ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு தலைமை நீதிபதி தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனநாயகன் படத்துக்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், சென்சார் சான்றிதழை வழங்கவில்லை. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் கேவிஎன் புரொடக்ஷன் நிறுவனம் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கில், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்குமாறு நீதிபதி ஆஷா தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த மனு தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் முன்பு இன்று (ஜனவரி 9) பிற்பகல் விசாரணைக்கு வந்தது.
அப்போது தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, CBFCக்கு எதிர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வாய்ப்பளிக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.
” ஜனவரி 5 ஆம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. 6 ஆம் தேதி நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தது. மறுஆய்வு செய்ய கூறிய கடிதத்தை சமர்ப்பிக்குமாறு எங்களிடம் கேட்கப்பட்டது. நாங்கள் அதை 7 ஆம் தேதி சமர்ப்பித்தோம். படத்துக்கு எதிரான புகார் மும்பை அலுவலகத்தில் இருந்து பெற்று சமர்பிக்கப்பட்டன. 7 ஆம் தேதி மதியம் வழக்கு விசாரிக்கப்பட்டு இன்று உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. நியாயமான அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதன்பின் பரிசீலித்திருக்க வேண்டும். படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோராத நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதாவது மறு ஆய்வுக்கு அனுப்பி 6/1 ல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவு பட தயாரிப்பு நிறுவனத்துக்கும் அனுப்பப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யவில்லை.”என்றும் குறிப்பிட்டார்.
இதை விசாரித்த தலைமை நீதிபதி, “சென்சார் போர்டு பதிலளிக்க அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.
பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகில் ரேத்தாகி ஆஜராகி, “தணிக்கை வாரியக் குழுவின் உறுப்பினரே எப்படிப் புகார் அளிக்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு தலைமை நீதிபதி, “இது வாரியத்துக்கு உரிய விஷயம்” என்று கூறினார்.
படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோராத நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் தணிக்கை சான்றிதழுக்காக பொறுமையாக காத்திருக்க வேண்டும். ஆனால் நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் தேதியை அறிவித்திவிட்டீர்கள் என்பதற்காக எல்லோரும் உங்கள் விருப்பப்படி செயல்பட முடியாது என்று தயாரிப்பு நிறுவனத்திடம் கூறினர்.
அப்போது மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் (KVN புரொடக்ஷன்ஸ் சார்பாக) தேர்வுக் குழுவின் முந்தைய உத்தரவை சுட்டிக்காட்டினார். அந்த உத்தரவில் மாற்றங்களுக்கு உட்பட்டு UA சான்றிதழ் வழங்கப்படும் என்று கூறியிருந்ததாக தெரிவித்தார்.
இதற்கு தலைமை நீதிபதி, எனினும் நீங்க்ள் காத்திருந்திருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்
இறுதியாக மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் வழங்கி உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
