சென்னை புறநகர் பகுதியின் வாழ்வாதாரமாக விளங்கும் கடற்கரை – செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக நூற்றுக்கணக்கான ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருவதற்கு, கனிமொழி கருணாநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ரயில்களையே நம்பியுள்ளனர். இந்நிலையில், சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ரூ.734.91 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக 10 மற்றும் 11ஆம் நடைமேடைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. வழக்கமாக 5 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்பட்ட மின்சார ரயில்கள், தற்போது 15 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படுகின்றன.
இதன் காரணமாக, சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் தினசரி இயக்கப்படும் 204 மின்சார ரயில்கள், எழும்பூர் ரயில் நிலையப் பணிகள் காரணமாக முதலில் 164 ஆகவும், தற்போது 115 ஆகவும் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து கனிமொழி எம்பி தனது ‘எக்ஸ்’ பதிவில், “நாள்தோறும் லட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தும் சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் கடந்த சில நாட்களாக பயணிகள் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு வருவதும், அதனால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருவதும் வேதனையளிக்கிறது.
ஏற்கனவே 40 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இன்றும் 49 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டிருப்பது அன்றாடம் பணிக்குச் செல்வோர் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வரை கடும் மனஅழுத்தத்துக்கு ஆளாக்கியுள்ளது. குறிப்பாக, வரும் வாரங்களில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடங்கவுள்ள நிலையில், தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படாமல் இப்பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்,” என தெரிவித்துள்ளார்.
