மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 116வது பிறந்தநாள் இன்று (செப்டம்பர் 15) மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதே போன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும் கட்சி நிர்வாகிகளுடன் சென்று அண்ணாவின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
அதே போன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகமான தாயகத்தில், அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழ்நாடு தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர்!
இந்த நிலையில் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “75 ஆண்டுகளாக திராவிட முன்னேற்றக் கழகம் இந்தச் சமூகத்தில் மாற்றங்கள் பல ஏற்படுத்தி, தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் நம் பேரறிஞர் அண்ணா!
தலைவர் கலைஞர் தன் இறுதி மூச்சிலும் “அண்ணா… அண்ணா…” என்றே பேசினார்; எழுதினார். அத்தகைய உணர்வுப்பூர்வமான தம்பிமார்களைப் பெற்ற ஒப்பற்ற பெருமகன்! ஒரு இனத்தின் அரசாகச் செயல்பட நம்மை ஆளாக்கிய பேரறிஞர் பெருந்தகை அண்ணாவைப் போற்றி வணங்குகிறேன்!” என தெரிவித்துள்ளார்.
அரசியல் பேராசான் அண்ணா!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்து செய்தியில், “இந்திய நாட்டின் மாநில அரசியல் களங்களில் இன்றுவரை தமிழ்நாடு தனித்துவமாகத் திகழக் காரணம் நம் யுகத்திற்கான அரசியல் பாதையை வகுத்துத் தந்த அரசியல் பேராசான் அண்ணா தான் என்றால் மிகையாகாது.
“தமிழ்நாடு” என்ற பெருமிதத்தோடு சொல்லும் போதெல்லாம் நம் நினைவில் வரும் திராவிட இயக்கத்தின் கொள்கை தீபம் பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் பிறந்தநாளில், சமத்துவ சமுதாயம் காண அண்ணா வழியில் அஇஅதிமுக என ஓயாது உழைக்க உறுதியேற்போம். அண்ணா நாமம் வாழ்க” என தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கம்!
திமுக துணை பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ‘அண்ணா’ வெறும் பெயரல்ல. அவர் ஒரு வரலாற்றின் பெருங்குரல் – பண்பாட்டின் குறியீடு – உரிமைப்போரின் முன்னோடி – தமிழ்நாட்டின் அடையாளம் – திராவிட மாடலின் தொடக்கம்.
சமூகநீதி – சுயமரியாதை – மாநில உரிமையைக் கொள்கை முழக்கமாய் கொண்டு தமிழ்நாட்டின் தடம் மாற்றியவர். திராவிட இயக்கத்தின் கலங்கரை விளக்கமாய் என்றென்றும் வழிகாட்டும் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் அவர் வழி நடந்து உரிமைப்போரை வென்றெடுப்போம்.” என தெரிவித்துள்ளோம்.
தமிழ்நாட்டின் காவல் அரண்!
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில், “திராவிடப் பேரினத்தின் அறிவுப்புதையல் பேரறிஞர் அண்ணாவின் 116 ஆவது பிறந்தநாள் இன்று. தி.மு.கழகத்தைத் தொடங்கி, பண்ணைகள் – மிராசுகளின் மாளிகையில் தேங்கிக்கிடந்த அரசியலை எளிய மக்களின் கரங்களுக்குக் கொண்டு சேர்த்த தமிழ்நாட்டின் காவல் அரண்.
தாய்நிலத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டி, சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட அங்கீகாரம் தந்து, ஆட்சி மொழித் தீர்மானம் – இருமொழிக் கொள்கை என மாநில உரிமை – மொழி உரிமை – சமூக நீதி தளத்தில் அண்ணா ஏற்படுத்திய தாக்கங்களும் – ஊக்கங்களுமே, இன்றைக்கு நம் உணர்வாகத் தொடர்கின்றன. திராவிட மாடலின் அடித்தளமாகவும் – அரிச்சுவடியாகவும் திகழும் அண்ணாவின் புகழ் போற்றுவோம்!” என தெரிவித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக!
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “பல முதல்வர்களோடு பழகியிருக்கிறேன்; பார்த்திருக்கிறேன். இந்த வகையில் என் மனதோரம் ஒரு குறை இருந்தது. பேரறிஞர் அண்ணாவை பார்த்ததும், அவரது வெள்ளம் போன்ற மேடை உரையை நேரடியாகக் கேட்டதும் இல்லை என்கிற குறை. அவருடனான என் தொடர்பெல்லாம் அவரின் எழுத்துக்களை வாசிப்பதன் மூலமாகத்தான் அமைந்தது.
இன்றைய அவரது பிறந்தநாளில் அவரை வாழ்த்தும் நேரத்தில் முன்பொரு நிகழ்ச்சியில் என் அக்கா சொன்ன இந்த இனிய சம்பவம் நினைவுக்கு வந்தது. பேரறிஞர் அண்ணா புகழ் ஓங்குக” என கமல் தெரிவித்துள்ளார்.
இதுபோன்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு தங்களது புகழஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
Asian Champions Trophy 2024: பாகிஸ்தானை வீழ்த்தி ‘இந்தியா’ கிளீன்-ஸ்வீப்!
பேரறிஞர் அண்ணா 116வது பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை!