ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றுவரும் 2024 செஸ் ஒலிம்பியாட் தொடரில், ஓபன் மற்றும் மகளிர் என 2 பிரிவுகளிலும் இந்திய அணி தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வருகிறது.
11 சுற்றுகளாக நடைபெறவுள்ள இந்த தொடர் செப்டம்பர் 11 அன்று துவங்கியது. செப்டம்பர் 23 வரை இந்த தொடர் நடைபெறவுள்ள நிலையில், நேற்று (செப்டம்பர் 14) 4வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன.
இதில், இந்தியா ஓபன் பிரிவில் செர்பியா அணியை எதிர்கொண்டது. மகளிர் பிரிவில் பிரான்ஸ் அணியுடன் மோதியது.
ஓபன் பிரிவில், இந்தியாவுக்காக டி குகேஷ், பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி ஆகியோர் களமிறங்கினர்.
முதல் 3 சுற்றுகளை போலவே, இந்த சுற்றிலும் இந்தியா தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. டி குகேஷ், அர்ஜுன் எரிகைசி, விதித் குஜ்ராத்தி ஆகியோர் தங்கள் போட்டிகளில் வெற்றி பெற்றனர். பிரக்ஞானந்தாவின் ஆட்டம் மட்டும் சமனில் முடிந்தது.
இதன்மூலம், 3.5-05 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் 4வது சுற்றிலும் இந்தியா வெற்றி வாகை சூட்டியுள்ளது.
4வது சுற்றின் முடிவில், இந்தியாவுடன் ஸ்பெயின், சீனா, வியட்நாம், அஜர்பைஜான், போலந்து, ஹங்கேரி, உக்ரைன் என 8 அணிகள் 8 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆனால், டை-பிரேக்கர் புள்ளிகள் அடிப்படையில், 69 புள்ளிகள் பெற்றுள்ள இந்தியா, ஓபன் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது. 57 புள்ளிகளுடன் ஸ்பெயின் 2வது இடத்திலும் 54 புள்ளிகளுடன் சீனா 3வது இடத்திலும் உள்ளது.
அதேபோலவே, மகளிர் பிரிவிலும் இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பிரான்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், இந்தியாவுக்காக ஹரிகா துரோனவல்லி, வைஷாலி, திவ்யா தேஷ்முக், தானியா சச்தேவ் ஆகியோர் இந்த ஆட்டத்தில் களமிறங்கினர்.
இவர்களில், ஹரிகா துரோனவல்லி, திவ்யா தேஷ்முக், தானியா சச்தேவ் ஆகியோர் தங்கள் போட்டிகளில் அசத்தல் வெற்றி பெற்றனர். வைஷாலியின் ஆட்டம் மட்டும் சமனில் முடிந்தது.
இதன்மூலம், 3.5-0.5 என 4வது சுற்றிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
மகளிர் பிரிவில், இந்தியாவுடன் சீனா, அமெரிக்கா, ஆர்மீனியா, கஜகஸ்தான், உஸ்பேகிஸ்தான், மங்கோலியா என 7 நாடுகள் 8 புள்ளிகள் பெற்றுள்ளன. டை-பிரேக்கர் புள்ளிகள் அடிப்படையில், 60 புள்ளிகளுடன் இந்தியா 2வது இடத்தில் உள்ளது. 65 புள்ளிகளுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா 3வது இடம் பிடித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
– மகிழ்
ஷாருக்கானை மிஞ்சிய விஜய்… ‘தளபதி 69’க்கு இவ்வளவு கோடி சம்பளமா?