மொழி, பண்பாடு, தன்னுணர்வு: திராவிட அரசியலின் தனித்துவம்!

Published On:

| By Minnambalam Desk

ராஜன் குறை Cultural uniqueness of Dravidian politics

நவீன தரப்படுத்தப்பட்ட மொழிகளில் ஒரு மொழி மற்றொரு மொழியிலிருந்து தோன்றியதாகச் சொன்னால் அந்த மொழி பேசும் மக்கள் தொகுதிக்கு ஏற்புடையதாக இருக்காது. எந்த உள் நோக்கமும் இல்லாமல் கூறினாலும் கூட அப்படிக் கூறுவது தேவையற்றது. ஏனெனில் இது போல ஒரு மொழியிலிருந்து மற்றொரு மொழி தோன்றியதான எண்ணங்களை சமகால மொழியியல் ஆய்வுகள் ஆதரிப்பதில்லை. 

திராவிடப் பண்பாட்டின் சிறந்த வெளிப்பாடு தமிழ் மொழி. திராவிட மொழிக் குடும்பத்தின் பிற மொழிகளும் அதன் வெளிப்பாடுகளே. ஒரு மொழிக் குடும்பத்தின் தரப்படுத்தப்பட்ட (standardized) மொழிகள் அனைத்தும் ஒரு காலத்தில் ஆதி வடிவில் பேச்சு மொழிகளாக (vernacular) பன்மையடைந்து பின்னர் பல்வேறு பகுதிகளில் தரப்படுத்தப் படுபவைதான். எனவே எல்லா தரப்படுத்தப்பட்ட மொழிகளும் உடன்பிறப்புகள் என்று அறியப்படுவதே சரியானது. ஆதி வடிவத்தில் பன்மையுற்ற பேச்சு மொழிகள் இலக்கிய, இலக்கண உருவாக்கத்தில் தரப்படுத்தப்படுவதும், எழுத்துகள் உருவாவதும் முன்னே பின்னே நடக்கலாம். அவை ஆதி வடிவில் ஒரே மூலத்திலிருந்து கிளைத்ததால் நிறைய வேர்ச்சொற்களை பகிர்ந்து கொள்கின்றன. இதன் பொருள் ஒரு தரப்படுத்தப்பட்ட மொழியிலிருந்து திரிபுற்று பிற மொழிகள் தோன்றின என்பதல்ல. 

முதன்முதலில் ‘திராவிடச் சான்று’ குறித்து 1816-ஆம் ஆண்டு கட்டுரை எழுதிய பிரான்சிஸ் வைட் எல்லிஸ் தெலுங்கு மொழி இலக்கண நூலுக்கு முன்னுரையாகத்தான் அதனை எழுதினார் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். தென்னிந்தியாவின் நான்கு முக்கியமான தரப்படுத்தப்பட்ட மொழிகள் மட்டுமன்றி, துளு உள்ளிட்ட பல பேச்சு மொழிகளும் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவைதான். இவையெல்லாம் ஒரு பண்பாட்டுப் பரப்பின் வெளிப்பாடுகள் என்றே கொள்ளப்பட வேண்டும். அந்த பண்பாட்டை திராவிடப் பண்பாடு என்று அழைக்கிறோம். Cultural uniqueness of Dravidian politics

ஆரிய மொழிக் குடும்பம் Cultural uniqueness of Dravidian politics

மத்திய ஆசியாவிலிருந்து இந்தியாவிற்குள் வந்த மேய்ச்சல் குழுக்கள் வரும்போதே சமஸ்கிருத மொழியை பேசிக்கொண்டு வந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் இந்தியாவிற்கு வெளியே சமஸ்கிருத மொழி பயிலப்படவில்லை. பாரசீகத்தில் அவெஸ்தா என்ற மொழி வடிவம் இருந்ததாகச் சொல்கிறார்கள். இந்தியாவிற்கு வந்தவர்கள் ஏதோ ஒரு பேச்சு மொழியின் மூலவடிவை பயன்படுத்தியிருக்கலாம். வட இந்திய பகுதியில் புழங்கிய பேச்சு மொழிகளுடன் கலந்துதான் சமஸ்கிருதம் என்ற மொழி தரப்படுத்தப் பட்டிருக்க வேண்டும். அந்த பேச்சு மொழியின் பல்வேறு வடிவங்கள், பிராகிருதம் போன்றவை, தொடர்ந்து பன்மையுற்று புழங்கி வந்துள்ளன. இவற்றுடன் சமஸ்கிருதம் தொடர்ந்து ஊடாட்டம் கொண்டு வந்துள்ளது. ஆதியில் சமஸ்கிருத மொழியை பயின்று பயன்படுத்தியவர்களைத்தான் ஆரியர்கள் என்று அழைத்தனர் என்று ரொமிலா தாப்பர் உள்ளிட்ட பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். Cultural uniqueness of Dravidian politics

எந்த மொழிக் குடும்பத்திலும் மொழிகளின் தரப்படுத்துதல் என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் முடிவடைந்துவிடுவதில்லை. அவை தொடர்ந்து மாற்றங்களுக்கு உட்படுகின்றன. பல்வேறு மொழிகளிலிருந்து சொற்கள், வாக்கிய வடிவங்கள் கூட பெறப்படுகின்றன. வேதங்களில் பயன்படுத்தப்பட்ட சமஸ்கிருதம் வேறு; பிற்கால இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்ட சமஸ்கிருதம் வேறு. மனிதர்களிடையே இனக்கலப்பு ஏற்படுவதைப்போலவே மொழிக்கலப்பும் தொடர்ந்து நிகழத்தான் செய்யும் எனலாம். அதனால் சமகாலத்தில் எந்த மொழியும், இனமும் பிறவற்றுடன் கலக்காத தூய வடிவங்களாக ஆதி காலத்திலிருந்து நிலவியதாக கருதுவது மானுடவியல் சிந்தனைக்கு முரணானது. Cultural uniqueness of Dravidian politics

மொழியும், பண்பாடும் Cultural uniqueness of Dravidian politics

ஒரு மொழி தன்னைத் தரப்படுத்திக்கொண்ட பிறகு அதில் எழுதப்படும் நூல்களில் வெளிப்படும் பண்பாட்டுக் கூறுகள் அந்த மொழியை பேசுபவர்களின் வாழ்க்கையை தகவமைக்கின்றன. சமஸ்கிருத மொழி பேசிய ஆரியர்களைப் பொறுத்தவரை அவர்கள் வேத காலத்தில் மாமிசம் உண்பவர்களாக இருந்ததை வேதங்களை ஆராயும் ஆய்வாளர்கள் பலரும் கூறுகிறார்கள். Cultural uniqueness of Dravidian politics

ஆனால் சிரமண மதங்களான பெளத்தம், ஜைனம், அஜீவகம் ஆகியவை தோன்றி பரவலாகிய பிறகு, ஆரியர்கள் தங்களை வர்ண தர்மத்தின் மூலம் மறுதகவமைத்துக்கொண்ட போது பிராமணர்கள் என்ற “உயர்” வர்ணத்தினர் மாமிசத்தை விலக்கினர். அநேகமாக பொது ஆண்டு இரண்டாம் நூற்றாண்டிற்குப் பிறகுதான் இந்த வர்ண படிநிலை சமூகம் மனு ஸ்மிருதி போன்றவற்றின் மூலம் கட்டப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். தர்ம சாஸ்திரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் அனைத்தும் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு ஒரு புதிய சமூக வடிவமைப்பிற்கான கருத்தியல் வட இந்தியாவில் பொது ஆண்டு இரண்டாம், மூன்றாம் நூற்றாண்டில் நிலை நிறுத்தப்பட்டது எனலாம். Cultural uniqueness of Dravidian politics

தமிழ்நாடு வட இந்திய மன்னர்களின் ஆளுகைக்குள் வராவிட்டாலும், சிரமண மதங்களான பெளத்தம், ஜைனம், அஜீவகம் ஆகியவை மட்டுமின்றி பின்னர் பார்ப்பனர்களின் பண்பாட்டுக் கூறுகளும் தமிழில் தொடர்ந்து தடம் பதிக்கத்தான் செய்தன. தமிழ்நாட்டில் பேரரசு உருவாக்கங்கள் ஆறாம் நூற்றாண்டில் தொடங்கியபோது தமிழில் பார்ப்பன பண்பாட்டின் பல்வேறு கூறுகளும் ஊடுறுவி வலுப்பெற்றதாகவே தெரிகிறது.

சங்க இலக்கியங்கள் தோன்றிய காலத்திற்கும், பக்தி இலக்கியங்கள் தோன்றிய காலத்திற்கும் இடையே இந்த பண்பாட்டுக் கலப்பு அதிகரித்திருப்பதாகவே காண முடிகிறது. ஆனால் சமஸ்கிருதத்திற்கும், தமிழிற்கும் இடையிலும். ஆரிய பண்பாட்டிற்கும் தமிழ் பண்பாட்டிற்கும் இடையிலும் முரண்கள் தொடர்ந்து சமூக வாழ்வை, இலக்கிய வெளிப்பாடுகளைக் கட்டமைத்து வந்ததாகக் கருத இடமிருக்கிறது.

சைவ, வைணவ நூல்களிலும் பார்ப்பனர், பாரப்பனரல்லாதோர் முரண்கள் பதிவாகியுள்ளதைக் காணலாம். ஆழ்வார்கள், நாயன்மார்கள் எனப்படுபவர்கள் பார்ப்பனரல்லாதோர் சமூகத்திலிருந்து உருவானவர்கள். இவர்கள் உருவாக்கிய பக்தி இலக்கியத்திற்கும், சமஸ்கிருத புராணங்களுக்கும், வேதங்களுக்கும் இடையேயும் வேறுபாடுகள் நிலவி வந்துள்ளன. இறை வழிபாட்டில் தமிழை முன்னிறுத்துவதா, சமஸ்கிருதத்தை முன்னிறுத்தவதா என்ற கேள்வியும் தொடர்ந்து வந்துள்ளது. இதில் உடன்போக்கும், முரணும் கலந்து இயங்கியுள்ளன என்றும் கூறலாம்.

காலனீய கால சித்தரிப்புகள்

ஐரோப்பியர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்து சமஸ்கிருத மொழியைப் பயின்றபோது ஐரோப்பிய மொழிகளுக்கும், சமஸ்கிருதத்திற்கும் பல வேர்ச்சொற்கள் பொதுவாக இருப்பதைக் கண்டார்கள். இதனைத் தொடர்ந்து இந்தோ-ஐரோப்பிய மொழிக்குடும்பம் என்ற சிந்தனை உருவானது. மத்திய ஆசியாவில் வழங்கிய ஆதி வடிவ பேச்சு மொழி அங்கிருந்து ஐரோப்பாவிற்கு சென்றவர்களால் கிரேக்க, இலத்தீன் மொழிகளாக தரப்படுத்தப்பட, இந்தியாவிற்கு வந்தவர்களால் சமஸ்கிருதமாகத் தரப்படுத்தப் பட்டதாகக் கருதப்பட்டது. அத்துடன் இணைந்து ஆரியர்கள் இந்தியாவிற்கு வந்த பின்னரே பண்பாட்டுப் பரப்பு உருவானதாகவும், அனைத்து இந்திய மொழிகளும் சமஸ்கிருதத்திலிருந்து கிளைத்ததாகவும் கருதப்பட்டது.   

இந்த சிந்தனைக்கு மாற்றாகத்தான் நாம் மேலே கூறியபடி பிரான்சிஸ் வைட் எல்லீசாலும், பின்னர் கால்டுவெல்லாலும் திராவிட மொழிக் குடும்பம் என்பதன் தனித்துவம் குறித்த ஆதாரங்களும், ஆய்வுகளும் முன்வைக்கப் பட்டன. பின்னர் இருபதாம் நூற்றாண்டில் ஜான் மார்ஷல் ஹரப்பா நாகரீகம் குறித்த அகழாய்வுகளை அறிவித்தபோது ஆரியர்கள் வருகைக்கு முன்னமே சிந்துவெளிப் பகுதியில் வளர்ச்சியடைந்த பண்பாடு நிலவி வந்தது அறியப்பட்டது. ஆரியர்கள் வருகைக்கு முன்பே வளர்ச்சியடைந்த நகரப் பண்பாடு இருந்தது என்றால், திராவிடப் பண்பாடு என்பதும் தனித்துவமான தோற்றம் கொண்ட தாக இருந்திருக்கும் என்பது பெறப்பட்டது. இது தமிழின் தொன்மை குறித்த சிந்தனைகளை தோற்றுவித்தது.

Cultural uniqueness of Dravidian politics

ஆங்கிலேயர்களின் கீழைத்தேயவிய ஆய்வுக் கட்டுமானங்களே இருவிதமாக பிளவுபட்டன எனலாம். ஒன்று சமஸ்கிருத மையம் கொண்டதாகவும், மற்றொன்று திராவிட/தமிழ் தனித்துவம் குறித்ததாகவும் இருந்தது. இது தமிழ்நாட்டில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சு ஊடகங்கள், புத்தகங்கள் அச்சிடுவது பரவலடைந்தபோது பண்டைய தமிழ் நூல்கள் தேடியெடுத்து பதிக்கப்பட்டன. திருக்குறளும், சிலப்பதிகாரமும், சீவக சிந்தாமணியும், சங்க இலக்கியங்களும் அச்சிடப்பட்டு பரவலாயின. இது தமிழ் பண்பாட்டின் தனித்துவம், தொன்மை ஆகியவற்றைக் குறித்த பெருமிதத்தை உருவாக்கின. Cultural uniqueness of Dravidian politics

தமிழ் பொதுமன்ற முரண்பாடுகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டு, இருபதாம் நூற்றாண்டு தமிழ் பொதுமன்ற உருவாக்கத்தின் போது தமிழ் மறுமலர்ச்சியின் காரணமாக சமஸ்கிருதத்தின் பண்பாட்டு முதன்மைக்கும், தமிழின் பண்பாட்டு முதன்மைக்கும் இடையிலான முரண்கள் அதிகரித்தன. பார்ப்பனீய இந்து மதத்திற்கும், தமிழ் சைவத்திற்கும் இடையிலான முரண்களும் வெளிப்பட்டன. அயோத்தி தாசரின் தலித் பெளத்தம் உள்ளிட்ட வரலாற்று அடையாளங்களில் ஈடுபாடு தோன்றியது. பார்ப்பனர்களின் சமூக மேலாதிக்கத்திற்கு எதிரான பார்ப்பனரல்லாதோர் அணிசேர்க்கையும் துவங்கியது. குறிப்பாக பார்ப்பனர்கள் மற்ற அனைத்து பிரிவினரும் சூத்திரர்கள் என்று கூறியதும், வர்ண கலப்பை கடுமையாக எதிர்த்ததும், உயர்வு தாழ்வைப் பேணியதும் பார்ப்பனரல்லோதாரின் அணிசேர்க்கையை இன்றியமையாததாக மாற்றியது. 

இருபதாம் நூற்றாண்டின் முதலிருபது ஆண்டுகளின் இறுதியில் காலனீய ஆட்சிக்கு எதிராக வெகுமக்கள் தன்னுணர்வு பெறத் துவங்கியபோது, காங்கிரஸ் கட்சியும், காந்தியின் தலைமையும் மக்களை அணிசேர்க்கத் துவங்கியபோது அது வர்ண சமூகம் கற்பித்த சமூக விலக்கங்கள், ஏற்றத்தாழ்வுகள் ஆகியவற்றிற்கு எதிராகவும் பரிணமித்தது. வைக்கம் போராட்ட த்திற்குப் பிறகு, பெரியார் காங்கிரசிலிருந்து விலகி சுயமரியாதை இயக்கம் கண்டது, ஜாதீய சமூகத்திற்கு எதிரான குடியரசு விழுமியங்களைக் கோருவதாக அமைந்தது. Cultural uniqueness of Dravidian politics

வட இந்தியாவிலோ மக்கள் பேசிய இந்துஸ்தானி மொழியிலிருந்து உருது சொற்களை விலக்கி, சமஸ்கிருத சொற்களை அதிகரித்து தேவநாகரி எழுத்துக்களில் எழுதப்படும் இந்தி மொழி உருவானது. “இந்து, இந்தி, இந்தியா” என்ற ஒரு கருத்தியல் உருவானது. காந்தியும், காங்கிரஸ் தலைவர்களும் முஸ்லீம்களை விலக்க நினைக்காவிட்டாலும், இந்தியை இந்தியாவின் பொது மொழி ஆக்குவதற்கு விரும்பவே செய்தனர். தமிழ்நாட்டிலோ சமஸ்கிருத எதிர்ப்பு, பார்ப்பனர்  மேலாதிக்க எதிர்ப்பு, பார்ப்பனீய பண்பாட்டு எதிர்ப்பு ஆகியவை எல்லாம் இணைந்து உருவாகியிருந்ததால் இந்தி மொழிக்கு எதிரான தமிழுணர்வும், திராவிட பண்பாட்டு உணர்வும் இணைந்து திராவிட அரசியல் உருப்பெற்றது.

திராவிட அரசியலின் கூட்டாட்சிக் குடியரசு சிந்தனையும், தேசியவாத சிந்தனையும்

ஐரோப்பாவில் மொழியை அடிப்படையாக க் கொண்ட இத்தாலிய, ஜெர்மானிய தேசங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவாயின. மொழி, இனம், மதம் ஆகிய அடிப்படைகளில் கட்டப்பட்ட தேசங்கள், தேசியவாத சிந்தனைகள் பிற அடையாளங்களை விலக்குவதால் ஓயாத போர்களும், முரண்பாடுகளும் தோன்றின. ஏனெனில் எல்லா பகுதிகளிலும் மாற்று மொழி பேசுபவர்கள், மாற்று மத நம்பிக்கை கொண்டவர்கள், மாற்று இனம் அதாவது பண்பாட்டு அடையாளம் கொண்டவர்கள் கலந்துதான் இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பெரும்பான்மை அடையாளத்தின் பேரில் தேசியத்தை கட்டமைத்தால் அது சிறுபான்மையினருக்கு எதிராகவே முடியும். பாசிச ஒடுக்குமுறை தோன்றும். 

சமநீதி, சமூக நீதி அடிப்படையிலான குடியரசு அமைவதற்கு இத்தகைய பெரும்பான்மை தேசியவாத சிந்தனைகள் பெரும் இடையூறாகவே அமைந்தன. ஒருவர் தன் மொழியையோ, பண்பாட்டையோ, மதத்தையோ கொண்டாடக் கூடாது என்பதல்ல. அதனையே தேசிய சமூகத்தின் அடிப்படை ஆக்கும்போது பெரும்பான்மைவாத பாசிச மனோபாவம் தோன்றுகிறது. Cultural uniqueness of Dravidian politics

இந்த உலகளாவிய அரசியல் பின்னணியில்தான் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரும், அறிஞர் அண்ணாவும் தமிழ் மொழியுணர்வை மட்டுமே அடிப்படையாக க் கொண்டு ஒரு தேசியவாத த்தை உருவாக்குவதைத் தவிர்த்தார்கள். பார்ப்பனீயம் என்ற ஜாதீயத்தை மறுக்கும் திராவிட பண்பாட்டு அடையாளம், தமிழ் மொழியுணர்வு இரண்டையும் இணைத்தே அவர்கள் கூட்டாட்சிக் குடியரசு சிந்தனையை முன்மொழிந்தார்கள். திராவிட நாடு கோரிக்கை என்பது நான்கு திராவிட மொழி பேசுவர்களின் கூட்டாட்சிக் குடியரசுதான். அப்படி தனிக் குடியரசு உருவாகவில்லையென்றால், இந்திய கூட்டாட்சிக் குடியரசில் சுயாட்சி பெற்ற மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும் என்று நினைத்தார்கள். அதற்கு அடிப்ப டை ஜாதிப்படி நிலை நீங்கிய சமூக நீதி, சம நீதி சமூகத்தை உருவாக்கும் இலட்சியமே ஆகும். 

தமிழ்நாட்டு அரசியலைக் கவனித்தால் திராவிட அடையாளத்திற்கு எதிராக தமிழ் அடையாளத்தை நிறுத்துபவர்கள் மீண்டும், மீண்டும் இந்திய பெருந்தேசியத்தில் இணைவதைக் காணலாம். என்றைக்கு பார்ப்பனீய எதிர்ப்பின் கூர்மை மழுங்குகிறதோ, அன்றைக்கே இந்திய பெருந்தேசியம் அவர்களை விழுங்கி செய்துவிடும். பார்ப்பனீய சிந்தனை சமஸ்கிருத ஆரிய அடையாளத்தை முன்னிறுத்துவதற்கு மாற்றாக சமூக நீதிக்கான சிந்தனையை திராவிட-தமிழ் அடையாளமாக முன்னிறுத்தினால்தான் தமிழ்நாட்டின் சுயாட்சி அரசியலும், முன்னேற்றமும் சாத்தியமாகும். அதனால்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்தார். 

சுருக்கமாகச் சொன்னால் பார்ப்பனீய, இந்துத்துவ எதிர்ப்பினைக் கொண்ட சமூக நீதி, சுயமரியாதைச் சிந்தனையே வரலாற்றுத் தன்னுணர்வின் உள்ளடக்க வடிவம்; அதன் வெளிப்பாட்டு வடிவமே தமிழ்மொழியை சிறப்பித்தல். சமூக நீதி உள்ளடக்கம் நீக்கிய தமிழ் மொழி அரசியல் என்பது அடிப்படைவாத, அடையாளவாத குறுநோக்கு அரசியலுக்கே இட்டுச் செல்லும் என்பதே உலக வரலாறு காட்டும் உண்மை. 

இதனை நாம் புரிந்துக்கொள்ள மிக முக்கியமான திசைகாட்டியாக உள்ளது தமிழ்த்தாய் வாழ்த்தினை அறிவித்தபோது கலைஞர் நீக்கிய சில வரிகளே. சுந்தரனார் “கன்னடமும், களி தெலுங்கும், கவின் மலையாளமும்” தமிழ் மொழியின் உதிரத்தே உதித்தெழுந்து ஒன்றுபலவானதாகவும், அப்படி ஆன பிறகும் தமிழ் ஆரியம் போல உலக வழக்கு இல்லாமல் போகவில்லை என்றும் கூறித்தான் தமிழ்த்தாயின் சீரளமைத் திறத்தை வாழ்த்துகிறார். கலைஞர் நாம் தமிழைப் போற்றுமிடத்து பிற மொழிகளைக் குறிப்பிடுவது அவசியமில்லை என்று அந்த வரிகளை நீக்கினார். Cultural uniqueness of Dravidian politics

சுந்தரனார் எழுதியபோது தரப்படுத்தப்பட்ட மொழியிலிருந்து பிற மொழிகள் உருவானதாகக் கருதும் போக்கு இருந்திருக்கலாம். ஆனால் நாம் கட்டுரையின் துவக்கத்தில் கண்டபடி சமகால மொழியியல் அப்படி கருதுவதில்லை. தமிழும் சரி, ஆரியம் எனப்படும் சமஸ்கிருதமும் சரி பிறமொழிகளுக்கும் மூலவடிவமாக இருந்து பன்மையுற்று பேச்சுமொழிகளின் தரப்படுத்தப்பட்ட வடிவங்களே. மற்ற மொழிகள் வேறுவகையான தரப்படுத்துதல்கள் என்றே இன்றைக்குப் புரிந்துகொள்ளப்படுகிறது.  

திராவிட இயக்கத்தின் நாயகர்களான பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோர் கூட்டாட்சிக் குடியரசை வலியுறுத்தி நின்றதே, ‘மாநில சுயாட்சி, ஒன்றிய கூட்டாட்சி’ என்று வகுத்ததே திராவிட அரசியலின் தனித்துவம் என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். தமிழ் மொழியுணர்வு நம் சுயாட்சிக்குத்தானே தவிர, அது கூட்டாட்சியின் சகோதரத்துவத்தை குலைக்கும்படி செய்யக்கூடாது. எல்லா மொழிகளின் வேர்களும் பெரும்பரப்பான மானுடப் பண்பாட்டு விளைநிலத்தின் அடியில்தான் உள்ளன. அதனால் ஒட்டுமொத்த மானுட விடுதலையே நம் இலக்காக இருக்க வேண்டும். ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ என்றதுதானே செம்மொழியான தமிழ் மொழி. Cultural uniqueness of Dravidian politics

கட்டுரையாளர் குறிப்பு:  

Cultural uniqueness of Dravidian politics by Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share