சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கி உள்ளது.

டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள பராசக்தி திரைப்படம், 1965-ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிராக பொள்ளாச்சியில் 250-க்கும் மேற்பட்டோர் ராணுவத்தால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட, ‘மறைக்கப்பட்ட வரலாற்றை’ பேசுகிறது பராசக்தி திரைப்படம்.

இத்திரைப்படம் மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனையடுத்து ஏற்கனவே திட்டமிட்டபடி நாளை ஜனவரி 10-ந் தேதி, பராசக்தி திரைப்படம் வெளியாகிறது.
1952 ஆம் ஆண்டு கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில், கலைஞரின் அதிகூர்மையான வசனங்களில், சிவாஜி கணேசன் நடிகராக அறிமுகமாகி, சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் பேசியது ‘பராசக்தி’ திரைப்படம். அன்றைய சமூகத்திலும் ஆளும் அரசிலும் பெரும் எதிர்ப்புகளையும், தடை கோரிக்கைகளையும் சந்தித்தது. எனினும் கலைஞரின் அனல் பறந்த வசனங்களுக்காகவும், சிவாஜியின் உணர்ச்சிமிக்க நடிப்புக்காகவும் பெரிதும் பாராட்டப்பட்டு, 175 நாட்களுக்கும் மேலாக திரையரங்குகளில் ஓடி, தமிழ்த் திரையுலகில் ஒரு புதிய பாணியை அமைத்தது. சிவாஜியின் நீதிமன்றக் காட்சி வசனங்கள், மதுரை போன்ற நகரங்களில் திரையரங்குகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் படிகளில் அமர்ந்து மக்கள் பார்த்தனர் என்கிறது வரலாறு.
அதே ‘பராசக்தி’ என்ற பெயரில், மீண்டும் ஒரு திரைப்படம் இன்று பல சிக்கல்களை சந்தித்து வெளிவருகிறது.
சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’, 1952 ஆம் ஆண்டு வெளியான ‘பராசக்தி’ போல, தமிழ்த் திரையுலகில் ஒரு மைல்கல்லாக அமையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
