபெற்றுள்ளார்.
இந்த தேர்தல் வெற்றிகளெல்லாம் தானாக நடந்தவையல்ல. தலைவர் ஸ்டாலின் அயராத பிரச்சாரத்தால் உருவானவை. தமிழ்நாடெங்கும் பம்பரமாக சுழன்று அவர் பிரசாரம் செய்யும் பாங்கு வியக்கத்தக்கது. அநாவசியமாக நீண்ட நேரம் பேச மாட்டார். அதே சமயம் நறுக்குத் தெரித்தாற்போல அழுத்தம் திருத்தமாக பேசுவார். தன் செய்தியை மக்களிடம் சுருக்கமாகவும், வலிமையாகவும் கொண்டு சேர்ப்பார். பொதுக்கூட்டங்களில் பேசுவது, வாகன ங்களிலிருந்து பேசுவது ஆகியவை தவிர அவர் மக்களுடன் காலை வேலைகளில் பொது இடங்களில் கலந்து சென்று பேசும் காட்சிகள் மிகச் சிறப்பானவை. எளிமையானவராகவும், அதே நேரம் தன்னம்பிக்கையூட்டும் தலைவராகவும் அவர் அந்த த் தருணங்களில் வெளிப்படுவார். எதிலுமே செயற்கை பூச்சு இருக்காது. இயல்பான, இன்முகத்துடன் கூடிய அவரது ஆளுமை மக்களை எளிதில் கவர்ந்துவிடுவதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை என்றே தோன்றும். ஓயாது பிரச்சாரம் செய்தாலும், செய்தியாளர்கள் கேள்விகளால் துளைத்தாலும், அவர் எந்த இட த்திலும் பொறுமை இழப்பதில்லை என்பது மிகச்சிறந்த தலைமைப் பண்பு என்று கூறவேண்டும்.
அதற்கு அடுத்தபடி பலரும் வியக்கும் பண்பு கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பது. இந்த எட்டாண்டுகளிலும் அவர் கூட்டணி கட்சிகளுடன் சிறந்த நல்லுறவைப் பேணி வருவது சாதாரணமான சாதனையல்ல. எத்தனையோ முரண்கள் உருவானாலும், கூட்டணியை பிளக்க ஆயிரம் சதிகள் நடந்தாலும், தன்னுடைய முதிர்ச்சியான, தெளிவான அணுகுமுறையால் கூட்டணி கட்சிகளை முழு மனதுடன் தன்னுடன் இயங்க வைப்பதில் வெற்றி பெறுகிறார். பெரும்பாலான தொலைக்காட்சி விவாதங்களில் தி.மு.க அரசின் சிறப்பம்சங்களை கூட்டணி கட்சியினரே சிறப்பாக முன்வைப்பதைப் பார்க்க முடியும். மாற்றுத் தரப்பினர் எவ்வளவு சீண்டினாலும், தளரா கொள்கை உறுதியுடன் அவர்கள் கூட்டணியை ஆதரித்து நிற்பதைக் காணும்போது வியக்காமல் இருக்க முடியாது. பாஜக எதிர்ப்பு என்ற நிர்ப்பந்தம் மட்டுமல்ல; சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற நேர்மறையான கோட்பாடுகளுக்கு ஆட்சியில் தன் செயல்பாடுகள் மூலம் கூட்டணியை உறுதிப் படுத்தியுள்ளார் ஸ்டாலின் எனலாம். அடுத்த ஆண்டு, தன் தலைமையின் எட்டாமாண்டை நிறைவு செய்யும்போது அவர் தமிழ்நாட்டு முதல்வராக இரண்டாவது முறை பொறுப்பேற்றிருப்பார் என்று உறுதிபடக் கூறலாம்.

தீர்க்கமான சிந்தனை, உறுதியான முடிவுகள்
கொள்கைப் பற்று இருக்கலாம், கோட்பாட்டுத் தெளிவு இருக்கலாம். தேர்தல்களில் பிரசாரம் செய்து வெல்லலாம். ஆனால் ஆட்சியில் அமரும்போது அவையெல்லாம் செயல்வடிவம் பெற்றால்தான் தலைமையின் சிறப்புத் துலங்கும். நாலாண்டு ஆட்சியில், அனைத்து நெருக்கடிகளுக்கும் மத்தியில், பல வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்புகளை செய்துள்ளார் ஸ்டாலின்.
முதலில் அமைச்சரவை மற்றும் ஆட்சி இயந்திரத்தை வடிவமைப்பதிலேயே அவர் தனி முத்திரை பதித்தார். ஒவ்வொரு துறைக்கும் தக்க அமைச்சர்களையும், இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளையும் அடையாளப்படுத்தினார். பல்வேறு துணை அமைப்புகளுக்கு, குழுக்களுக்கு தகுதியானவர்களை நியமித்தார். உதாரணமாக மாநில திட்டக்குழுவிற்கு துணைத்தலைவராக தமிழ்நாட்டு பொருளாதார வளர்ச்சியின் வரலாற்றில் நெடிய ஆய்வு அனுபவமுள்ள பொருளாதார வல்லுனர் ஜெயரஞ்சனை நியமித்தார். அது மட்டுமன்றி முதலமைச்சரின் பொருளாதார ஆலோசனைக் குழு என்று ஒன்றை உருவாக்கினார். அதில் நோபல் பரிசு பெற்ற அறிஞர் எஸ்தர் டஃப்லோ, ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுனர் ரகுராம் ராஜன், வளர்ச்சிப் பொருளாதார வல்லுனர் ஜீன் டிரெஸ், பொருளாதார அறிஞர் அரவிந்த் சுப்ரமணியன், முன்னாள் ஒன்றிய நிதித்துறைச் செயலாளர் எஸ்.நாராயணன் ஆகியோரை நியமித்தார். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர் எந்த அளவு முன்னுரிமை தருகிறார் என்பதை அடிக்கோடிட்டு காட்டுபவைதான் இது போன்ற நியமனங்கள் எனலாம். அடித்தட்டு மக்களுக்கும், முதிர்ச்சியற்ற இளைஞர்களுக்கும் இது போன்ற முயற்சிகளின் முக்கியத்துவம் புரியாமல் போகலாம். ஆனால் அவர்கள் நலனில் அக்கறை கொண்ட அரசு இவற்றை செய்யத்தான் வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற மகளிர் விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை போன்ற பிரம்மாண்டமான நலத் திட்டங்களை செயல்படுத்தினார். அவற்றையும் தாண்டி, வாக்குறுதியிலேயே இடம்பெறாத பள்ளிச் சிறுவர்களுக்கான காலை உணவுத் திட்டத்தை செயல்படுத்தி நாட்டையே வியப்பிலாழ்த்தினார். தீர்க்கமான சிந்தனை, விரிவான ஆலோசனை, முடிவெடுக்கும் மனத்தின்மை ஆகியவை இல்லாமல் இது போன்ற பெரும் மாற்றங்களுக்கான வீச்சைக் கொண்ட திட்டங்களை செயல்படுத்த முடியாது. இது மட்டுமன்றி “நான் முதல்வன்” போன்ற வித்தியாசமான திட்டங்களால் ஏராளமான மாணவர்கள், இளைஞர்கள் வாழ்வில் வானவில் பூக்கச் செய்துள்ளார். கவர்ச்சி அரசியலால், வாய்ஜாலத்தால் வாக்குகளைப் பெறாமல், வாக்காளர் வாழ்விலே மறுமலர்ச்சி ஏற்படுத்தி வாக்குகளைப் பெறும் தலைவராக விளங்குகிறார்.

எதிர்ப்பினை சந்திக்கும் திட சித்தம், வைராக்கியம்
உழைப்பும், நிர்வாகத் திறனும் கொண்டு ஆட்சியை சிறப்பிக்கச் செய்தால் மட்டும் போதாது. பல்வேறு உருவங்களிலும் திரண்டு வரும் எதிர்ப்பினை சந்திக்கும் திட சித்தமும் வேண்டும். இந்தியாவின் மேலாதிக்க சக்திகளான பார்ப்பன-பனியா கூட்டணி எதிர்த்துக் களமாட முற்பட்ட தி.மு.க வரலாற்றில் எதிர்ப்புக்கு பஞ்சமில்லை. இருந்தாலும், கடந்த நான்காண்டு தி.மு.க ஆட்சி சந்தித்தது போன்ற எதிர்ப்பை ஒன்றிய அரசிடமிருந்தும், அதன் முகவராக இயங்கும் ஆளுனரிடம் இருந்தும் இதற்கு முன் ஆண்ட எந்த அரசும் எதிர்கொண்டதில்லை எனலாம். உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் விளைந்த தடை இல்லாவிட்டால் ஆட்சியை என்றோ 356 சட்ட விதியின் கீழ் நீக்கியிருப்பார்கள். அதற்கு பதிலாக எத்தனை இடையூறுகளை, வஞ்சனைகளை செய்ய முடியுமோ அனைத்தையும் செய்து வருகிறார்கள்.
பேரிடர்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க மறுத்தல், திட்ட செலவுகளுக்கு நிதியை பகிர்ந்தளிப்பதில் ஓரவஞ்சனை, கல்விக்கான நிதியை முடக்குதல் என எல்லாவகைகளிலும் மாநில அரசை முடக்க நினைக்கிறது ஒன்றிய அரசு. அமலாக்கத் துறைக்கு வழங்கப்பட்டுள்ள தனி அதிகாரங்களைப் பயன்படுத்தி அமைச்சர்கள் மீது ரெய்டு, பிணையில்லாமல் கைது என பல எதேச்சதிகார நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.
எந்த நிலையிலும் முதல்வர் ஸ்டாலின் கலங்குவதில்லை, பின்வாங்குவதில்லை. சட்டமன்றத்தில் ஆளுனரே முறை தவறி செயல்பட்டாலும், ஆளுனர்தான் வெளி நடப்பு செய்ய வேண்டி வருகிறதே தவிர முதல்வர் மாநில உரிமைகளை சிறிதும் விட்டுக் கொடுப்பதில்லை. எத்தனை சட்டங்களுக்கு ஆளுனர் முட்டுக் கட்டை போட்டாலும் உச்சநீதிமன்றத்தை நாடி தடைகளை தகர்க்கிறாரே தவிர, தாஜா செய்து காரியம் சாதிக்க நினைப்பதில்லை. ஆளுனரை மாற்றச் சொல்லி முறையிடாமல், இந்த ஆளுனரே தொடரட்டும்; அப்போதுதான் எங்கள் மன உறுதி துலங்கும், மாநில உரிமைக்கான வேட்கை பெருகுமெனக் கூறி தன் அரசை பீடுநடை போடச் செய்கிறார்.
இந்தியக் குடியரசு முழுமையான கூட்டாட்சியாக மலர்ந்து, மாநில சுயாட்சித் தத்துவம் குடியரசு முழுவதும் கோலோச்சும் காலத்தில் எழுதப்படும் வரலாற்றில் இரண்டு பெயர்கள் அவசியம் இடம்பெறும். ஒன்று, முத்துவேல் கருணாநிதி, இரண்டு, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com W